“ஃப்ளாப் ஆன ரோடு ஷோ... ஊழலைப் பற்றி மோடி பேசலாமா?” - மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் @ தேனி

By செய்திப்பிரிவு

தேனி: “பிரதமரின் ‘ரோடு ஷோ’ ஃப்ளாப் ஷோ ஆன உடனே சமூக வலைதளங்களில் சென்னை வந்ததைப் பற்றி எழுதியபோது சென்னை மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போவதாக சொல்கிறார். அந்தத் திட்டத்துக்கு தடையாக இருப்பதே அவர்தான். சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால்தான் நிதி கிடைக்கவில்லை. அதனால்தான் திட்டப் பணிகள் தாமதமாகிறது. இத்தனை குளறுபடிக்கும் காரணம், மோடி. ஆனால், இத்தனையும் மறைத்து, பச்சைப் பொய் பேசுகிறார்” என்று தேனியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (ஏப்.10) தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில், தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை அறிமுகப்படுத்தி, இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது உங்கள் தொகுதிக்கான எம்.பி.யைத் தேர்வு செய்வதற்காக மட்டுமல்ல, நீங்கள் அளிக்கும் வாக்கு மூலமாகத்தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வர முடியும். நீங்கள் அளிக்கும் வாக்கு மூலமாகத்தான், மக்களைப் பற்றி இரக்கப்படும் ஒரு மனிதர் பிரதமர் ஆகும் சூழ்நிலை உருவாகும். நீங்கள் அளிக்கும் வாக்கு மூலமாகத்தான், தமிழகத்தை மதிக்கும் ஒருவர் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

எப்படிப்பட்ட பிரதமர் வர வேண்டும் என நாம் நினைக்கிறோமோ, அதேபோல், இப்போதைய பிரதமர் மோடி, எக்காரணத்தை கொண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை மனதில் வைத்து நாம் வாக்களிக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியாவை அமளியான இந்தியாவாக மாற்றிவிடுவார்கள். ஒருதாய் மக்களாக வாழும் நம்முடைய மக்கள் மனதில் வேறுபாட்டு விதைகளைத் தூவி, இந்தியாவையே நாசம் செய்துவிடுவார்கள்.

மற்றொரு முறை மோடி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது. தேர்தல் என்பதே ஜனநாயகப்பூர்வமாக இருக்காது. மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. சட்டமன்றங்கள் இருக்குமா என்பதே சந்தேகம். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றை சர்வாதிகார நாடாக மாற்றிவிடுவார்கள். இவை அனைத்துக்கும் மேலாக, சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிடுவார்கள்.

இத்தனை நாளாக வெளிநாடுகளுக்கு டூர் சென்ற பிரதமர் மோடி, தேர்தல் வந்துவிட்டதால், உள்நாட்டுக்குள் டூர் அடிக்கிறார். அவர் ஏதோ ஷோ காட்ட வருகிறார் என்று நான் சொல்லவில்லை. அவரே ‘ரோடு ஷோ’ காட்டுகிறேன் என்றுதான் சொல்லி இருக்கிறார். நேற்று சென்னையில் எந்த இடத்தில் ஷோ காட்டினார்? தியாகராயர் நகர். பிரதமர் அவர்களே, அந்த இடத்துக்கு ஏன் அந்தப் பெயர் என்று உங்களுக்குத் தெரியுமா? நீதிக்கட்சித் தலைவர் தியாகராயர் – சவுந்திர பாண்டியனார் பெயரில் இருக்கும் பாண்டி பஜார், பனகல் அரசர் பெயரில் இருக்கும் பூங்கா என்று திராவிடக் கோட்டமாக இருக்கும் இடத்தில் உங்கள் ஷோ காட்டினால் எடுபடுமா?

உங்கள் ஷோ - ஃப்ளாப் ஷோ ஆன உடனே, சமூக வலைத்தளங்களில், சென்னை வந்ததைப் பற்றி எழுதியபோது, சொல்கிறார், சென்னை மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போகிறாராம். பிரதமர் மோடி அவர்களே, அந்தத் திட்டத்துக்கு தடையாக இருப்பதே நீங்கள்தான். சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால்தான் நிதி கிடைக்கவில்லை. அதனால்தான் திட்டப்பணிகள் தாமதமாகிறது. கடந்த 2020-ல் மத்திய உள்துறை அமைச்சர் இந்தத் திட்டத்துக்காக அடிக்கல் நாட்டினார். ஆனால், அனுமதி கொடுக்கவில்லை.

நான் முதல்வரான பிறகு முதல் சந்திப்பில் இருந்து கோரிக்கை வைக்கிறேன். பிரதமரை நேரில் சந்தித்தும் பலனில்லை. மதுரை எய்ம்ஸ் போன்று, சென்னை மெட்ரோவும் அடிக்கல்லோடு நிற்கக் கூடாது என்று இப்போது மாநில அரசின் நிதியில் இருந்து, மெட்ரோ பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கும் நிலைமை. இந்தப் பணிகளால் ஆண்டுக்கு நமக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 12 ஆயிரம் கோடி ரூபாய். இத்தனை குளறுபடிக்கும் காரணம், மோடி. ஆனால், இத்தனையும் மறைத்து, பச்சைப் பொய் பேசுகிறார்.

சென்னையில் ஷோ காட்டிய மோடி, காலையில் வேலூர் சென்றிருக்கிறார். அங்கு அவர் இந்தியில் பேசும்போது கூட்டம் கை தட்டுகிறது. பலருக்கு என்ன சந்தேகம் என்றால், வெளிமாநிலங்களில் இருந்து, கூட்டத்துக்கு ஆட்களை அழைத்துக் கொண்டு வருகிறார்களோ என்பதுதான். இதில், தமிழகத்தை வளர்க்கப் போகிறேன் என்று இந்தியில் பேசி சபதம் எடுக்கிறார்.

திராவிட மாடலில் தமிழகம் வளர்ந்திருக்கிறது, வளர்ந்து கொண்டிருக்கிறது, வளர்ந்து கொண்டே இருக்கும். இதை எந்த மோடி மஸ்தான் வித்தைகளாலும் தடுக்க முடியாது. அதற்குப்பிறகு, வழக்கம்போல் குடும்ப அரசியல், ஊழல் கட்சி என்று தேய்ந்துப் போன ரெக்கார்டையே போட்டார். இதற்கு நான் எத்தனையோ முறை விளக்கம் சொல்லிவிட்டேன்.

உண்மையாக, ஊழலுக்கு ஒரு யூனிவர்சிட்டி கட்டி, அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டும் என்றால், அதற்குப் பொருத்தமான நபர், இந்தியாவில் மோடியை விட்டால் வேறு யாரும் கிடையாது. ஏன் என்றால், ஊழலைச் சட்டப்பூர்வமாக்கிய சாதனையாளர் மோடிதான். தேர்தல் பத்திரங்கள் மூலமாக ஊழல் பணத்தை நேரடியாகக் கட்சி வங்கிக் கணக்குக்கு வரவும், பி.எம். கேர்ஸ் நிதியாகவும் உருவாக்கிக் கொண்ட உத்தமர்தான் மோடி. வாஷிங் மெஷின் வைத்து ஊழல் அரசியல்வாதிகளை பாஜகவுக்குள் சேர்த்துக் கொள்ளும் மோடி, ஊழலைப் பற்றி பேசலாமா?

அடுத்து, தமிழ்ப் பண்பாட்டுக்குத் திமுக எதிரியாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். உங்கள் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியில் படிக்கக் கூடாது, புத்தங்களை வாங்கி படிக்க வேண்டும். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” இதுதான் தமிழர் பண்பாடு! “யாதும் ஊரே யாவரும் கேளிர்” இதுதான் தமிழர் பண்பாடு! பிரிவினைவாத அரசியல் செய்வது யார்? சாதியாலும் மதத்தாலும் மக்களைப் பிளவுபடுத்தும் நீங்கள் திமுகவைக் குற்றம் சாட்டலாமா?

இப்போதும், சமூக நீதியைப் பேசும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முஸ்லீம் லீக்கின் தேர்தல் அறிக்கைபோல் இருக்கிறது என்று கேலி செய்து பிரிவினைவாத அரசியல் செய்வது யார்? பத்தாண்டு காலம் இந்தியாவின் பிரதமராக இருந்து கொண்டு, சாதனையாக எதையும் சொல்ல முடியாமல் இப்படி மக்களைப் பிளவுப்படுத்திப் பேசுகிறோம் என்று வெட்கப்பட வேண்டும் நீங்கள். பத்தாண்டு காலம் ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் வேதனைகளை நம்மால் மணிக்கணக்கில் பேச முடியும்.

தமிழகம் வேண்டாம் என்று புறக்கணித்த மோடிக்கு, ஒரே முழக்கத்தில் நாம் சொல்ல வேண்டியது, “வேண்டாம் மோடி!” தெற்கிலிருந்து வரும் இந்தக் குரல், இந்தியா முழுவதும் கேட்கட்டும். தமிழக வளர்ச்சியைத் தடுத்தால், தமிழ்மொழியைப் புறக்கணித்தால், தமிழ் பண்பாட்டுமேல் தாக்குதல் நடத்தினால், தமிழக மக்களின் பதில் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 19-ம் தேதி உங்கள் வாக்குகள் மூலம் நிரூபிக்க வேண்டும்.

அமைதியான இந்தியாதான் வளர்ச்சியான இந்தியாவாக வளர முடியும். நம்முடைய எதிர்காலத் தலைமுறைக்கு, அமைதியான இந்தியாவை உருவாக்கி வழங்கும் கடமை வாக்காளர்களான உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதை மனதில் வைத்து, இண்டியா கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்.

இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால், இந்தியா வளம் பெறும். குறிப்பாக, தமிழகம் அதிகமாக வளம்பெறும். இங்கே திராவிட மாடல் ஆட்சியை நாங்கள் அமைத்து மூன்றாண்டு காலமாக பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி வருகிறோம். ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். மக்களுக்கு நான் செய்ய நினைத்த எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டேனா என்று கேட்டால், இல்லை. இன்னும் இன்னும் ஏராளமான பல வளர்ச்சித் திட்டங்களைத் தீட்ட வேண்டும். அதற்கு நமக்கு உடன்பாடான மத்திய அரசு, தமிழகத்தை மதிக்கும் மத்திய அரசு அமைய வேண்டும்.

மத்திய அரசின் கூட்டணியில் நாம் எப்போதெல்லாம் இருந்திருக்கிறோமோ, அப்போதெல்லாம் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். இது தமிழக மக்களான உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதிமுக மத்திய அரசில் கூட்டணி சேர்ந்தால், சுயநலத்துக்காகப் பயன்படுத்தும். திமுக மத்திய அரசில் இடம்பெற்றால், மாநிலத்தின் நலனுக்காகப் பயன்படுத்தும்.

கடந்தமுறை தமிழகத்தில் ஒரே ஒரு தொகுதி தவிர எல்லாவற்றிலும் வென்றோம். அந்த ஒரே ஒரு தொகுதியான இந்தத் தேனி தொகுதியில் இந்த முறை, தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். உறுதி எடுத்துவிட்டீர்களா? தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளையும் வென்று, இண்டியா கூட்டணியின் மத்திய அரசு மூலமாகத் தமிழகத்துக்கான எல்லாச் சிறப்புத் திட்டங்களையும் கொண்டு வருவோம். நாம்தான் எல்லாத் தொகுதியிலும் வெல்லப் போகிறோம் என்று தெரிந்து கொண்ட பழனிசாமி, இப்போது என்ன கேட்கிறார்?

மத்திய அரசில் 14 ஆண்டுகள் இருந்த திமுக என்ன சாதித்தது என்று கேட்கிறார். பலமுறை இதற்குப் பதில் சொல்லி இருக்கிறேன். முதலில் பழனிசாமியைப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன், காலையில் எழுந்ததும் செய்தித்தாள்களைப் படியுங்கள். பழனிசாமியால் எந்தச் சாதனையாவது சொல்ல முடியுமா? மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம், அதிமுக இரண்டே இரண்டு காரியங்களைத்தான் செய்யும். ஒன்று, திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தால், அதைக் கலைக்கச் சொல்லுவார்கள். இல்லை என்றால், தங்கள் மீதான ஊழல் வழக்குகளை வாபஸ் வாங்கச் சொல்லுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது?

தினமும் அமாவாசை எப்போது என்று காலண்டரில் பார்க்கும், அரசியல் அமாவாசையான பழனிசாமி என்ன உளறிக் கொண்டு இருக்கிறார்? “ஸ்டாலின் பிரதமர் கனவில் இருக்கிறார், அதற்கு வழியில்லை” என்று உளறிக் கொண்டு இருக்கிறார். திமுக பிரதமர்களை உருவாக்கும் இயக்கம். குடியரசுத் தலைவர்களை உருவாக்கும் இயக்கம். மத்தியில் ஜனநாயகம் பாதிக்கப்பட்ட போதெல்லாம், ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் இயக்கம் திமுக. இதுதான் வரலாறு.

நீங்கள் என்ன கனவில் இருந்தீர்கள்? ஒரே நாடு – ஒரே தேர்தல் என்று பாஜக சொல்கிறது, மக்களவைத் தேர்தலுடன், சட்டமன்றத்துக்கும் தேர்தல் வந்துவிடும் என்று ‘இலவு காத்த கிளி போன்று’ இருந்தார் பழனிசாமி. அவர் வதந்தி கிளப்பியது போன்று எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் இப்போது வாய்க்கு வந்ததை எல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அனைத்துத் தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பழனிசாமி, அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் திமுகதான் மாபெரும் வெற்றி பெறும். பார்த்துக் கொண்டே இருங்கள், உங்களிடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே பறிக்கப் போகிறோம்.

அடுத்து என்ன பேசுகிறார்? அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என்று சவடால் விடுகிறார். அதிமுகவை அழிக்க வெளியில் இருந்து யாரும் வரத் தேவையில்லை. அதுதான் நீங்களும், பன்னீர்செல்வமும் , தினகரனும் அதை போட்டிப் போட்டு செய்துக் கொண்டு இருக்கிறீர்களே, அதற்குப் பிறகு என்ன? அதில் சந்தேகம் வேண்டாம்.

அடுத்து, விவசாயிகளின் கஷ்டங்களைப் பற்றி, ஸ்டாலினும் - உதயநிதியும் பேசவில்லை என்று நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார் பழனிசாமி. விவசாயிகள் உங்கள் ஆட்சியைப் போன்று, கஷ்டத்தில் இருந்தால்தானே, அவர்களின் கஷ்டங்களைப் பேசுவார்கள். திமுகக ஆட்சியில் விவசாயிகள் மிகமிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பழனிசாமிக்கு உண்மையிலேயே உழவர்கள்மேல் அவ்வளவு அக்கறை இருக்கிறது என்றால், இப்போது மத்திய அரசுக்கு எதிராகப் போராடும் உழவர்களுக்காக ஏன் பழனிசாமி பேசவில்லை? அவர்களுக்காக ஏன் கண்ணீர் வடிக்கவில்லை? அதற்குக் காரணமான மோடியை ஏன் விமர்சிக்கவில்லை?

மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து உழவர்களின் வயிற்றில் அடித்தது மத்திய பாஜக அரசு. ஒன்றரை ஆண்டுகள் தலைநகர் டெல்லியில் தங்கிப் போராடினார்கள் விவசாயிகள். அவர்கள் தெரிவித்த எதிர்ப்பினால்தான், பின்வாங்கியது பாஜக அரசு. அப்போது பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தது மத்திய அரசு. ஆனால், அதையும் கடந்த ஓராண்டு காலத்தில் நிறைவேற்றவில்லை. எனவே மீண்டும் டெல்லியில் உழவர்கள் போராட்டம் தீவிரமடைந்து இருக்கிறது. அவர்கள்மேல் இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. எதிரி நாட்டு பயங்கரவாதிகள் போன்று, மோடி அரசு சொந்த நாட்டு உழவர்களை பழிவாங்கியபோது, இந்த பச்சைப்பொய் பழனிசாமி எங்குச் சென்றார்?

உழவர்களுக்கு எப்படிப்பட்ட துரோகத்தை செய்தார் இந்த பழனிசாமி? மூன்று வேளாண் சட்டங்களால் எந்தப் பாதிப்பும் இல்லை. பாதிப்பு இருப்பதாகச் சொல்கின்றவர்களுடன் நான் விவாதிக்கத் தயார். இந்தச் சட்டம் வந்தால் தமிழக விவசாயிகள் உத்தரப் பிரதேசத்துக்குச் சென்று வியாபாரம் செய்யலாம் என்று கப்சா விட்டவர் பழனிசாமி. போராடிய விவசாயிகளை, அவர்கள் விவசாயிகளே இல்லை; புரோக்கர் என்று சொன்ன, அரசியல் புரோக்கர்தான் பழனிசாமி. அப்படிப்பட்டவர், இன்றைக்கு விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

திமுக ஆட்சியில்தான், வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறோம். மூன்றே ஆண்டுகளில் இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் கொடுத்திருக்கிறோம். நீங்கள் கஜானாவைத் தூர்வாரினீர்கள். நாங்கள் டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களைத் தூர்வாரிக் காவிரியைக் கடைமடைக்கும் கொண்டு சென்றோம். ஒவ்வொரு ஆண்டும் கொள்முதலில் சாதனை செய்கிறோம். வேளாண் துறை சார்பில் கண்காட்சி, திருவிழா, சங்கமம் என்று நடத்தி, உழவர்கள் உள்ளத்தில் நம்பிக்கை விதைக்கிறோம். மண்ணும் செழிக்கிறது, மக்களும் செழிக்கிறார்கள், இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

உழவர்களுக்கு துரோகம் செய்தது போன்றே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து, சிறுபான்மை இஸ்லாமிய சகோதரர்களுக்கும் துரோகம் செய்தார் பழனிசாமி. இன்றைக்கு திண்டுக்கல்லில் சிறுபான்மை மக்களைப் பற்றிப் பேச ஆரம்பித்து இருக்கிறார். சிஏஏவுக்கு எதிராகப் போராடிய பெண்கள், குழந்தைகள் மேலும் தடியடி நடத்தி ரசித்து, நான் உட்பட இண்டியா கூட்டணி தலைவர்கள் என்று எட்டாயிரம் பேர் மேல் எப்.ஐ.ஆர் போட்டாரே, குடியுரிமைத் திருத்தச் சட்டம் வந்தபோது, பழனிச்சாமி என்ன செய்தார்? எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார் என்று ஆணவமாகக் கேட்டார்.

அதிமுகவும் பாமகவும் அன்றைக்குக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. அதுதான் உண்மை. இந்த இரண்டு துரோகத்தையும் மனதாரச் செய்த கட்சிகள்தான் அதிமுகவும் பாமகவும். இந்தச் சட்டங்களை ஆதரித்து, ஓட்டு போட்ட பாமக இப்போது பாஜகவுடன் அமைத்திருப்பது சந்தர்ப்பவாதக் கூட்டணி. மருத்துவர் ராமதாஸ் நிலைமையைப் பார்த்து அவர்கள் கட்சிக்காரர்களே தலைகுனிந்து நிற்கிறார்கள். இதற்கு மேல் அவரை நான் விமர்சிக்க விரும்பவில்லை?

அடுத்து, தேனி தொகுதியில் பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளராக ஒருவர் நிற்கிறார். யார்? தினகரன். இதே பாஜகவைப் பற்றி அவர் என்ன சொல்லி இருந்தார்? பாஜக கூட்டணியில் சேர்வது தற்கொலை செய்வதற்குச் சமம். யாராவது தெரிந்தே கிணற்றில் விழுவார்களா? என்று கேட்டவர். இப்போது என்ன தெரிந்தே கிணற்றில் விழ வந்திருக்கிறாரா? என்பதுதான் தேனிக்காரர்கள் கேட்க வேண்டிய கேள்வி. அதுமட்டுமல்ல, இன்னும் பேசியிருக்கிறார்.

டெல்லியில் வேண்டும் என்றால் பெரிய கட்சியாக, ஆளும் கட்சியாக பாஜக இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் அதற்கு என்ன இருக்கிறது? நோட்டாவுடன் போட்டி போடக் கூடிய கட்சிதான் பாஜக, என்று சொன்னவர்தான் இந்த தினகரன். அவரைப் பார்த்து நீங்கள் கேட்க வேண்டும். இன்று நோட்டாவுடன் போட்டி போடத் தேனிக்கு வந்திருக்கிறீர்களா? இல்லை உங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வந்திருக்கிறீர்களா?

நான் சென்ற கூட்டங்களில் சொன்னது போன்று, மோடி வாரண்டியுடன் ஒரு வாஷிங் மெஷின் வைத்திருக்கிறார். அதில் ஊழல்வாதிகளை உள்ளே அனுப்பினால், அவர்கள் சுத்தமாகி வெளியே வந்துவிடுவார்கள். “மேட் இன் பி.ஜே.பி.” வாசிங் மெஷின் அது. மேட் இன் ஜப்பான், மேட் இன் அமெரிக்கா, மேட் இன் இங்கிலாந்து வாஷிங் மெஷின் இது. அந்தக் கட்சியின் கூட்டணி வைத்துக் கொண்டால், அந்த வாஷிங் மெஷின் வெளுத்துவிடும். அப்படி வெளுக்கப்பட்டு பாஜக கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் தினகரன்.

1995-96-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து 62 லட்சத்து 61 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அங்கீகாரம் அற்ற முகவர் மூலமாகப் பெற்று, இங்கிலாந்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகக் கொடுத்ததாக, அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கியவர்தான் இந்த தினகரன். ‘ஃபெரா’ போன்ற சொற்களைத், தமிழகத்தில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை தினகரனுக்குத்தான் உண்டு. இந்த வழக்கை 30 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அபராதமாக விதித்தது. இப்போது புரிகிறதா? ஏன் இவர் பாஜகவுக்குச் சென்றார் என்று.

அதுமட்டுமல்ல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறையும்வரை, போயஸ் கார்டனுக்குள் நுழைய முடியாமல் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந்தவர் தினகரன். காரணம் என்ன? ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கோடு தன்னுடைய வழக்கைச் சேர்த்தால், தனக்கும் தண்டனை கிடைத்துவிடும். அதனால் இரண்டு வழக்கையும் தனியாக நடத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் வக்கீலையே மிரட்டியதால் விரட்டப்பட்டவர் தினகரன். கடைசியாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலாவால் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட தினகரன்தான், இப்போது வழக்குகளுக்கு பயந்து, சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, மோடி வாஷிங் மெஷின் மூலமாகத் தேனிக்குள் நுழைந்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளைத் தோற்கடிக்க வேண்டும்! தேனி மக்களே ஏமாந்துவிடாதீர்கள். கடந்த முறை பன்னீர்செல்வம் மகனிடம் ஏமாந்துவிட்டீர்கள். இந்த முறை, சசிகலா குடும்பத்திடம் ஏமாந்துவிடாதீர்கள். ஓபிஎஸ் நிலைமை என்ன? இரண்டு முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவரை இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரை அவமானப்படுத்த அவரை மிரட்டி ராமநாதபுரத்தில் நிற்க வைத்திருக்கிறது பாஜக தலைமை. தினகரனை மிரட்டித் தேனியில் நிற்க வைத்திருக்கிறார்கள்.

இப்படி, பாஜகவின் தொங்கு சதைகளான பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் என்று யாராக இருந்தாலும், பாஜகவுக்குக் கொடுக்கும் அதே தண்டனையைக் கொடுங்கள். பாஜகவுக்கு சொந்த செல்வாக்கு இல்லாததால் பன்னீர்செல்வம், தினகரன் போன்ற வாடகை மனிதர்களை வைத்து, தேர்தலைச் சந்திக்கிறது. ‘B-டீம்’-ஆகப் பழனிசாமியின் அதிமுகவைக் குத்தகைக்கு எடுத்து, தனியாக நிற்க வைத்திருக்கிறது. சொந்தமாக முடிவெடுக்க முடியாமல், கீ கொடுத்த பொம்மைபோல் அதிமுகவை ஆட்டுவிக்கிறது பாஜக.

இவர்களை மொத்தமாகத் தோற்கடிக்க வேண்டாமா? தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும் வஞ்சகம் செய்யும் பாஜக கூட்டத்துக்கும், துரோகம் இழைக்கும் பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன், பாமக ஆகிய அடிமைக் கூட்டத்துக்கும், திண்டுக்கல், தேனி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்