நாடு நலம் பெற மோடி 3-வது முறையாக பிரதமராக வர வேண்டும்: தமிழருவி மணியன்

By செய்திப்பிரிவு

நாடு நலம் பெற மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என, தமிழருவி மணியன் தெரிவித்தார். நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளர் வெங்கடேஷ் பூபாலன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த பலர் கோவை கேஎன்ஜி புதூர் பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சிக்கு காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தலைமை வகித்தார். பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் முன்னிலை வகித்தார். பின்னர், தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணாமலை என்னை வீட்டில் சந்தித்து அரசியலில் தன்னுடன் பயணிக்க ஆதரவு கோரினார். கடந்த 55 ஆண்டுகளாக இரண்டு திராவிட கட்சிகளுக்கு எதிராக களமாடி வருகிறேன். திமுக, அதிமுகவை அப்புறப்படுத்தினால் தான் தமிழக மக்கள் பொன் விடியல் காண முடியும்.

தற்போது இண்டியா கூட்டணியில் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ள மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு விருப்பம் இல்லை. எனவே, அக்கூட்டணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் என முதல் நாளில் இருந்தே போட்டி ஏற்படும். கடந்த 10 ஆண்டு காலமாக வளர்ச்சிப் பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மோடியை மையமாக வைத்து தான் அரசியல் நடக்கிறது.

அவர் தான் பிரதமர். வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து நடக்கும். இதை முன்வைத்து தான் நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம். நாடு நலம் பெற மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும். பாசிச ஆட்சி வழங்கியது இந்திராகாந்தியா, மோடியா என்பது எமர்ஜென்சி காலத்தை பார்த்தால் தெரியும்.

தற்போது இந்திரா காந்தியின் வாரிசுகள் வந்துள்ளனர். ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறார். பாஜக எங்கும் உள்ளது என்ற நிலையை அண்ணாமலை ஏற்படுத்தி தந்துள்ளார். பிரதமர் வற்புறுத்தலின்பேரில் தான் அவர் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE