மோடி, அமித் ஷா நிர்மலா சீதாராமன் மூவரும் அவதூறு கருத்துகளை பரப்புவதாக செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்துக்கு வரும்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மக்களை திசைத் திருப்புவதற்காக ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை பரப்புவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்துக்கு வருகை புரிகிற பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மக்களை திசை திருப்புவதற்காக ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காக சோனியா காந்தி குடும்பத்தின் மீதும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியை குடும்ப கட்சி என்று சொல்கிறார்கள். கீரல் விழுந்த கிராமபோன் ரிக்கார்டை போல திரும்பத் திரும்ப இந்த குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். விடுதலைப் போராட்டத்தில் 3,256 நாட்கள் சிறையில் இருந்த ஜவஹர்லால் நேரு, காந்தியடிகளின் பரிந்துரையின் பேரிலும், மக்கள் பேராதரவினாலும் 1947 முதல் 17 ஆண்டுகாலம் பிரதமராக இருந்து நவீன இந்தியாவின் சிற்பி என்ற பெயரைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து இந்திரா காந்தி 15 ஆண்டுகளும், ராஜிவ் காந்தி 5 ஆண்டுகளும், சோனியா காந்தியின் ஆதரவில் மன்மோகன் சிங் 10 ஆண்டுகளும் இந்த நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்று இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றார்கள். சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இத்தகைய வாய்ப்புகளை நேரு பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் ஜனநாயக அடிப்படையில் நடைபெற்ற தேர்தல்களில் மக்களின் அமோக ஆதரவை பெற்று தான் நாட்டின் பிரதமர் பொறுப்பை வகித்திருக்கிறார்கள்.

இவை வாரிசு அடிப்படையில் உருவானதல்ல. நாட்டு மக்கள் மனமுவந்து அளித்த ஆதரவின் அடிப்படையிலேயே பிரதமர் பதவியை வகித்து நாட்டின் வளர்ச்சியை உருவாக்கினார்கள். நாட்டு நலன் கருதி எடுத்த முடிவுகளுக்காக இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் பயங்கரவாத சக்திகளுக்கு பலியாகி மிகப்பெரிய தியாகத்தைச் செய்தார்கள். இதையெல்லாம் நாட்டு மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள். எனவே, பாஜகவினரின் இத்தகைய இழிவான பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது.

நேற்று கிருஷ்ணகிரியில் பேசிய நிர்மலா சீதாராமன், 2ஜி அலைக்கற்றை ஊழலைப் பற்றி பேசியிருக்கிறார். 2ஜி ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி. அறிவித்தவுடனே அதன்மீது டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி ஒ.பி. சைனி, எந்த ஆதாரமும் இல்லையென குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரபராதிகள் என விடுதலை செய்தார்.

அதை ஊழல் என்று கூறுவதற்கு பாஜக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? ஆனால், சமீபத்தில் நெடுஞ்சாலைத்துறையில் நிகழ்ந்த ஒப்பந்த முறைகேடுகளிலும், நிர்வாகத்திலும் ரூ. 7.5 லட்சம் கோடி முறைகேடு மற்றும் ஊழல் நடந்ததாக சிஏஜி அறிக்கை வெளியிட்டது. ஆனால் இதுவரை அந்த அறிக்கை மீது விசாரணை நடத்தவோ, வழக்கு பதிவு செய்யவோ ஒன்றிய அரசு எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. மேலும், ஊழலை ஒழிப்பதாக சூளுரை மேற்கொண்ட பிரதமர் மோடி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் வாய்மூடி மௌனியாக இருப்பது ஏன் ?

மேலும், 10 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழலே நடைபெறவில்லை என நிர்மலா சீதாராமன் கூறுகிறார். நரேந்திர மோடி ஆட்சியில் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கிகளில் மோசடி நடைபெற்று இதில் ரூபாய் 53 ஆயிரம் கோடி வரை ஏமாற்றிய 23 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதில் குஜராத்தைச் சேர்ந்த மோடிக்கு நெருங்கிய நண்பர்களான நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி ஆகிய இருவரும் ஏறத்தாழ 23,000 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றார்கள். 10 ஆண்டுகளில் இவர்களை கண்டுபிடிக்க பாஜக எடுத்த நடவடிக்கை என்ன?

அதேபோல, 10 ஆண்டு பாஜக ஆட்சியில் முதலில் வெளிவந்தது ரபேல் விமான கொள்முதல் ஊழல். காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயம் செய்த விலையை விட மூன்று மடங்கு அதிகம் கொடுத்து வாங்கியதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூபாய் 41,000 கோடி. அனைத்து ஊழல்களையும் மிஞ்சுகிற வகையில் தேர்தல் பத்திர நன்கொடைகள் மூலம் பாஜக பெற்ற தொகை ஏறத்தாழ ரூபாய் 8,000 கோடி.

ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகளின் மூலமாக தொழிலதிபர்களை மிரட்டி முக்கியமான ஒப்பந்தங்களை தருவதாக கூறி, இவ்வளவு பெரிய தொகையை பாஜக திரட்டியிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

32 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாஜக பெற்ற தொகை ரூபாய் 2004 கோடி. இந்த குழுமங்கள் அனைத்திற்கும் 3.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 179 மிகப்பெரிய அரசாங்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகிய அமைப்புகளின் விசாரணையை எதிர்கொண்டு வரும் 56 கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜகவுக்கு வழங்கிய தொகை ரூபாய் 2,592 கோடி.

இதில் ரூபாய் 1853 கோடி சோதனைகளுக்கு பிறகு தரப்பட்டுள்ளது. அதேபோல, அனாமதேய ஷெல் கம்பெனிகள் பாஜக-வுக்கு ரூபாய் 419 கோடி நிதி வழங்கியுள்ளன. இவை அனைத்துமே அம்பலமாகியுள்ளன. இது ஊழல் இல்லை என்றால் எது ஊழல்?

எனவே, ஊழலை ஒழிக்க வந்த உத்தமர் வேடம் போடும் நரேந்திர மோடி நிகழ்த்திய இத்தகைய மெகா ஊழல் இன்றைக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் எஸ்பிஐ வங்கி வெளியிட்ட பட்டியல் மூலம் அம்பலமாகியிருக்கிறது. இதன்மூலம் தேர்தல் களத்தில் அதிகாரப்பூர்வமாக வசூலித்த ரூபாய் 8,000 கோடியும், திரைக்கு பின்னால் வசூலித்த பல ஆயிரம் கோடி ரூபாயையும் வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என பாஜக கனவு காண்கிறது.

ஆனால், நேற்று கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வரலாறு காணாத வகையில் திரண்ட லட்சக்கணக்கான மக்களிடையே தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஆற்றிய உரையை கேட்ட பிறகு 2024 தேர்தலில் மக்கள் விரோத மோடி ஆட்சி அகற்றப்படுவது உறுதியாகியிருக்கிறது. மேற்படி கூட்டத்தில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின் மக்களவை தேர்தலில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் என்று கூறியிருக்கிறார்.

இதையொட்டி பேசிய ராகுல்காந்தி, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற இருக்கிற மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டிருக்கிறார். இதன்மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பேராதரவோடு இண்டியா கூட்டணி வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு முடிவுகட்டப்படும். அதற்கு தமிழகம் முன்னோடியாக இருக்கிறது என்கிற வரலாற்றுச் சிறப்பு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. பாசிச பாஜக ஆட்சி வீழ்த்தப்படுவதும், மோடியின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து இந்தியா மீட்கப்படுவதும் உறுதியாகி இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்