செய்தித் தெறிப்புகள் @ ஏப்.12: ராகுலின் ‘தமிழ்’ குரல் முதல் மோடியின் சவால் வரை

By செய்திப்பிரிவு

‘தமிழர்கள் நலனுக்காக...’ - ராகுல் காந்தி பேச்சு" “தமிழ் மீது தொடுக்கப்படும் எந்த தாக்குதலும், தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே நான் பார்க்கிறேன். தமிழகம் வெள்ள நிவாரணம் கோரினால், அந்தத் தொகையை கொடுப்பதற்கு மத்திய அரசு மறுக்கிறது. தமிழகத்தின் வேண்டுகோளை மத்திய அரசு பிச்சை என்று கூறி நிராகரிக்கிறது. தமிழக மீனவர்கள் உதவி கோரினால், மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினாலும் ஒன்றும் கிடைக்கவில்லை” என்று நெல்லையில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

மேலும், “தமிழக மாணவர்களின் மிகப் பெரிய பிரச்னையாக நீட் தேர்வு உள்ளது. இண்டியா கூட்டணியைப் பொறுத்தவரை நீட் தேர்வு என்பது மாநில அரசின் முடிவுபடியே செயல்படுத்தப்படும். நீட் தேர்வு ஏழை மக்களுக்கு எதிரானது. நீட் தேர்வு அந்தந்த மாநிலங்களின் விருப்பம்தான். தமிழக மக்களே தங்களுடைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும். தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்” என்றார்.

அத்துடன், “விவசாயிகளைப் போல மீனவர்கள் முக்கியமானவர்கள். மீனவர்களுக்கு டீசல் மானியம், படகுகளுக்கு காப்பீடு, கிரெடிட் கார்டு உள்ளிட்டவை வழங்கப்படும். உள்நாட்டு மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும்.

கலாசாரம், மொழியை பாதுகாக்க தொடுக்கப்படும் போரே இந்தத் தேர்தல். நானும், காங்கிரஸ் கட்சியும் மக்களுடன் இருப்போம். நரேந்திர மோடி மட்டுமல்ல, உலகின் எந்தவொரு சக்தியாக இருந்தாலும் தமிழ் மொழியையோ, கலாச்சாரத்தையோ தொட்டுப் பார்க்க முடியாது என்று உறுதியளிக்கிறேன். இந்திய அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க தொடுக்கப்படும் இந்தப் போரில் இண்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” என்று ராகுல் காந்தி பேசினார்.

“ராகுல் காந்திதான் நமது கனவை நிறைவேற்றக் கூடிய தலைவர்!”: நெல்லைக் கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்பி, “தமிழகத்தில் இருக்கும் திராவிட மாடலின் தொடர்ச்சியாக இந்த நாட்டின் அரசமைப்பு இருக்க வேண்டும் என்ற நமது கனவை நிறைவேற்றக் கூடிய தலைவர் ராகுல் காந்திதான்” என்றார்.

‘தமிழகத்தில் இதுவரை ரூ.74 கோடி பறிமுதல்’: “மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ.74 கோடியை வருமான வரித் துறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். மேலும், மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு எந்தத் தடையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

கோவைக்கு அண்ணாமலையின் 100 வாக்குறுதிகள்: கோவை தொகுதியில் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறி கோவை தொகுதிக்கென தேர்தல் அறிக்கையை பாஜக வேட்பாளரும் அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அதில், கோவை விமான நிலையத்தை, உலகத் தரத்திற்கு விரிவாக்கம் செய்து சர்வதேச விமான முனையமாக மேம்படுத்தப்படும்; கோவை மெட்ரோ திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்; தமிழகத்தில் இரண்டாவது ஐஐஎம் கோவையில் நிறுவப்படும் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

மேகேதாட்டு விவகாரம்: முதல்வருக்கு அன்புமணி கேள்வி: “மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகேதாட்டு அணை கட்டப்படும் என சித்தராமையா பேசி மூன்று நாட்களாகியும் முதல்வர் ஸ்டாலின் மவுனம் ஏன்?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

2004-ன் முடிவுதான் பாஜகவுக்கு கிட்டும்: சசி தரூர்: பாஜகவுக்கு 2004 மக்களவைத் தேர்தலில் என்ன முடிவு கிடைத்ததோ, அதேபோன்ற ஒரு முடிவுதான் இந்த தேர்தலிலும் அக்கட்சிக்குக் கிடைக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபர்கள் 2 கைது: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் உள்பட வழக்கில் தொடர்புடைய இருவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அப்துல் மதீன் அகமது தாஹா (வயது 30), உணவகத்தில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே , “இந்தப் பிரச்சினையை ஏதோ தொழில் போட்டியின் விளைவு என்பது போல் கர்நாடக காங்கிரஸ் திசை திருப்ப முயற்சித்தது. இப்போது சந்தேக நபர்கள் கொல்கத்தாவின் கைதாகியுள்ளனர். இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தீவிரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக இருக்கிறது” என கர்நாடக மாநில பாஜக பொதுச் செயலாளர் அஷ்வத் நாராயண் கவுடா விமர்சித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி , “ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதான இருவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களே அல்ல. அவர்கள் இங்கே ஒளிந்து கொண்டிருந்தனர். அவர்கள் இங்கே வந்த 2 மணி நேரத்திலேயே சிக்கியுள்ளனர். மேற்கு வங்கத்தில் அமைதி இருந்தால் பாஜகவினாரல் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான, பிஹார் மாநிலங்கள் எல்லாம் பாதுகாப்பானதாக இருக்கிறதா?” என்று பேசினார்.

“குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக சதி” -அதிஷி: “டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது. கேஜ்ரிவால் அரசை சீர்குலைக்க அரசியல் சதி நடக்கிறது” என்று டெல்லி அமைச்சர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.

வெப்ப அலையால் 24 கோடி குழந்தைகள் பாதிக்கும் அபாயம்: காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்த ஆண்டு ஏற்படக்கூடிய அதீத வெப்ப அலையில் சிக்கி கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் உள்ள 24 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

சட்டப்பிரிவு 370 - காங்கிரஸுக்கு பிரதமர் மோடி சவால்: இந்தியாவில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எந்த ஓர் அரசியல் கட்சியாவது, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்று சொல்லத் தயாரா? ஒருவேளை அவர்கள் அவ்வாறு சொன்னால் நாடு அவர்களை திரும்பிக் கூட பார்க்காது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

ஒலிம்பிக் குழு பொறுப்பில் இருந்து மேரி கோம் விலகல்: எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுக்கான இந்திய குழுவின் திட்டத் தலைவர் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். இதனை இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷா உறுதி செய்துள்ளார்.

ஓபிஎஸ் அணி நிர்வாகிகளால் பாஜக கூட்டணியில் அதிருப்தி: ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரச்சாரம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் ராமநாதபுரத்துக்கு படையெடுப்பதால் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கர்நாடக பாஜக மூத்த தலைவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்: கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, சிவமோகா மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு: கோவையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே “மக்களின் அன்பு காரணமாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது, தாமதம் ஆவது சகஜம்தான். ஆவாரம்பாளையத்தில் காவல் துறையினரும் இருந்தனர். நான் மைக்கில் பேசி பிரச்சாரம் செய்திருந்தால் அந்த வீடியோவை அவர்களை வெளியிடச் சொல்லுங்கள். நான் சென்ற இடங்களில் எல்லாம் காவல் துறையினர், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் ஆணையத்தின் வீடியோப் பதிவு குழுவினர் இருந்தனர். பாஜகவைப் பார்த்து திமுக பயப்படுகிறது” என்று தன் மீதான வழக்குப் பதிவு குறித்த கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

“எனக்கு எதிராக சஞ்சய் சிங் சதி செய்கிறார்” - வினேஷ் போகத்: ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் தான் பங்கேற்பதை தடுக்க மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் முயன்று வருவதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். தன்னை ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்க வைப்பதற்கான சதி நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்