புதுச்சேரி பல்கலை. பதிவாளர் தேர்வு நடைமுறைகளை ஜூன் 30-க்குள் முடிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: புதுச்சேரி பல்கலைக்கழகப் பதிவாளர் தேர்வு நடைமுறைகளை ஜூன் 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பொறுப்பு துணை வேந்தருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக காலியாக உள்ள பதிவாளர் பதவியை நிரப்ப உத்தரவிடக் கோரி, புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழகம் தரப்பில், ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதிவாளரை தேர்வு செய்ய தேர்வுக்குழு அமைக்கப்பட்டு விட்டது. இக்குழுவிடம் 64 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். மக்களவைத் தேர்தல் அறிவிப்பு காரணமாக நேர்முகத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மே மாத இறுதிக்குள் நேர்முகத் தேர்வை நடத்த வேண்டும். பதிவாளர் தேர்வு நடைமுறைகளை ஜூன் 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணை வேந்தருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE