சென்னை: “மத்திய சென்னை திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். இந்த தேர்தலைப் பொறுத்தவரை, ஜனநாயகத்துக்கும் பணநாயகத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல்” என்று சென்னையில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். புரசைவாக்கம் பகுதியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடுபவர், பணம் படைத்தவர். இந்த தேர்தலைப் பொறுத்தவரை, ஜனநாயகத்துக்கும் பணநாயகத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல். நமது வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுபவர் மிகப்பெரிய கோடீஸ்வரர். இந்தியாவில் விரல் விட்டு எண்ணப்படக்கூடிய கோடீஸ்வரர்களில் அவரும் ஒருவர்.
அவர்களிடம் பணமும், அதிகாரமும் இருக்கிறது. நம்முடைய கூட்டணி வேட்பாளர் எளிமையானவர், கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வருபவர். நமது வேட்பாளர் மக்களின் நன்மைக்காக போட்டியிடுபவர், ஆனால், திமுக வேட்பாளர் அவருடைய சொந்த நலனுக்காக தேர்தலில் போட்டியிடுகிறார். அவருடைய சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், மேலும், சொத்துக்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும் அவர் போட்டியிடுகிறார். எனவே, மக்களுக்கு சேவை செய்யும் வேட்பாளர் வேண்டுமா? அல்லது அவருடைய குடும்பத்துக்கு சொத்து சேர்க்கும் வேட்பாளர் வேண்டுமா? மக்களுக்கு சேவை செய்யும் வேட்பாளருக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.
திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை எண்ணி பாருங்கள். அவர்கள் மக்களையே பார்ப்பது இல்லை. தேர்தல் வந்தால்தான் மக்களைச் சந்திக்கின்றனர். சென்னையில் மிக்ஜாம் புயல் வந்தது. புயல் வந்தது காற்றின் தாக்கம் பெரிதாக இல்லை. சென்னை மாநகரம் தப்பித்துக்கொண்டது. இந்த ஆட்சியில், வர்தா போன்ற புயல் வந்திருந்தால், சென்னையே காணமல் போயிருக்கும். அந்தளவுக்கு மக்கள் துன்பம் அடைந்திருப்பர். சென்னையில் பெய்த ஒருநாள் மழைக்கே, முதல்வர் புலம்பி தீர்த்துவிட்டார். மற்றவர்கள் மீது பழி சுமத்தி முதல்வர் தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்.
நிர்வாகத் திறமையற்ற, பொம்மை முதல்வர் ஆட்சி செய்வதால்தான், தமிழக மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. திமுக ஆட்சியில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, இந்த மூன்றாண்டு காலத்தில், சென்னை மாநகரட்சிக்கு, அல்லது தமிழகத்துக்காக என்ன செய்திருக்கிறீர்கள். என்ன திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் அனைத்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும், அதிமுக அல்லது என்னைப் பற்றி விமர்சித்துப் பேசுவார். ஆனால், மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தோம், அதனால், மக்கள் இந்த நன்மைகளைப் பெற்றனர் என்ற விவரங்களை சொல்வதே கிடையாது. திமுகவின் இந்த ஆட்சிக் காலத்தில் மக்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம்.
இந்த ஆட்சியில், கடந்த 6 மாத காலத்தில் மட்டும் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.18 உயர்ந்துள்ளது. எண்ணெய், பருப்பு, சர்க்கரை விலை அதிகரித்துள்ளது. மளிகைப் பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துவிட்டது. இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக முதல்வருக்கு திறமையில்லை. இதனால் நகரப்பகுதிகளில் உள்ள ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அதிமுக ஆட்சியில், விலைவாசியைக் கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.
ஊழல் நடக்காத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. அனைத்து துறைகளிலுமே லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது. அதுபோன்ற நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சபரீசனும் உதயநிதி ஸ்டாலினும் ஊழல் மூலம் சம்பாதித்த 30,000 கோடி ரூபாயை என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாக பேசிய ஆடியோ வெளியானது.
அந்த ஆடியோவுக்கு இதுவரை முதல்வர் ஸ்டாலினிடமிருந்து மறுப்பே வரவில்லை. எனவே, ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததுதான் திமுகவின் சாதனை. இது ஒரு வருடத்துக்கு முன்பு வெளியான ஆடியோ மூலம் வெளியான தகவல். முதல்வர் ஸ்பெயினுக்கு சென்றது தொழில் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது தொழில் முதலீடு செய்யவா? என்ற மிகப்பெரிய சந்தேகம் மக்களுக்கு இருந்து வருகிறது. எனவே, முதல்வர் இப்போதாவது அதை விளக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago