மீன்பிடி படகில் இருந்து தவறுதலாக கடலில் விழுந்த கடலூர் இளைஞரை மீட்டது கடலோர காவல் படை!

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மீன்பிடி படகில் மீன்பிடிக்க செல்லும் போது தவறுதலாக விழுந்த கடலூரை சேர்ந்தவரை புதுச்சேரியில் கடலோர காவல் படையினர் மீட்டனர். துரிதமாக செயல்பட்டு மீனவரை காப்பாற்றிய கடலோர காவல்படை வீரர்களை புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதியின் கமாண்டர் டிஐஜி எஸ்எஸ் டஸிலா வெகுவாக பாராட்டினார்.

இந்திய கடலோர காவல்படையின் ரோந்து படகு INTERCEPTOR CRAFT 307 வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொண்டு இருந்தது. இன்று காலை பாண்டி மெரினா கடல் பகுதியில் யாரோ ஒருவர் தத்தளிப்பதை கண்டுள்ளனர். உடனே படகை வேகமாக அவரை நோக்கி திரும்பியுள்ளனர்.

அப்போது படகில் இருந்த உயிர் மிதவையை அவரை நோக்கி வீசி அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். உடனடியாக அவருக்கு படகில் உள்ள மருத்துவ உபகரணங்களைக் கொண்டு முதலுதவி சிகிச்சையும் அளித்துள்ளனர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் சோனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பதும் அவர் பெரிய காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரோலக்ஸ் என்ற மீன்பிடி படகில் மீன்பிடிக்க செல்லும் போது தவறுதலாக விழுந்து விட்டார் என்பது தெரிய வந்தது.

அவரை கடலோர காவல் படையினர், கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு மீனவரை காப்பாற்றிய கடலோர காவல்படை வீரர்களை புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதியின் கமாண்டர் டிஐஜி எஸ்எஸ் டஸிலா வெகுவாக பாராட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE