ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட பெண்ணை தாக்கியதாக பாஜகவினர் மீது போலீஸில் புகார் @ திருப்பூர்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக பாஜகவினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பி.முருகானந்ததுக்கு ஆதரவு கோரி, திருப்பூர் அனுப்பர்பாளையம் ஆத்துப்பாளையம் பகுதிகளில் வாக்கு சேகரிப்புப் பணியில் பாஜகவினர் ஈடுபட்டிருந்தனர். அதே பகுதியில் கடை நடத்தி வரும் திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா (37) துணிக்கடை மற்றும் தையல் நிலையத்துக்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சங்கீதா, 'பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரி போட்டது’ குறித்து பாஜகவினரிடம் கேட்டுள்ளார். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சிலர், அரிசி விலையேற்றம், கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம் குறித்து அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார்கள். இதில் ஆத்திரம் அடைந்த பாஜகவினர், பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சங்கீதா கடைக்குள் வந்துவிட்டார்.

சிறிதுநேரம் கழித்து 20-க்கும் மேற்பட்ட பாஜகவினர் சங்கீதாவின் கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது, ''நீ யார் எங்களிடம் கேள்வி கேட்க?'' எனக் கூறி தகாத வார்த்தையில் பேசி தாக்கி உள்ளனர். இதனை சங்கீதா அலைபேசியில் வீடியோவாக எடுத்துள்ளார். இதனை பாஜகவினர் தடுக்கும் வகையில் அவரிடம் அலைபேசியை பறிக்கும்போது லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு சலசலப்பு எழுந்தது. அருகில் இருந்தவர்கள் வந்து சமாதானம் செய்தனர்.

இது தொடர்பாக சங்கீதா வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாஜகவை சேர்ந்த சின்னசாமி உள்ளிட்ட 10 பேர் மீது புகார் அளித்தார். போலீஸார் தரப்பில் மனு ரசீது எண் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜகவினரும் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, சங்கீதா கேள்வி எழுப்பும் வீடியோ மற்றும் தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், திருப்பூர் எம்.எல்.ஏ., க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார் இன்று மாலை சந்தித்து நடந்த விவரங்கள் தொடர்பாக கேட்டறிந்து. போலீஸார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE