அம்பேத்கர் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளில் தமிழகம்முழுவதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: கடந்த 1891-ம் ஆண்டு ஏப்.14-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் அம்பேத்கர். இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அவர், பரோடா மன்னர் உதவியுடன் அமெரிக்கா சென்று உயர்கல்வி பயின்றார். உயர் கல்விக்காக வெளிநாட்டுக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சட்டமேதை அம்பேத்கருக்கு உண்டு.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அம்பேத்கர், பிறந்த சாதி காரணமாக இழைக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளுக்கும் அவமானத்துக்கும் ஆளானவர். அதன்காரணமாக தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துக் கடுமையாகப்போராடினார். பல்லாயிரக்கணக்கா னவர்களுடன் இந்து சமயத்தை துறந்து புத்த சமயத்தை தழுவினார்.

பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர். ஆசிரியர், இதழாளர், எழுத்தாளர், சமூகநீதிப் புரட்சியாளர் எனப் பன்முகத் திறன்களைப் பெற்றவர். இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் வரைவுக் குழுத் தலைவராக விளங்கிய மிகப்பெரிய சட்டமேதை அவர். இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் திகழ்ந்தார்.

அவரது புகழைப் போற்றும் வகையில் வியாசர்பாடி அரசு கலைக் கல்லூரிக்கு அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி என்றும், சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட சட்டப்பல்கலைக்கழகத்துக்கு அம்பேத் கர் சட்டப் பல்கலைக்கழகம் என்றும் பெயர் சூட்டியதுடன், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் மணிமண்டபம் மற்றும் சிலையையும் நிறுவி அம்பேத்கரை போற்றியுள்ளது திமுக அரசு.

அம்பேத்கர் பிறந்த ஏப்.14-ம் நாளை, ‘சமத்துவ நாள்’ என அறிவித்துள்ளோம். அந்நாளில் தமிழகம் முழுவதும் தீண்டாமை ஒழிப்புஉறுதிமொழி ஏற்போம். அம்பேத்கரை போற்றி அவர் வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக நாடுஎனும் அரசியல் சட்டத்தைக் காக்கவும், பாசிச பாஜக, ஆர்எஸ்எஸ் தலைமையிலான ஆட்சிக்கு முடிவு கட்டவும் அம்பேத்கர் பிறந்த நாளில்உறுதி ஏற்போம்’ என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE