4 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட புதுவை அடகுக்கடைக்காரர் கொலை, ரூ.1.6 கோடி கொள்ளை வழக்கு: ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் 3 பேர் கைது

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் அடகுக்கடைக்காரரைக் கொலை செய்து ரூ.1.6 கோடி நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒரே பள்ளியில் படித்து ஓட்டுநர்களாக பணியாற்றி வந்த 3 பேரை 4 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து முதல் கட்டமாக ரூ. 30 லட்சம் நகைகள் லாக்கரில் இருப்பதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் ராதே ஷ்யாம் தூத்(45). ராஜஸ்தானைச் சேர்ந்தவ இவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு புதுவையில் குடியேறினார். மனைவி, மகன், மகள் உள்ளனர். இவர், புதுவை நெல்லித்தோப்பு மெயின்ரோடில் நகை அடகுக் கடை வைத்திருந்தார். கடந்த 2014 ஏப்ரல் 5-ம் தேதி வழக்கம் போல் காலை, 9 மணிக்கு கடைக்குச் சென்று, அடகில் உள்ள நகைகளை சரிபார்த்தபடி பணியைத் தொடங்கினார்.

அப்போது வந்த மர்ம நபர்கள் சிலர், நகை அடகு வைப்பதைப் போல் பேசிவிட்டு, கடையின் கதவினை உள்பக்கமாக மூடி, ராதே ஷ்யாமின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அடகுக் கடையில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதில் பல லட்சம் அடகு நகைகளும் திருடுபோனது. இதனால் நகைகளை அடகு வைத்த ஏராளமான ஏழை மக்களும் தவிப்புக்கு உள்ளானார்கள். அவரது கடையில் இருந்த லாக்கரின் ஒரு பகுதி தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இது குறித்து அவரது சகோதரர் ஸேகன்லால் தூத் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சுமார் 4 ஆண்டுகளாக இவ்வழக்கில் குற்றவாளிகள் கண்டறியப்படாமல் இருந்தனர்.

இந்நிலையில் காவல்துறை துணைத் தலைவர் ராஜீவ்ரஞ்சன், ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் 14 பேர் கெண்ட சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. துப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் போலீஸார் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து பல்வேறு சமுக அமைப்புகள் கேள்வி எழுப்பின, நகை அடகுகடைக்காரர்களும் குற்றவாளிகளைப் பிடிக்கப் கோரி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து சட்டப்பேரவையிலும் கேள்வி எழுப்பப்பட்டது.

4 ஆண்டுகளாக குற்றவாளிகளை போலீஸார் தொடர்ந்து தேடிவந்த நிலையில், இக்கொலையில் தொடர்புடைய திருவாரூரை பூர்வீகமாகக் கொண்டு ஜீவானந்தபுரம் மாரியம்மன் கோயில் வீதியில் வசித்த கோபி (எ) கோபிநாதன் (30), தட்டாஞ்சாவடி சுப்பையா நகரைச் சேர்ந்த அருண் (எ) அருள்குமார் (வயது 30) தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் வீதியை சேரந்த ஜோதி (எ) சுயம் ஜோதி (வயது 29) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராதே ஷ்யாம் தூதை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.

இதுதொடர்பாக காவல்துறை துணை தலைவர் ராஜீவ்ரஞ்சன் கூறியதாவது:

''கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை 4 ஆண்டுகளுக்குப் பிறகு பிடித்துள்ளோம். பிடிப்பட்ட கோபி, அருண் என்ற அருள்குமார், சுயம்ஜோதி ஆகியோரும் பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர். 3 பேரும் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த நிலையில், குறுகிய காலத்தில் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்காக அவர்கள் திட்டம் தீட்டினர். ஷ்யாம் தூதின் கடைக்கு அருகில் உள்ள சிமெண்ட் கடையில் ஓட்டுநராக கோபி பணியாற்றி வந்த நிலையில், தினமும் ஷ்யாம் தூதின் கடைக்கு வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருவதை கண்டார். இதனால் அவரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி சுயம்ஜோதி கொலை நடைபெறுவதற்கு முதல் நாள் ஷ்யாம் தூதின் கடைக்குச் சென்று போலியான பெயர் மற்றும் முகவரியில் நகை ஒன்றை அடமானம் வைத்துள்ளார். மறுநாள் சுயம்ஜோதி அருணுடன் சென்று பணத்தைக் கட்டி நகையை மீட்கச் சென்றள்ளார். அப்போது ஷ்யாம் தூத் பணத்தை வாங்கிக்கொண்டு லாக்கரில் இருந்து நகையை எடுக்க உள்ளே சென்றார். அந்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக இருவரும் பயன்படுத்திக்கொண்டனர். ஷ்யாம தூத் உள்ளே சென்றதும் சுயம்ஜோதி வெளியே சென்று காரில் ஏறித் தயாராக அமர்ந்துள்ளார். லாக்கர் அறைக்குள் கோபியும், அருணும் சென்று ராதேஷை கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர் லாக்கரின் ஒரு பகுதியில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு வெளியே காரில் காத்திருந்த சுயம் ஜோதியுடன் தப்பிச் சென்றனர்.

இந்த நகைகளை மொத்தமாக விற்காமல் கோபியின் மாமா கோகுலகிருஷ்ணனின் உதவியால் பல வங்கி மற்றும் அடகுக்கடைகளில் அடகு வைத்தும், சில நகைகளை விற்றுப் பணத்தைப் பெற்று வேறு நகைகள், சொத்துகள், வாகனங்களை வாங்கியுள்ளனர். அந்தப் பணத்தில் 3 பேரும் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்தனர். 3 பேரும் கார், மோட்டார் சைக்கள் போன்ற வாகனங்களையும், சொத்துகளையும் வாங்கிக் குவித்துள்ளனர். மேலும் 30 லட்சம் மதிப்புள்ள நகைகளை வாங்கி வங்கியில் வைத்துள்ளதாக வாக்குமூலம் தந்தனர். அதற்கான ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளோம்.

இவர்கள் அடகு வைத்த நகைகள், வங்கியில் வைத்துள்ள நகைகள், மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கோபி தனது சொந்த ஊரான திருவாருரில் பல சொத்துகளை வாங்கியதும் தெரியவந்துள்ளது. மொத்தமாக இக்கொள்ளைச் சம்பவத்தில் மூவரும் சேர்ந்து ஏழரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். அதன் மதிப்பு ரூ. 1.6 கோடியாகும். அவை அனைத்தும் சொத்துகளாக உள்ளதைப் பறிமுதல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறோம். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். நகையை விற்க உதவி செய்த கோகுலகிருஷ்ணனை தேடி வருகிறோம்''.

இவ்வாறு ராஜீவ்ரஞ்சன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்