விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு நாளை விடுமுறை வழங்க வேண்டும்: அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிகள், விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு நாளை (ஏப்ரல் 17) விடுமுறை வழங்க வேண்டுமென நேரடி நியமனம் பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை விவரம்: 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்துதல் பணிகள் மாநிலம் முழுவதும் 88 மையங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ல் நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து, அனைத்து நிலை ஆசிரியர்களும் ஏப்ரல் 18, 19-ம் தேதிகளில் தேர்தல் பணிகளில் பங்கேற்க வேண்டும். அதற்கு தயாராக ஏதுவாக விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்கும், பள்ளிகளுக்கும் நாளை (ஏப்ரல் 17) விடுமுறை வழங்க வேண்டும்.

ஏனெனில், புதன்கிழமை மாலை வரை பள்ளிகள் மற்றும் மதிப்பீட்டு முகாம்களிலும் பணிபுரிந்துவிட்டு, அதன்பின் வீட்டுக்கு சென்று மறுநாள் வாக்குச்சாவடி முகாம்களுக்கு செல்வதற்கு தேவையான பொருட்களை அவசரகதியில் எடுத்து வைக்க வேண்டியசூழல் உள்ளது.

எனவே, பதற்றமான மனநிலையில் பணிக்கு ஆசிரியர்கள் செல்வதை தவிர்க்கும் விதமாக விடுமுறை வழங்க வேண்டும். இது தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE