கோவை தொகுதி பாஜக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

By செய்திப்பிரிவு

கோவை: கோவை விமான நிலையத்தை, உலகத்தரத்துக்கு விரிவாக்கம் செய்து சர்வதேச முனையமாக மேம்படுத்தப்படும் என கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை மக்களவைத் தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் விவரம்: கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டு, மக்கள் குறை தீர்ப்பு மையமாகச் செயல்படும். கோவை விமான நிலையம், உலகத்தரத்துக்கு விரிவாக்கம் செய்து சர்வதேச விமான முனையமாக மேம்படுத்தப்படும். கோவை மெட்ரோ திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

தமிழகத்தில் 2-வது இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐஐஎம்) கோவையில் நிறுவப்படும். ஆனைமலை-நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும். விசைத்தறி உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில் பவர் டெக்ஸ் திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

கோவையில் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) மற்றும் போதைப் பொருள் தடுப்பு (என்சிபி) அலுவலகங்கள் அமைக்கப்படும். ஆட்டோமேட்டிவ் காரிடார் அமைக்கப்படும். ராணுவ தளவாட உற்பத்தி மையத்தில் செமிகண்டக்டர்களை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும்.

250 மக்கள் மருந்தகங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைக்கப்படும். நாடு முழுவதும் புராதன ஆன்மிக தலங்களுக்கு 10 புதிய ரயில்கள் இயக்கப்படும். உயர்தர புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை நிறுவப்படும்.

காமராஜர் நினைவாக அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு நகரில் மூன்று உணவு வங்கி நிறுவப்படும். கடந்த 10 ஆண்டுகளில் கோவை மக்களவைத் தொகுதிக்கு வழங்கிய நலத்திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதி ஆகியவை சிறப்பு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, முறைகேடுகள் இருப்பின், அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை நகரை சுற்றி புறநகர் ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவைக்கென்று தனி ரயில்வே கோட்டமும், மூன்று புதிய ரயில் முனையங்களும் உருவாக்கப்படும்.

நீலம்பூர் முதல் மதுக்கரை வரையிலான எல்அண்ட்டி சாலையை 8 வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை உயர்நீதின்ற கிளையை கோவையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 100 வாக்குறுதிகள் ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி அளித்தார்,

தேர்தல் விதி மீறவில்லை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களுக்கான கையேட்டில், இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கியில்தான் பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மக்களை சந்திக்கக் கூடாது என எங்கும் குறிப்பிடவில்லை.

நான் தேர்தல் விதிகளை பின்பற்றியே நடந்துள்ளேன். தேர்தல் விதிகளை மீறவில்லை. இத்தேர்தலில் திமுகவினர் டெபாசிட் இழக்கும் தொகுதி கோவையாக இருக்கும்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு உதவி தேர்தல் செலவின பார்வையாளர் கடிதம் எழுதியுள்ளார்.இது, தமிழகம் முழுவதும் நிலவும் ஆளும்கட்சியின் ஆதிக்கத்தை காட்டுகிறது, என்றார்.

முன்னதாக மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய நூற்றுக்கணக்கானோர், அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பேட்டியின்போது கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், அனுஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE