கரூர்: கரூர் மக்களவைத் தொகுதியில் கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்(தனி), திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இங்கு, திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பி. ஜோதிமணி, அதிமுக சார்பில் எல்.தங்கவேல், பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் ரெ.கருப்பையா உட்பட 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக கரூர் உள்ளது. இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகள், 4 மாவட்டங்களில் உள்ளதால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
மீண்டும் தக்க வைக்கும் முனைப்பில் ஜோதிமணி: தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் இடங்களில் மேம்பாலங்கள் கொண்டு வந்ததாகவும், மக்கள் பிரச்சினைக்காக மக்களவையில் அதிக விவாதங்களில் பங்கேற்றதாகவும் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, திமுக அரசின் நலத்திட்டங்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு ஆதரவாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, அமைச்சர் உதயநிதி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர். கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஜோதிமணிக்கும் வாக்கு சேகரித்து பேசினர்.
தொகுதிப் பக்கம் வரவில்லை என சில இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பினாலும், சிலர் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதாகக் கூறும் ஜோதிமணி, மக்கள் ஆதரவுடன் நிச்சயம் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைப்பேன் என நம்பிக்கையுடன் கூறுகிறார். இவர் நேற்று வையம்பட்டி பகுதியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருடனும், வேலம்பாடி, ஈசநத்தம், வெள்ளியணை, தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிகளில் எம்.பி கனிமொழி சோமுவுடனும் சென்று வாக்கு சேகரித்தார்.
தொகுதியை கைப்பற்ற அதிமுக தீவிரம்: அதிமுக வேட்பாளராக போட்டியிடும் எல்.தங்கவேல் பிரச்சாரம் செய்யும் இடங்களில், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிமுக எம்.பி. தம்பிதுரையின் முயற்சியால் தான் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன என உரிமை கொண்டாடி வருவதுடன், அந்தந்த பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டு, அவற்றை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்து தொகுதியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார்.
இவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, நடிகைகள் விந்தியா, காயத்ரி ரகுராம், பாத்திமா, நடிகர் ரவிமரியா உள்ளிட்டோரும் தங்கவேலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளனர். இவர் நேற்று கோடந்தூர், பெரியதிருமங்கலம், நஞ்சை காளக்குறிச்சி, புஞ்சை காளக்குறிச்சி, ராஜபுரம், தொகுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நம்பிக்கையுடன் நாம் தமிழர் கட்சி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெ.கருப்பையா கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு வாக்குறுதிகளை அளிப்பதுடன், தன்னை வெற்றி பெறச் செய்தால் நிச்சயம் அவற்றை நிறைவேற்றித் தருவேன் என உறுதி அளித்து வருகிறார்.
இவர் 2019 மக்களவைத் தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். இவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்துள்ளார். வாக்குச் சேகரிக்க செல்லும் இடங்களில் டீ போடுவது, இஸ்திரி போடுவது, கிரிக்கெட் விளையாடுவது என ஆதரவு திரட்டி வருகிறார். மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இவர் பிரச்சாரம் செய்தார்.
செல்போன் எண்ணுடன் பாஜக வேட்பாளர் பிரச்சாரம்: பாஜக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் பிரச்சாரத்தின்போது, ‘‘400 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற முனைப்பு காட்டி வரும் நிலையில், அந்த 400 ல் இந்தத் தொகுதியும் இடம் பெற்றால் பிரதமர் மோடியிடம் நேரடியாக கேட்டு திட்டங்களை பெறுவேன்.
மக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்’’ எனக்கூறி அவரது செல்போனை எண்ணை காட்டி பிரச்சாரம் செய்து வருகிறார். இவர், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இவருக்கு ஆதரவாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் பிரச்சாரம் செய்துள்ளனர். இவர், குஜிலியம்பாறை, சின்னமநாயக்கன்பட்டி, கட்டளை, மேலமாயனூர், கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்டம், மாயனூர், மணவாசி உள்ளிட்ட இடங்களில் நேற்று வாக்கு சேகரித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago