திருநெல்வேலி: “இந்தியாவில் உள்ள இளைஞர்களை வேலையில்லாத் திண்டாட்ட நிலைக்கு பிரதமர் மோடி தள்ளியிருக்கிறார். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். மத்திய அரசில் 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அந்த 30 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவோம்” என்று நெல்லையில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “எல்லாவற்றுக்கும் முன்பாக, தமிழகம் வருவதை நான் நேசிக்கிறேன். தமிழக மக்களை நெஞ்சம் நிறைந்த அன்போடு நேசிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, தமிழக மக்களின் பண்பாடு, கலாச்சாரம், மொழி என்னை மிகவும் ஈர்த்த ஒன்று.
நான் எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள விரும்புகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழகத்தைப் பார்க்கிறேன். தமிழகத்தின் கலாச்சாரம், தொன்மையான பண்பாடு, அற்புதமான கவிஞர்கள், அவர்களுடைய சிந்தனையின் தாக்கம், தமிழ் மொழியை நான் படிக்கவில்லை என்றாலும், அவர்களின் வரலாற்றை நான் படித்த காரணத்தால், இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக தமிழகத்தை நான் பார்க்கிறேன்.
பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்ற பேராளுமைகளை தந்திருக்கிறது தமிழகம். இந்தக் கூட்டம் முழுவதுமே இவர்கள் குறித்து முழுமையாக பேசிக் கொண்டிருக்க முடியும். சமூக நீதியின் பாதையில் எப்படி பயணிக்க வேண்டும் என்பதை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு தமிழகம்தான் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது. எனவேதான் இந்திய ஒற்றுமை யாத்திரையை நான் தமிழகத்தில் இருந்து தொடங்கினேன். இந்த மாபெரும் தலைவர்களின் தத்துவங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4000 கி.மீ தூரம் நடந்தேன்.
» “புதிய ஞானத்தை வழங்குகிறது ராமாயணம்” - நடிகர் யஷ் பகிர்வு
» “எப்போதுமே சிறந்த நாளாக அமையாது” - அஸ்வினை ஆதரித்த சங்கக்காரா
தமிழகம் வரும்போதெல்லாம் இங்குள்ள பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் நான் தலை வணங்குகிறேன். இந்தியாவிலேயே தமிழகத்தில் இருந்துதான் பல்வேறு செய்திகளையும், பண்பாட்டுத் தரவுகளையும் கற்றுக் கொள்ள முடியும். தமிழகம் வரும்போதெல்லாம் இங்குள்ள மக்கள் என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் அளவற்ற அன்பு காட்டுகிறார்கள். இது அரசியலுக்கு அப்பாற்றபட்ட அருமையான உறவு. தமிழக மக்கள் மீது நான் கொண்டிருப்பது அரசியல் சார்ந்த உறவல்ல, அது ஒரு குடும்ப உறவு.
தமிழக விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியபோது, எனது உறவினர்களே போராட்டத்தில் ஈடுபட்டது போன்ற ஒரு வலியை உணர்ந்தேன்.
இந்தியாவில் இன்று கருத்தியல் போர் நடந்து வருகிறது. தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் போதித்த சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம், விடுதலைஒருபுறம். பிரதமர் நரேந்திர மோடி போன்றவர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தூக்கிப் பிடிக்கும் வெறுப்பும் துவேஷமும் மறுபுறம். பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே தலைவர் என்று கூறி வருகிறார். தமிழ் மொழி இந்தியாவில் உள்ள எந்த மொழியையும் விடவும் குறைந்தது அல்ல. இந்த நாட்டில் பல்வேறு மொழிகள், பண்பாடு, கலாச்சாரங்கள் இருக்கின்றன. ஆனால், இவை எதுவுமே ஒன்றுக்கு ஒன்று தாழ்ந்தது இல்லை. தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. ஒவ்வொருவரும் தங்களை எப்படி புரிந்துகொள்கின்றனர் என்பதற்கான வாழ்க்கை முறை.
தமிழ் மீது தொடுக்கப்படும் எந்த தாக்குதலும், தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே நான் பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை, தமிழர்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் எல்லாவற்றையும் விட எனக்கு மிக மிக முக்கியம். தமிழ் , வங்காளம் உள்ளிட்ட இங்கு பேசப்படும் பல மொழிகள் இல்லாமல் இந்தியா என்ற ஒரு நாடே இருக்க முடியாது. இந்தியாவில் உள்ள அனைத்து கலாச்சாரங்களும், பண்பாடும், மொழியும் புனிதமானதாக கருதுகிறோம். ஆனால், பாஜகவினர் ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளனர்.
இந்தியாவில் 83 விழுக்காடு இளைஞர்கள் வேலையில்லாத நிலையில் இருக்கின்றனர். பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட இப்போது இருக்கும் இந்தியா சமச்சீரற்ற இந்தியாவாக இருக்கிறது. 70 விழுக்காடு இந்திய மக்களிடம் இருக்கும் அளவுக்கான செல்வத்தை நாட்டில் உள்ள 21 மிகப்பெரிய பணக்காரர்கள் தங்கள் கைவசம் வைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் 30 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால், நாட்டின் பிரதமரோ அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய தயாராக இல்லை. ஆனால், 16 லட்சம் கோடி கடனை மிகப்பெரிய பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்திருக்கிறார்.
இரண்டு, மூன்று மிகப் பெரிய தொழிலதிபர்கள், அவர்கள் யாரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அரசின் ஒப்பந்தங்கள், மற்றும் பிற சலுகைகளை அந்த தொழிலதிபர்கள் மட்டுமே அனுபவித்து வருகிறார்கள். பிரதமருக்கு அதானி நெருக்கமானவராக இருப்பதால், இந்த நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிறுவனங்கள், சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட அனைத்தும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அனைத்தும் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் சீரழிந்து இருக்கிறது. இந்தியாவின் அனைத்து மத்திய அமைப்புகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை ஆகியவை எதிர்க்கட்சியினரை அழிக்கும் ஆயுங்களாக பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் தேர்தல் ஆணையரை பிரதமர் தேர்ந்தெடுக்கிறார்.
தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது. முதல்வர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இவை அனைத்தும் செய்யப்படுவது, இந்தியாவில் இருக்கும் அந்த இரண்டு மூன்று தொழிலதிபர்கள் நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் கொள்ளை அடிப்பதற்கான வாய்ப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
அதனால்தான், தமிழகம் வெள்ள நிவாரணம் கோரினால், அந்தத் தொகையை கொடுப்பதற்கு மத்திய அரசு மறுக்கிறது. தமிழகத்தின் வேண்டுகோளை மத்திய அரசு பிச்சை என்று கூறி நிராகரிக்கிறது. தமிழக மீனவர்கள் உதவி கோரினால், மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினாலும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி இந்த நாட்டின் பொருளாதார வசதிகள், ஊடகங்களை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். பாஜகவைச் சேர்ந்த எம்.பி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்று கூறுகிறார்.
இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று பார்த்த உலகின் பிற நாடுகள், ஜனநாயகம் அழிந்த நாடாக பார்க்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியும் இண்டியா கூட்டணியும், என்ன செய்ய நினைக்கிறது என்பதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் உள்ள இளைஞர்களை வேலையில்லாத் திண்டாட்ட நிலைக்கு பிரதமர் மோடி தள்ளியிருக்கிறார். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம்.
மத்திய அரசில் 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அந்த 30 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவோம். வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். 6 மாதம் அல்லது ஓராண்டு தனியார் வேலைவாய்ப்பு வழங்கி, பின்னர் அரசு வேலைக்கு தயார் செய்யப்படுவார்கள். பொறியியல், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தை உருவாக்குவோம். தகுதியான ஒவ்வொரு இளைஞர், இளம்பெண்கள் தனியார், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணி பெரும் வகையில் ஓராண்டு பயிற்சியளிப்பதோடு, ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
தமிழக மாணவர்களின் மிகப்பெரிய பிரச்னையாக நீட் தேர்வு உள்ளது. இண்டியா கூட்டணியைப் பொருத்தவரை நீட் தேர்வு மாநில அரசின் முடிவுபடியே செயல்படுத்தப்படும். நீட் தேர்வு ஏழை மக்களுக்கு எதிரானது. நீட் தேர்வு அந்தந்த மாநிலங்களின் விருப்பம்தான். தமிழக மக்களே தங்களுடைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும். தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க சட்டம் கொண்டு வரப்படும். ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை பெற அரசு உறுதியளிக்கும். பிரதமர் தேசத்தின் பெரிய பணக்காரர்களுக்கு கடன் நிவாரணத்தை அளித்துள்ளார். ஆனால், எங்களைப் பொருத்தவரை ஏழை விவசாயிகளுக்கு கடன்களைத் தள்ளுபடி செய்ய விரும்புகிறோம்.
தமிழகத்தின் பெண்களும், இந்தியாவின் பெண்களும் தேசத்தின் எதிர்காலத்தைப் பார்த்துக் கொள்பவர்கள். அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இதனால் ஏழை பெண்களுக்காக சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். வறுமையின் பிடியில் உள்ள குடும்பங்களுக்கு இத்திட்டம் உதவும். ஏழை குடும்பத்திலும் ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். இதன்மூலம் வறுமையில் தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.8,500 ஆயிரம் வீதம் கிடைக்கும். இந்தியாவில் இருந்து வறுமையை நிரந்தரமாக விரட்ட முடிவு செய்துள்ளோம்.
அரசு வேலைகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வோம். மக்களவை, சட்டப்பேரவையில் உடனடியாக மகளிருக்கான 50 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் இருமடங்காக்கப்படும். இந்நாட்டின் மீனவர்களை பிரதமர் நினைப்பதில்லை. விவசாயிகளைப்போல மீனவர்கள் முக்கியமானவர்கள். ஆபத்தான கடலில் சென்று மக்களுக்கு உணவு பொருள் தருகிறார்கள். அவர்களுக்காக தனியாக வாக்குறுதிகள் அளிக்கப்படும். மீனவர்களுக்கு டீசல் மானியம், படகுகளுக்கு காப்பீடு, கிரெடிட் கார்டு உள்ளிட்டவை வழங்கப்படும். உள்நாட்டு மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும்.
கலாசாரம், மொழியை பாதுகாக்க தொடுக்கப்படும் போரே இந்த தேர்தல். நானும், காங்கிரஸ் கட்சியும் மக்களுடன் இருப்போம். நரேந்திர மோடி மட்டுமல்ல உலகின் எந்தவொரு சக்தியாக இருந்தாலும் தமிழ் மொழியையோ, கலாச்சாரத்தையோ தொட்டுப் பார்க்க முடியாது என்று உறுதியளிக்கிறேன். இந்திய அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க தொடுக்கப்படும் இந்தப் போரில் இண்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” என்று ராகுல் காந்தி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago