கடலூர்/புதுச்சேரி: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உசுப்பூர் ஊராட்சியில் ராஜேந்திரன் கார்டன் பகுதியில் (அண்ணாமலை நகர் பகுதி) குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சங்கர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சிதம்பரம்மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் திருமாவளவனுக்காக, தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் சங்கரிடம் வந்து,"உங்கள் காரில் பணம் இருப்புவைத்துக் கொண்டு, வாக்காளர்களுக்கு விநியோகப்பதாக தகவல்வந்துள்ளது. எனவே, உங்களது காரை சோதனையிட வேண்டும்" என்று கூறி, காரில் சோதனை மேற்கொண்டனர். எனினும், சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.
பின்னர் திமுக ஒன்றியச் செயலாளர் சங்கரின் வீட்டில் ரூ.6 கோடிபணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது என்று தெரிவித்து, கடலூர் மண்டல வருமான வரித் துறை உதவி இயக்குநர் பாலமுருகன் தலைமையிலான 5 அதிகாரிகள் சங்கர் வீட்டுக்குச்சென்று, சோதனை மேற்கொண்டனர். எனினும், இந்த சோதனையில் பணம் எதுவும் கிடைக்காததால், அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இந்நிலையில், வருமான வரித் துறை சோதனை குறித்து அறித்த திமுகவினர் 200-க்கும் மேற்பட்டோர், சங்கர் வீட்டின் முன் குவிந்தனர்.
இதேபோல, ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வசிக்கும் தொமுச நிர்வாகி தங்க ஆனந்தன் என்பவர் வீடு, அதிமுக ஜெயலலிதா பேரவை நிர்வாகி கானூர் பாலசுந்தரம் என்பவர் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இதில், கானூர் பாலசுந்தரம் வீட்டில் ரூ.12 லட்சம் இருந்ததாகவும், அதற்கு சரியான கணக்கு இருந்ததால் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, 2 நாள் கழித்து அவரை கடலூர் வருமான வரிதுறை அலுவலகத்துக்கு கணக்குகளுடன் வருமாறு கூறிவிட்டு, அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். தங்க ஆனந்தன் வீட்டில் எதுவும் சிக்கவில்லை.
மேலும், விருதாச்சலத்தில் பாமக நிர்வாகி சரவணன் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
புதுச்சேரியில்... இதற்கிடையில், புதுச்சேரிபாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் வீடுகளிலும் நேற்று இரவு சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அந்த சோதனையில் எவ்வளவு கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
தேர்தல் விதி மீறல்: ஓபிஎஸ் மீது வழக்கு
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் திருச்சுழி அருகே உள்ள கே.வாகைக்குளம் சென்றுள்ளார். அங்கு இரவு 11.15 மணியளவில் அவரும், ஆதரவாளர்களும் அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக திருச்சுழி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜ்குமார், பரளச்சி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில், ஓ.பன்னீர்செல்வம், அங்கயற்கண்ணி மற்றும் சிலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மருத்துவர் வீட்டில் வருமான வரி சோதனை: மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்துபவர் மருத்துவர் சக்திமோகன். அதே பகுதியில் அவரது வீடும் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வருமான வரித்துறையினர் திடீரென அவரது மருத்துவமனைக்குச் சென்று, சோதனை மேற்கொண்டனர். ஏறத்தாழ 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
மேலும், மருத்துவர் சக்திமோகன், ராமநாதபுரம் பகுதி எம்எல்ஏ ஒருவரின் நெருங்கிய உறவினர் என்றும் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலையொட்டி, மருத்துவமனையில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலின் பேரில் வருமான வரி சோதனை நடந்துள்ளதாகத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago