ப.சிதம்பரத்தை பேசவிடாமல் இடைமறித்த பெண்: மானாமதுரையில் கடும் வாக்குவாதம்

By செய்திப்பிரிவு

மானாமதுரை: மானாமதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை பேசவிடாமல் இடைமறித்த பெண்ணால் சலசலப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து, அவரது தந்தையும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவரைப் பேசவிடாமல் இடைமறித்த கங்கையம்மன் குடியிருப்பைச் சேர்ந்த பெண்ஒருவர், தொடர்ந்து குறைகளைக் கூறிக் கொண்டே இருந்தார்.

இதையடுத்து ப.சிதம்பரம், தான் பேசி முடித்ததும் குறைகளைத் தெரிவிக்குமாறு கூறிவிட்டு, தொடர்ந்து பேசினார். பேசி முடித்த பிறகு, மீண்டும் அந்தப் பெண்ணிடம் உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார்.

அப்போது அந்த பெண், சரியாகதண்ணீர் வரவில்லை; பலருக்கு பட்டா இல்லை; சாலை வசதிஇல்லை என அடுக்கிக் கொண்டேபோனார். அவரை சமாதானப்படுத்த முயன்றும் தொடர்ந்து புகார் தெரிவித்துக் கொண்டே இருந்ததால், பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய ப.சிதம்பரம், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்த பெண்களிடம், எம்எல்ஏ, ஊராட்சித் தலைவரிடம் குறைகளை சொல்ல வேண்டியது தானே? இங்கே ஏன் சொல்கிறீர்கள்? என்று கேட்டனர். அப்போது அந்தப் பெண்கள், தேர்தல் நேரத்தில்தான் வருகிறீர்கள்.

அப்போதுதானே குறைகளைச் சொல்ல முடிகிறது? என்றனர். இதையடுத்து காங்கிரஸாரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE