தமிழகத்தில் மக்களை குளிர்வித்த மழை - அடுத்த 3 மணி நேரத்துக்கு மேலும் பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நேற்றும், இன்றும் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை மையம் எச்சரித்திருந்த நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பத்துக்கு இதமாக மழையும் பெய்து மக்கள் மனங்களைக் குளிர்வித்துள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதிகளில் புதிய காற்று சுழற்சி காரணமாக ஏப்ரல் 12 முதல் தென் மாவட்டங்களில் மழை பெய்யும். ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று மற்றும் புதிய காற்று சுழற்சியுடன் இணைந்த மழை என்பதால் வடகிழக்கு பருவமழை போல தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், தென் மாவட்டங்களில் பல இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. தென்காசி நகர் பகுதி, குத்துக்கல்வலசை, கனகபிள்ளை வலசை, செங்கோட்டை, குற்றாலம் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இது அந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாக நிலவிவந்த 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தணிக்கும் விதமாக அமைந்தது.

இதேபோல், மதுரை சோழவந்தான் பகுதியில் திடீரென தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பனகுடி, ராதாபுரம் , வள்ளியூர், வடக்கன் குளம் என நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இன்று (வெள்ளிகிழமை) காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து கடந்த 10 நாட்களாக நிலவிவந்த வெப்பத்தை தணித்து வருகிறது.

கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலை சுற்றியுள்ள இடங்களிலும் இன்று காலை முதல் வெயிலுக்கு இதமாக மழை பெய்து வருகிறது.

நீலகிரியில் நேற்றிரவு முதல் மழை பெய்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரியில் 12 செ.மீ மழைப்பொழிவு இருந்தது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான உசிலம்பட்டி அருகே நேற்று இரவு சில இடங்களில் சாரல் மழை பெய்து வெப்பத்தை தணித்தது.

அடுத்த 3 மணிநேரத்தில் மழை...: இதற்கிடையே, தஞ்சாவூர், நெல்லை, திருவாரூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, அரியலூர், புதுக்கோட்டை. சிவகங்கை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE