மதுரை | உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி பாதுகாப்புப் பணிகள் தீவிரம்

By என். சன்னாசி

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) ரோடு ஷோ மேற்கொள்கிறார். ஏற்கெனவே இரண்டு முறை மதுரையில் அவரது பிரச்சாரத்துக்கு திட்டமிட்டு அவை ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று ரோடு ஷோ நடைபெறவுள்ளது. எனவே, பாதுகாப்புக் காரணங்களுக்காக மாலை 3 மணி முதல் வணிக நிறுவனங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசனை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை நேதாஜி சாலை தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்துண் பகுதி வரை ரோடு ஷோ மூலமாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் உள்துறை அமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனங்களுக்கு தடை: மதுரை நேதாஜி சாலை தெற்கு ஆவணி மூல வீதி விளக்குத்தூண் பகுதிகளில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், பொதுமக்கள், வணிகர்கள் நடந்து சென்று வருகின்றனர்.

மேலும் ரோடு ஷோ நடைபெறும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே நிற்கக்கூடிய வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடங்களில் நின்றபடி காவல்துறையினர் முழுவதுமாக கண்காணித்து வருகின்றனர். இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை ரோடு ஷோ நடைபெறவுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக மாலை 3 மணி முதல் வணிக நிறுவனங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் திணறல்: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனால், இன்று மாலையே சுவாமி வீதி உலா உள்ள நிலையில் பக்தர்கள் அதற்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அமித் ஷா வருகையை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE