ஓசூரில் கைக்குழந்தைகளுடன் யாசகம் பெறும் பெண்கள் அதிகரிப்பு

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூரில் கைக்குழந்தைகளுடன் யாசகம் பெறும் பெண்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் ஒரு கும்பல் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி, தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தொழில் நகரான ஓசூரில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல, ஓசூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் அன்றாட பணிக்கு தினசரி ஓசூர் பேருந்து நிலையத்துக்கு வந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்கின்றனர். இதனால், ஓசூர் பேருந்து நிலையம் மற்றும் நகரப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக இருக்கும்.

20-க்கும் மேற்பட்ட பெண்கள்: இந்நிலையில், ஓசூர் பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் சாலைகளில் ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட பெண்கள் கைக் குழந்தைகளைச் சுமந்து கொண்டு, “குழந்தைக்குப் பால் வாங்கக் காசு கொடுங்கள்” எனப் பொதுமக்களிடம் கேட்டு யாசகம் பெற்று வருவது அதிகரித்துள்ளது.

பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பதால், பலரும் பரிதாபப்பட்டு உதவி செய்கின்றனர். கடும் வெயிலில் நீண்ட நேரம் குழந்தைகளை வைத்துக் கொண்டு யாசகம் கேட்கும்போது, குழந்தைகளுக்கு நீர் இழப்பு ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குழந்தைகளின் மன நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது.

வாடகை குழந்தைகள்: மேலும், இவ்வாறு யாசகம் பெறும் பெண்கள், கைக்குழந்தைகளை வாடகைக்கு எடுத்து வந்து யாசகம் பெறும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் பின்னணியில் ஒரு கும்பல் உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஓசூர் நகரப் பகுதியில் பிஹார் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பலர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்வதால், இதைப் பயன்படுத்தி ஒரு கும்பல், அவர்களின் கைக்குழந்தைகளைக் காலை முதல் மாலை 5 மணி வரை வாடகைக்கு வாங்கி வந்து இவ்வாறு யாசகம் பெற்று வருகின்றனர்.

தொழிலாக மாறிய யாசகம்: இதற்காக அக்கும்பல் குழந்தைகளுக்குப் பால் மற்றும் உணவு இலவசமாக வழங்குகின்றனர். அதேபோல பெற்றோருக்குத் தினசரி குறிப்பிட்ட தொகையைக் குழந்தைகளுக்காக வாடகையாக வழங்குகின்றனர். வறுமையில் வாடும் தம்பதிகள் இக்கும்பலிடம் பணம் பெற்றுக் கொண்டு, குழந்தைகளை யாசகம் எடுக்க வாடகைக்கு வழங்கி வருகின்றனர். தனியாகச் சென்று யாசகம் பெறுவதை விட கைக்குழந்தைகளுடன் சென்று யாசகம் பெறும்போது, பலரும் பல்வேறு உதவிகளைச் செய்வதால், இதைத் தொழிலாக இக்கும்பல் செய்து வருகிறது.

விசாரணை தேவை: ஓசூரில் பிழைப்பு நடத்த எத்தனையோ தொழிற்சாலைகள் இருந்தும், இக்கும்பல் கைக்குழந்தைகளை வைத்து யாசகம் எடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதுவும் தற்போது வெயில் அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகளை வெயிலில் தூக்கி வந்து யாசகம் பெறும் கொடுமையைத் தடுக்க மாவட்ட நிர்வாகம், காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது தொடர்பாக குழந்தைகள் அமைப்பு உரிய விசாரணை நடத்தி, அதன் பின்னணியைக் கண்டறிவதோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இடம் பெயர்வதால் சிக்கல்: கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணன் கூறியதாவது: இது போன்ற பெண்கள் தொழிற் சாலைகள் அதிகம் உள்ள நகரங்களைக் குறிவைத்து யாசகம் பெற்று வருகின்றனர். அடிக்கடி சோதனை நடத்தி, இதுபோன்ற பெண்களைச் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருகிறோம்.

வாடகை குழந்தைகள் இருப்பது தெரிந்தால், நீதிமன்றம் மூலம் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்து அறிவுரை வழங்கி வருகிறோம். இவர்கள் குறிப்பிட்ட இடத்தில் நீண்ட நாட்கள் இருப்பதில்லை. இதனால், இவர்களைக் கண்காணித்து, கட்டுப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. ஓசூர் பகுதியில் இது தொடர்பாக சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE