வாக்குப்பதிவு நாளன்று தெற்கு ரயில்வே ஊழியர்கள் வாக்களிக்க விடுப்பு கோரினால் பரிசீலிக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: மதுரை ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், ``நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல, தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் ரயில் ஓட்டுநர்கள், பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் தபாலில் தங்களின் வாக்கை செலுத்த அனுமதியளிக்க தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்”எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், ``ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குப்பதிவுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் பிப்.20-ம் தேதிக்குள் தெற்கு ரயில்வே நிர்வாகம் இதற்காக விண்ணப்பிக்கவில்லை.

அதுபோல சம்பந்தப்பட்ட வாக்காளர்களும் தபால் வாக்குரிமை கோரி கடந்த மார்ச் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவில்லை. தற்போது தபால் வாக்குப்பதிவு தொடங்கி விட்டதால் இனிமேல் கூடுதலாக தபால் வாக்குச்சீட்டுகளை அச்சடிக்க முடியாது. எனவே தற்போதைய சூழலில் ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்குரிமை கோர முடியாது” என வாதிடப்பட்டது.

அப்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில், ``ரயில்வே ஊழியர்கள் நேரில் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், “கடைசி நேரத்தில் கூடுதலாக தபால் வாக்குச்சீட்டுகளை அச்சடித்து வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. ஆனால் ரயில்வே ஊழியர்கள் நேரில் வாக்களிக்க விரும்பினால் அவர்களுக்கு விடுப்பு வழங்குவது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE