அமித் ஷா இன்று தமிழகம் வருகை

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்தில் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் மதுரை வரும் அமித் ஷா, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து மதுரை செல்கிறார்.

இன்று மாலை மதுரையில் `ரோடு ஷோ' மூலம் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மதுரையில் இரவு தங்குகிறார்.

நாளை காலை கன்னியாகுமரி செல்லும் அவர் `ரோடு ஷோ' மூலம் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து, திருவாரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அங்கிருந்து தென்காசி செல்லும் அவர் `ரோடு ஷோ' மூலம் பாஜக வேட்பாளர் ஜான்.பாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். பின்னர், இரவு 8.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

ஏற்கெனவே அறிவித்த அமித் ஷாவின் பயணத் திட்டத்தில், சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் ‘ரோடு ஷோ’ பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்தது. இந்நிலையில், ரோடு ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், காரைக்குடி நிகழ்ச்சியைத் தவிர, அமித் ஷாவின் மற்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE