மயிலாடுதுறை: மயிலாடுதுறை தொகுதியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், சிறுபான்மையினர் கணிசமான அளவில் உள்ளனர். இத்தொகுதியில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆர்.சுதா, அதிமுக சார்பில் பி.பாபு, பாமக சார்பில் ம.க.ஸ்டாலின், நாம் தமிழர் சார்பில் பி.காளியம்மாள் உட்பட மொத்தம் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பிரதான 4 கட்சி வேட்பாளர்களிடையே போட்டி நிலவுகிறது.
சுதாவுக்கு ‘கை’ கொடுக்கும் கூட்டணி பலம்: காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார். இவர் தொகுதிக்கு புதியவர் என்பதால், கூட்டணிக் கட்சியினரை நம்பி, குறிப்பாக திமுகவினரின் களப்பணியை நம்பி களமிறங்கி உள்ளார். இவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன் உள்ளிட்டோர் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், எம்.பி. திருச்சி சிவா, முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும், நூறு நாள் வேலைக்கான ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் வாக்குறுதிகளை அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் நேற்று மயிலாடுதுறை அருகே நீடூர், வடகரை, அரங்கக்குடி, சீர்காழி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். கூட்டணிக் கட்சியினர் எப்படியும் ‘கை’ தூக்கி விட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் வலம் வருகிறார் ஆர்.சுதா.
» “தமிழகத்தில் வருமான வரித் துறை மூலம் இதுவரை ரூ.74 கோடி பறிமுதல்” - சத்யபிரத சாஹு தகவல்
» ‘முடிவு’க்கு வந்த சபதம்: பாராமுல்லா தொகுதியில் ஒமர் அப்துல்லா போட்டி!
இலை துளிர்த்துவிடும் நம்பிக்கையில் பாபு: அதிமுக சார்பில் போட்டியிடும் பி.பாபு, தேர்தல் களத்துக்கு புதியவர். இவர், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும், பூம்புகார் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.பவுன்ராஜின் மகன். பொறியியல் பட்டதாரியான பி.பாபு, அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளராக உள்ளார். அதிமுக, தேமுதிக கட்சிகளின் வாக்கு வங்கி பலத்தையும், தந்தையின் அரசியல் செல்வாக்கையும் நம்பி வருகிறார்.
இவருக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். தன்னை வெற்றி பெறச் செய்தால் மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மயிலாடுதுறை- சிதம்பரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கவும், தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரயில்வே கிராசிங்குகளில் தேவையான இடங்களில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்து வருகிறார். இவர் நேற்று கொள்ளிடம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வெற்றிக் கனியை பறிக்க ம.க.ஸ்டாலின் தீவிரம்: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் ம.க.ஸ்டாலின், ஆடுதுறை பேரூராட்சித் தலைவராகவும் உள்ளார். சொந்த செல்வாக்கு, பாமகவுக்கு உள்ள வாக்கு வங்கி, கூட்டணிக் கட்சியான பாஜகவின் பலம் இவற்றை நம்பி களத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கு இதுவரை தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன்சம்பத் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். அம்மாபேட்டை தனி வருவாய் வட்டம், மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி, சீர்காழியில் சட்டக் கல்லூரி ஆகியவை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
கொள்ளிடம் ஆற்றில் ஒவ்வொரு 3 கி.மீ தொலைவுக்கும் ஒரு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியுடன் போட்டியிட்ட பாமக வேட்பாளர் 1.44 லட்சம் வாக்குகள் பெற்றார். கூட்டணி பலத்தால் ‘மாம்பழம்’ வெற்றிக் கனியாக மாறும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இவர் நேற்று செம்பனார்கோவில், சீர்காழி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சார பலத்தை நம்பி காளியம்மாள்: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பி.காளியம்மாள், அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ஏற்கெனவே வட சென்னை மக்களவைத் தொகுதியிலும், பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிட்ட அனுபவம் உள்ளவர். மக்கள் மத்தியில் தீவிர பேச்சாளராக, சமூக செயல்பாட்டாளராக அறியப்பட்ட இவர், திமுக, அதிமுக, பாஜக கட்சிகளின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
மயிலாடுதுறையில் புதை சாக்கடை பிரச்சினைக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப முறைகளை கையாண்டு தீர்வு காண முயற்சிப்பேன். தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, மணல்மேடு கூட்டுறவு நூற்பாலை ஆகியவற்றை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை தெரிவித்து வருகிறார்.
மன பலத்தால் பண பலத்தை வெல்வோம் என்று கூறும் இவர், தொகுதியில் உள்ள இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் என 2 லட்சம் பேர் முழுமையாக தம்மை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை யுடன் உள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago