இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட ராஜேஷ்தாஸுக்கு எப்படி சலுகை காட்ட முடியும்? - உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸூக்கு எப்படி சலுகை காட்ட முடியும் என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, இதுதொடர்பாக போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு பெண் எஸ்பி ஒருவருக்கு தனது காரில் வைத்து பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ்தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் கடந்த பிப்.12-ம் தேதி உறுதி செய்தது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ராஜேஷ்தாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது,

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.தண்டபானி முன்பாக நேற்று நடந்தது. அப்போது ராஜேஷ்தாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ‘‘காவல்துறையில் உயர் பதவி வகித்தமனுதாரர், ஒருவேளை மேல்முறையீட்டு வழக்கில் விடுதலை செய்யப்பட்டால் என்ன ஆவது? எனவே, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, ‘‘சாதாரண மனிதன் ஒரு குண்டூசியை திருடினால்கூட உடனடியாக கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்குப் பிறகுதான் அவருக்கு ஜாமீன் கிடைக்கிறது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட மனுதாரரான ராஜேஷ்தாஸூக்கு எப்படி சலுகை காட்ட முடியும்’’ என்றார்.

பி்ன்னர் இந்த வழக்கில் சரண் அடைந்துவிட்டு அதன்பிறகு ஜாமீன் கோரலாமே என கருத்து தெரிவித்த நீதிபதி, மனு மீதான காவல்துறையின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், ‘‘மனுதாரருக்கு எதிராகநிறைய ஆதாரங்கள் உள்ளன.எனவே, அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடாது. இந்த வழக்கில் பதிலளிக்க காலஅவகாசம் தேவை’’என்றார். அதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை நாளைக்கு (ஏப்.17) தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE