“தேர்தலுக்குப் பிறகு ஒரு திராவிட கட்சி கரைந்து போகும்” - அண்ணாமலை கணிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இரண்டு திராவிட கட்சிகளில் ஒன்று கரைந்து போகும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அண்ணாமலை கூறியதாவது: “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளும் பாஜக உள்ளே வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். எங்கெல்லாம் பாஜகவின் கை ஓங்குகிறதோ அங்கெல்லாம் இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து செயல்படுவார்கள். ஆனால் அந்த இரண்டு கட்சிகளின் வாக்காளர்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். குறிப்பாக பெண் வாக்காளர்கள்.

2024ஆம் ஆண்டு இந்த இரண்டு கட்சிகளில் ஒரு கட்சி கரைந்து போகும். காரணம், ஒரு கட்சியின் கூட்டணி பலமாக இருப்பதால் அது உடனே கரைய வாய்ப்பில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு திராவிட கட்சி கரைந்து போகும். திமுக எதிர்ப்புக்காக ஒரு கட்சி தமிழ்நாட்டுக்கு தேவையா? திமுக எதிர்ப்பு என்பது ஒரு கொள்கையே கிடையாது” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

இன்று (ஏப்.10) வேலூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “அம்மா ஜெயலலிதாவை திமுகவினர் எப்படி எல்லாம் இழிவுபடுத்தினார்கள் என்பது உங்களுக்கு தெரியும்” என்று குறிப்பிட்டார். இதற்கு முன்பு தமிழகம் வந்தபோதும் கூட எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து மேற்கோள் காட்டியிருந்தார். அப்படியிருக்க, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக குறித்து இவ்வாறு பேசியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE