திருப்பூர்: “சகோதரர் ராகுல் காந்தி கோவைக்கு வந்திருந்தார். எப்படி இருந்தது? பாகுபலி படம் போன்று பிரமாண்டமாக இருந்திருந்ததே. ‘ஒரே ஒரு மீட்டிங். டோட்டல் பிஜேபியும் க்ளோஸ்’. ராகுல் காந்தியின் ஒருநாள் வருகையே, பிரதமர் மோடியின் மொத்தப் பிரச்சாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில், நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் தொகுதி வேட்பாளர் சுப்பராயன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஆ.ராசா திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர். கருணாநிதியால் “தகத்தகாய சூரியன்” என்றுப் பாராட்டப்பட்டவர். பாசிச பாஜக ஆட்சியின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் துணிச்சலாக நாடாளுமன்றத்தில் எதிர்த்துக் குரல் கொடுத்துவரும் சிறந்த நாடாளுமன்றவாதி ஆ.ராசா. வாதத் திறமையில் யாராலும் வீழ்த்த முடியாத தலைசிறந்த கொள்கையாளர். திருப்பூர் நாடாளுமன்றத்துக்கு சுப்பராயன் போட்டியிடுகிறார். அவர் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக எந்தப் பொறுப்பு வகித்தாலும், பாட்டாளிகளின் தோழராக இருக்கக் கூடியவர்.
சகோதரர் ராகுல் காந்தி கோவைக்கு நேற்று வந்திருந்தார். எப்படி இருந்தது? பாகுபலி படம் போன்று பிரமாண்டமாக இருந்திருந்ததே. “ஒரே ஒரு மீட்டிங். டோட்டல் பிஜேபியும் க்ளோஸ்”. ராகுல் காந்தியின் ஒருநாள் வருகையே பிரதமர் மோடியின் மொத்தப் பிரச்சாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது. தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டும்தான் ஆள முடியும் என்று ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். சகோதரர் ராகுலின் பேச்சை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அவர் தமிழ்நாட்டை எந்த அளவுக்கு மதிக்கிறார் என்று அதிலேயே தெரிந்திருக்கும்.
இந்தியாவைப் புரிந்துகொள்ளத் தனக்கு வழிகாட்டியாக இருப்பதே தமிழ்நாடும், தமிழ்நாட்டு வரலாறும், தமிழ்நாட்டு அரசியலும்தான் என்று சொல்லி, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கருணாநிதி என்று நம்முடைய தலைவர்களை மனதாரப் போற்றினார். நடக்கின்ற தேர்தல் என்பது, சாதாரணத் தேர்தல் அல்ல. இரண்டு தத்துவங்களுக்கு இடையிலான போர் என்று நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.
» செய்தித் தெறிப்புகள் @ ஏப்.13: அண்ணாமலை புது கணிப்பு முதல் ஸ்டாலின் ‘வார்னிங்’ வரை
» “யார் காணாமல் போவார்கள்..?” - அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கி, சமூக நீதியின் ஒளிவிளக்காகத் திகழும் ஆட்சிதான் திமுக ஆட்சி. ஆனால், மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இடஒதுக்கீட்டைத்தான் ரத்து செய்வார். ஏன் என்றால், பா.ஜ.க.வுக்கு சமூகநீதி என்றாலே அலர்ஜி. இந்தியா விடுதலை பெற்றபோது, பல நாடுகள் என்ன சொன்னார்கள்? ‘பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடு, அமைதியாக இருக்காது, பெற்ற சுதந்திரத்தை இவர்கள் ஒழுங்காக காப்பாற்ற மாட்டார்கள்’ என்று பல நாடுகள் கூறினார்கள். ஆனால், அவர்களின் கணிப்புகளைப் பொய்யாக்கி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம், ஜனநாயகக் கட்டமைப்புடன் நாடு இயங்க அடிப்படையாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டம்தான்.
மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தையே மாற்றிவிடுவார். அதனால்தான் சொல்கிறோம். மோடி ஆட்சிக்கு வருவது என்பது அரசியல் சட்டத்திற்கு ஆபத்து. ஜனநாயகத்திற்கு ஆபத்து. ஒட்டுமொத்த நாட்டிற்கே பேராபத்து. ஏன் என்றால், பத்தாண்டுகாலமாக பாஜக ஆட்சியைப் பார்த்துவிட்டோம். கலவரம் செய்வது என்பது பாஜகவின் D.N.A.-விலேயே ஊறியது.
நேற்றுகூட ஒரு செய்தி வெளியானது. எல்லோரும் பார்த்திருப்பீர்கள். இதே திருப்பூரைச் சேர்ந்த சகோதரி ஒருவர், வாக்கு கேட்டு வந்த பாஜகவினரிடம் ஜி.எஸ்.டி. தொடர்பாக ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் அந்த சகோதரியைத் தாக்கியிருக்கிறார்கள். இதுதான் பா.ஜ.க. மக்களை மதிக்கும் லட்சணம். இதுதான் பாஜக பெண்களுக்குக் கொடுக்கும் மதிப்பு. மக்களை மதிக்காமல் அதிகாரத் திமிரில் அராஜகங்களும், கலவரமும் செய்யும் பாஜக கட்சி திருப்பூரை மணிப்பூர் ஆக்கிடுவிடுவார்கள். மொத்தத்தில் மோடியும் பாஜகவும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு.
அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும் நிறுவனங்களை நடத்த முடியும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும். நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, புதிய இந்தியாவை உருவாக்குவேன் என்று கூறினார். ஆனால், அவரின் பத்தாண்டுகால ஆட்சியில் என்ன மாதிரியான இந்தியாவை உருவாக்கியிருக்கிறார்? ஒரு புள்ளிவிவரம் சொல்கிறேன். பட்டினியால் தவிக்கும் நாடுகள் பட்டியலில் 125 நாடுகளில், இந்தியா 111-ஆவது இடத்தில் இருக்கிறது என்று உலகளாவிய பட்டினிக்குறியீட்டுப் புள்ளிவிவரம் சொல்கிறது. இது எவ்வளவு பெரிய அவலம்.
அடுத்து, பாஜக ஆட்சிக்கு வந்தபோது, இந்தியாவின் கடன் 58 லட்சம் கோடி ரூபாய். இப்போது எவ்வளவு தெரியுமா? 155 லட்சம் கோடி ரூபாய். இதுதான் பா.ஜ.க. ஆட்சியின் நிதி மேலாண்மை லட்சணம். மோடி ஆட்சிக்கு வந்தபோது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59 ரூபாய். இன்று 84 ரூபாயாகி நம்முடைய நாட்டு பணத்தின் மதிப்பு சரிந்திருக்கிறது. இந்த வீழ்ச்சிதான் மோடியின் சாதனை.
இன்றைக்கு, ஊடக சுதந்திரத்தில் 180 நாடுகளில் 161-ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. நம்முடைய பழம்பெரும் ஜனநாயகத்திற்கு எவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மோடி சொன்ன புதிய இந்தியா, இவரின் ஆட்சியில் இந்தியாவில் 32 விழுக்காடு மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கிறார்கள். 44 விழுக்காடு மக்கள் சமையல் எரிவாயு பயன்படுத்தவில்லை. 30 விழுக்காடு மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதியே இல்லை. 41 விழுக்காடு மக்களுக்கு வீடுகள் இல்லை.
தானியங்கள் விலை 54 விழுக்காடு அதிகமாகிவிட்டது. பால் பொருட்கள் விலை 53 விழுக்காடு அதிகம். எண்ணெய் விலை 48 விழுக்காடு அதிகம். காய்கறி விலை 48 விழுக்காடு அதிகம். மருத்துவச் செலவுகள் 71 விழுக்காடு அதிகம். கல்விச் செலவுகள் 60 விழுக்காடு அதிகம். இதெல்லாம்தான் மோடி கூறிய வளர்ச்சியா?
இந்த திருப்பூரும், கோவையும் எப்படிப்பட்ட ஊராக இருந்தது? தமிழ்நாட்டின் எந்த மாவட்ட மக்களும், எப்படிப்பட்ட கஷ்டத்தில் இருந்தாலும் திருப்பூருக்கும் கோவைக்கும் வந்தால் - ஏதாவது வேலை கிடைத்துவிடும் என்று பலருக்கும் நம்பிக்கை தருகிற நகரங்களாக இந்த இரண்டு ஊர்களும் இருந்தது. அப்படிப்பட்ட இந்த மேற்கு மண்டலத்தின்மேல் மோடி நடத்திய இரட்டைத்தாக்குதல்தான், பண மதிப்பிழப்பு. ஜி.எஸ்.டி. தொழில் நிறுவனங்களில் “வேலைக்கு ஆட்கள் தேவை” என்று நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்த காலம் போய் மோடி ஆட்சியில் ‘ஏல அறிவிப்பு’ நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருக்கும் நிலைமைக்கு நிறுவனங்கள் வந்துவிட்டது.
அதுமட்டுமா, பஞ்சு, நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எத்தனை முறை திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்தார்கள்? வங்கதேசத்தோடு மோடி செய்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், திருப்பூருக்கும் மேற்கு மண்டலத்துக்கும் பேரிடியாக அமைந்துவிட்டது. தவணை தவறிய கடனைச் செலுத்த 6 மாதம் வரை இருந்த அவகாசத்தை, சர்பாஸி (SARFAESI) சட்டத்தில் 3 மாதமாகக் குறைத்துத் தொழிலதிபர்களின் சொத்துக்களை ஏலம் விட்டதுதான் அவர் தந்த பரிசு.
டெக்ஸ்டைல் மட்டுமல்ல, வாகன உற்பத்தி, வெட்கிரைண்டர் உற்பத்தி, சிறு, குறு பவுண்டரிகள், இன்ஜினியரிங் மோட்டார் பம்புகள் உற்பத்தி, விசைத்தறிகள் என்று இந்தப் பகுதியுடைய எல்லாத் துறைகளிலும் மிகப்பெரிய மந்தமான சூழலை மோடியின் பாஜக ஆட்சி உருவாக்கியிருக்கிறது. நேற்று கோவையில் சொன்ன பகிரங்கமான குற்றச்சாட்டை திருப்பூரிலும் மக்கள் மன்றத்தில் வைக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்த நிறுவனத்தை மிரட்டி, குஜராத்தில் தொழில் தொடங்கச் செய்திருக்கிறார்கள் என்று நேற்று சொன்னேன். அதில் கூடுதலாக இன்னொரு செய்தியை இன்று சொல்கிறேன்.
பி.எல்.ஐ. திட்டம் என்று சொல்லி, தமிழ்நாட்டு மக்களிடம் வரியை வசூலித்துவிட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் குஜராத்தில் தொழில் தொடங்கிட வேண்டும் என்று சலுகை தருகிறார்கள். இவர்கள்தான் இப்போது கோவைக்கும் திருப்பூருக்கும் வாக்கு கேட்டு வருகிறார்கள்.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக மட்டும் தமிழக அரசால் இந்த ஆண்டு 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பழனிசாமிக்கும் ‘தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கும்தான்’ பிரச்சினையே தவிர அவருக்கும் மோடி, அமித் ஷாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. யார் விசுவாசமான அடிமை என்பதில் வேண்டும் என்றால் இவர்களுக்குள்ளே சண்டையாக இருக்கலாம். ஆனால் எந்தக் காலத்திலும், பிரதமரை எதிர்த்து, மத்திய பாஜகவை எதிர்த்து, பழனிசாமியால் கட்சி நடத்தவும் முடியாது. அரசியல் நடத்தவும் முடியாது.
ஏன் என்றால், சசிகலாவிடம் இருந்து பன்னீர்செல்வத்தைப் பிரித்து தர்மயுத்தம் நாடகம் நடத்த வைத்ததே பாஜகதான். சசிகலா சிறைக்குப் போன பிறகு, முதலமைச்சர் ஆன பழனிசாமியை தங்கள் பக்கம் கொண்டு வந்ததும் பாஜக தான். இரு துருவங்களாக இருந்த பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் ஒன்றுசேர்த்ததும் பாஜக தான். தினகரனைக் கைது செய்து சிறையில் அடைத்து அவரையும் தங்களுடைய அடிமையாக மாற்றியதும் பாஜக தான். இன்று பன்னீர்செல்வத்தையும் தினகரனையும் மிரட்டித் தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பாஜக தான். சசிகலாவை அரசியல் பக்கம் வரக்கூடாது என்று தடுத்ததும் பாஜகதான். பழனிசாமியைத் தனியாக நிற்கவைத்ததும் பாஜகதான்.
இப்படி டிவி சீரியலில் தீடீர் தீடீர் என்று ஆட்களையும் காட்சிகளையும் மாற்றுகிற மாதிரி சதிநாடகங்களை அரங்கேற்றி இருக்கிறது பாஜக தலைமை. உறுதியோடு சொல்கிறேன் இந்தத் தேர்தலில் நேரடி பாஜகவும் மண்ணைக் கவ்வும். பாஜகவின் தொங்குசதைகளும் படுதோல்வி அடைவார்கள்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago