மாணிக்கம் தாகூர் Vs ராதிகா Vs விஜய பிரபாகரன் - விருதுநகர் களத்தில் முந்துவது யார்?

By செய்திப்பிரிவு

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக கடந்த முறை போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கட்சி சார்பாக அக்கட்சியின் நிறுவனரும் மறைந்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் அந்தத் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைக் கலைத்துவிட்டு அதனை பாஜகவுடன் இணைத்துக் கொண்டார் அதன் தலைவர் சரத்குமார். இந்த நிலையில், அவரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் பாஜக சார்பாக விருதுநகரில் போட்டியிடுகிறார். தவிர, நாம் தமிழர் கட்சி சார்பாக சி.கௌசிக் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். 2024-ம் ஆண்டு தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, மாணிக்கம் தாகூரைக் கடந்த முறை வெல்ல வைத்த வியூகம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

காரணம் என்ன? - கடந்த 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாகப் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் முதலிடம் பிடித்தார். இரண்டாம் இடத்தை மதிமுக சார்பாகக் களம் கண்ட அதன் தலைவர் வைகோவும், மூன்றாவது இடத்தைத் திமுக வேட்பாளரான மதுரையைச் சேர்ந்த ரத்தினவேலுவும் பிடித்தனர். நான்காவது இடத்துக்குக் காங்கிரஸ் சார்பாகக் களம் கண்ட மாணிக்கம் தாகூர் தள்ளப்பட்டார்.

இந்த நிலையில், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரிந்து தேர்தலைச் சந்தித்த திமுக, காங்கிரஸ், மதிமுக என அனைத்துக் கட்சி ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்தது. அப்போது காங்கிரஸ் சார்பாக மீண்டும் களம் கண்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். தற்போது 4-வது முறையாக மீண்டும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக விருதுநகர் மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ளார். ஏற்கெனவே, தொகுதிக்குப் பரிச்சயமானவர் என்னும் முறையில் கடந்த முறை வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2024-ம் ஆண்டு தேர்தல் களம் எப்படி இருக்கிறது? - நட்சத்திரங்கள் போட்டியிடும் விருதுநகர் ’ஸ்டார் தொகுதி’ என்றுதான் அழைக்கப்படுகிறது. கடந்த முறை தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி மாணிக்கம் தாகூரை எதிர்த்து களம் கண்டார். எனினும் வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூருக்கும் இரண்டாம் இடம் பிடித்த இவருக்கும் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசம் இருந்தது. அப்போது அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்திருந்தார். ஆனால், இப்போது அவர் அதிமுகவிலிருந்து வெளியேறியிருப்பது அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம்.

இந்த நிலையில்தான், இம்முறை அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விஜய பிரபாகரன் களத்தில் இருக்கிறார். இவர் தேமுதிக நிறுவனரும் நடிகருமான தன் தந்தை விஜயகாந்தின் மறைவு தனக்கு அனுதாப வாக்குகளைப் பெற்று தரும் என்றும், அவரின் சமுதாய வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால், அது முற்றிலுமாக அவருக்கு கை கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதேபோல், நடிகையான ராதிகா சரத்குமார் மக்களிடம் பிரபலமானவர் என்பதால் களம் சற்றே சூடுபிடித்துள்ளது. இந்த மூவரும் தீவிரமாகப் பிரச்சாரத்தைக் கையிலெடுத்து செயலாற்றி வருகின்றனர். எனவே, விருதுநகர் 2024-ம் ஆண்டு தேர்தல் களத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.

தேமுதிக திட்டம் என்ன? - தேமுதிக சார்பாக மாணிக்கம் தாகூரின் செயல்பாடுகளை விமர்சித்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. விஜய பிரபாகரனைவிட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டீ, பரோட்டா போடுவது, பிரச்சாரத்தில் பேசுவது எனத் தீவிரம் காட்டுகிறார். விஜய பிரபாகரன் பொறுத்தவரையிலும் தன் அப்பாவின் சில வசனங்களைப் பேசி மாஸ் காட்டுகிறார். தவிர, ’தேமுதிக - அதிமுக’ வாக்கு வங்கி உதவும் என நம்பிக்கையில் களத்தில் நிற்கிறார்.

பாஜக நிலை என்ன? - பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் உள்ள சிறப்பம்சங்களைச் சொல்லி ராதிகாவும் அவரின் கணவர் சரத்குமாரும் வாக்கு சேகரித்து வருகின்றனர். தனிப்பட்ட முறையில் அவர்களின் முன்னாள் கட்சியான சமத்துவ மக்கள் கட்சிக்கு அங்குப் பிரதான வாக்கு வங்கி ஏதுமில்லை. எனவே, அவரின் சமுதாய வாக்குகள், பாஜக கட்சி, மோடியின் பிரபலம் ஆகியவற்றை நம்பி களத்தில் ராதிகா சரத்குமார் இறங்கியிருக்கிறார். பல்வேறு சமூகத் தலைவர்களையும், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளையும் சந்தித்து வாக்கு சேகரிப்பதோடு மக்களைச் சந்தித்தும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாதக நிலை என்ன? - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌசிக் விருதுநகர் தொகுதியைச் சேர்ந்தவர் அல்ல. தென்காசி பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட நாதக வேட்பாளர் உள்ளூர் விருதுநகரைச் சேர்ந்தவர் என்பதால் நாம் தமிழர் கட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இம்முறை பரிச்சயம் இல்லாதவர் வேட்பாளராக அறிமுகம் செய்திருப்பதால் நாதக சற்று சுணக்கமாகக் காணப்படுகிறது.

காங்கிரஸ் வியூகம் என்ன? - இருமுறை தொகுதிக்கு எம்பியாக இருந்த மாணிக்கம் தாகூர் பெரும்பாலும் தொகுதியில்தான் இருப்பாராம். அதனால் எப்போது வேண்டுமானாலும் அவரைச் சந்திக்க முடியும் என்கின்றனர் மக்கள். விருதுநகர் பொறுத்தமட்டில் நீண்ட நாட்களாக நிலவும் குடிநீர் பிரச்சினை தீர்க்காதது, தீப்பெட்டி தொழில் மற்றும் சிவகாசி பட்டாசு தொழிலில் நிலவும் சிக்கல், பட்டாசுத் தொழிற்சாலைகளையும், அதில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படாதது எனப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டும் சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் மீது வைக்கப்படுகிறது.

விருதுநகர் தேர்தல் களத்தில் மாணிக்கம் தாகூர், ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன் ஆகியோருக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. எனினும் தற்போது, காங்கிரஸ் சற்று முன்னிலையில் இருப்பதாகவே கருத்துக்கள் சொல்லப்படுகிறது. எனினும், மக்கள் மனநிலை தேர்தல் நெருங்கும் வேளையில் மாறலாம் என்பதால் மக்கள் தீர்ப்பு என்ன? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE