தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வெளிமாநில போலீஸார் 10 ஆயிரம் பேர் வருகை: பதற்றமான 8,050 வாக்குச் சாவடிகளில் துணை ராணுவம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஆந்திரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங் களில் இருந்து 10 ஆயிரம் போலீஸார் தமிழகத்துக்கு வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செய்து வருகிறது.

அரசியல் கட்சியினர் பணம், பரிசுப் பொருட்களை கொடுத்து வாக்குகள் கவர்வதைத் தடுக்க தமிழகம் முழுவதும் 900-க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அமைதியான முறையில் தேர்தலை நடத்தும் வகையில்190 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழகத்துக்கு ஏற்கெனவே வரவழைக்கப்பட்டு மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தி வரு கின்றனர்.

இவர்களுடன் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் ஏற்கெனவே வழிகாட்டல் வழங்கி உள்ளார்.

இந்நிலையில், தமிழக தேர்தல்பாதுகாப்பு பணிக்காக கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்டமாநிலங்களில் இருந்து 10 ஆயிரம்போலீஸார் ஏப்.16-ம் தேதி வர உள்ளனர். அவர்கள் தேவைக்கு தகுந்தார் போல் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவர்.

இதுதவிர ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், ஊர்க்காவல் படையினர் உள்பட மேலும் பல பிரிவினரும் வாக்குப்பதிவு அன்று பணியாற்ற உள்ளனர். இதற்கிடையே, தமிழகம் முழுவதும் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரையில் 511, தென்சென்னையில் 456, தேனியில் 381 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 181 வாக்குச் சாவடிகள் மிக பதற்றமான வாக்குச் சாவடிகளாக அடையாளம் காணப் பட்டுள்ளன.

இங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுடன் கூடுதலாக போலீஸாரும் பணியமர்த்தப்பட உள்ளனர். அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடத்தும் வகையில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில்பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேபோல், தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், ராகுல்காந்தி உட்பட 240 முக்கியப் பிரமுகர்கள் தமிழகத்துக்கு வருகை தருகின்றனர். அவர்களுக்கு உளவுத் துறைவழிகாட்டல்படி கூடுதல் பாதுகாப்புவழங்கப்பட்டு வருகிறது. மேலும்,ரோடு ஷோ, பொதுக் கூட்டங்களுக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE