“ஆட்சியில் இல்லாத காங்கிரஸை விமர்சிக்கும் மோடியிடம் பயம் தெரிகிறது” - கார்கே

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “பிரச்சாரத்துக்கு வரும் மோடி, தொடர்ந்து காங்கிரஸையும், ஆட்சியில் தற்போது இல்லாத காந்தி குடும்பத்தினரை விமர்சிக்கிறார். அது காங்கிரஸ் மீதான பயத்தை வெளிப்படுத்துகிறது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

புதுச்சேரிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: “இது முக்கியமானத் தேர்தல். ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் நமது உரிமைகளையும் காக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பில் நமக்கு தந்துள்ள உரிமைகளை நிலைநாட்ட இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. இந்திய மக்கள் இதை உணரத் தொடங்கியுள்ளனர். ஐடி, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் பலவீனப்படுத்தப்படுகின்றன.

பிரதமர் மோடி இந்த அமைப்புகளை தங்கள் தேவைக்கு பயன்படுத்துகிறார். அதை அமித் ஷா செயல்படுத்துகிறார். தங்களுக்கு எதிராக உள்ளோரை பயமுறுத்த இந்த அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மாநிலந்தோறும் சென்று, ஜனநாயகம், அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை காக்க மக்களிடம் கோருகிறோம். மோடி தனது அரசை பற்றி பேசாமல் தன்னை பற்றி மட்டுமே முன்னிறுத்துவதால் அவரை விமர்சிக்கிறோம். இது தனிமனித விமர்சனமாக பார்க்கக் கூடாது.

பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன. வேலைவாய்ப்பு, வெளிநாட்டு கள்ளப் பணம் மீட்பு உள்ளிட்டவை உதாரணங்கள். இதுவரை தந்த எந்த வாக்குறுதிகளையும் மோடி நிறைவேற்றவில்லை.

பிரச்சாரத்துக்கு வரும் மோடி, தொடர்ந்து காங்கிரஸையும், ஆட்சியில் தற்போது இல்லாத காந்தி குடும்பத்தினரை விமர்சிக்கிறார். அது காங்கிரஸ் மீதான பயத்தை வெளிப்படுத்துகிறது. காங்கிரஸை அழிக்கவே முயற்சிக்கிறார். அதனால், ஐ.டி தாக்கல் விவகாரம் கையில் எடுக்கப்பட்டது. சுமார் ரூ.14 லட்சம் கணக்கு தாக்கல் சரியாக இல்லை எனக் கூறி வழக்குத் தொடர்ந்து ரூ.125 கோடி அளவுக்கு விதிக்கப்பட்ட அபராதமே இதற்கு உதாரணம்.

தற்போதைய தேர்தலில் சிறந்த வகையில் செயல்படுகிறோம். தமிழகம், புதுச்சேரியில் இண்டியா கூட்டணி திமுக தலைமையில் அனைத்து இடங்களிலும் வெல்லும். கருத்துக் கணிப்புகள் விஷயத்தில் கருத்து கூற விரும்பவில்லை. பல ஏஜென்சிகள் பலதரப்பட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

மோடி பிரதமராவதை தடுத்து நிறுத்தி நல்ல எண்ணிக்கையிலான இடங்களில் இண்டியா கூட்டணி பெறும். அமேதியில் ராகுல் போட்டியா என்று கேட்கிறீர்கள். 3 கட்டங்களில் முடிவு எடுத்துள்ளோம். அடுத்து கட்டங்கள் முடிவு எடுப்போம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாதது. சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் ஆகியவை ஒன்றுக்கொன்று வித்தியமானது.

புதுச்சேரி பிரச்சாரக் கூட்டம் திருப்தி அளிக்கிறதா என்று கேட்கிறீர்கள். இது புதுச்சேரி. தமிழ்நாடு அல்ல. லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. கூட்டம் நிரம்பியுள்ளதா என்பதை விட எங்கள் கருத்தை பகிர்வதே முக்கியம்” என்று கார்கே குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE