‘பதிலி வாக்கு’ முறையில் வேறொருவர் வாக்களிக்கலாம்: ராணுவ வீரர்களுக்கான சலுகை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ராணுவம் போன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோருக்கு தங்களுக்கு பதில் வெறொருவரை வாக்குச் சாவடிக்கு அனுப்பி ‘பதிலி வாக்கு’ முறையில் வாக்களிக்கும் சலுகை தேர்தலில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் 100 சதவீத இலக்கை எட்டுவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், பல்வேறு வகை யான சலுகைகளையும் வழங்கி வருகின்றனர். 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்கள், மாற்றுத் திறனாளிகள் அவர்கள் இடத்திலிருந்தே தபால் மூலம் வாக்குப் பதிவு செய்யும் நடை முறை தொடங்கப்பட்டுள்ளது. அதுபோல் ராணுவம், எல்லைப் பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபடுவோர் தங்கள் சார்பாக தேர்தலில் வெறொரு நபரை அனுப்பி வாக்களிக்கும் பதிலி வாக்கு முறை இந்த மக்களவைத் தேர்தலிலும் பின்பற்றப்படுகிறது.

இது குறித்து தேர்தல் அலு வலர்கள் கூறியதாவது: பதிலி வாக்கு அளிக்க விரும்பும் ராணுவ வீரர்கள், மற்றொரு நபரை தனது சார்பில் வாக்குச் சாவடிக்கு அனுப்பி வாக்களிக்கும் சலுகை தேர்தலில் வழங்கப்பட்டு வரு கிறது. இந்த வாக்காளர்களை வகைப்படுத்தப்பட்ட சேவை வாக்காளர்கள் (classified service voters) என அழைக்கிறோம். இவர்கள் மட்டுமே பதிலி வாக்காளரை நியமித்து, இவர்கள் சார்பில் வேறொரு நபரை வாக்களிக்க அனுமதிக்க முடியும்.

இதற்கான வாக்காளர் பட்டியல் தனியே இருக்கும். பதிலி நபர் வாக்களிக்க வரும்போது அவரது நடுவிரலில் அழியாத மை இட வேண்டும். காரணம், பதிலி நபர் தனக்கான வாக்கை பதிவு செய்தபோது ஆள்காட்டி விரலில் மை இடப்பட்டிருப்பதால் மாற்று விரலில் இடப்படுகிறது. 17-ஏ பதிவேட்டில் பதிலி வாக்காளரை பதிவு செய்யும்போது வரிசை எண்ணை பதிந்து மற்ற வாக்காளர் பட்டியலின் தொடர் எண்ணில் இருந்து இதனை வேறுப் படுத்திக காட்ட “பிவி“ என அடைப்புக் குறியில் எழுத வேண்டும், என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE