“பாஜக ஆட்சியின் துயரங்களை நீக்கவே இண்டியா கூட்டணி” - காங். நிர்வாகி பவ்யா நரசிம்மமூர்த்தி

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: "10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், மக்கள் சந்தித்த துயரங்களை நீக்குவதற்காகவே இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் மக்கள் சொல்ல முடியாத துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்" என கிருஷ்ணகிரியில் தமிழக காங்கிரஸ் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் பவ்யா நரசிம்மமூர்த்தி கூறினார்.

இது குறித்து கிருஷ்ணகிரியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “10 ஆண்டு கால பாஜக ஆட்சியில், மக்கள் சந்தித்த துயரங்களை நீக்குவதற்காகவே இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் மக்கள் சொல்ல முடியாத துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்து கருப்பு பணத்தை ஒழிப்பேன் என மோடி கூறினார். 98 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. அப்படியெனில் கருப்பு பணம் நாட்டில் இல்லையென எடுத்துக் கொள்வதா அல்லது அவர்களிடம் உள்ள கருப்பு பணத்தை கணக்கில் காட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமா என்பதை சிந்திக்க வேண்டும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் ஏடிஎம் வாசலில் காத்துகிடந்ததுதான் மிச்சம். மணிப்பூர் கலவரத்தை மத்திய அரசு சிறப்பாக கையாண்டதாக கூறுகின்றனர். ஆனால் அங்கு மோடி செல்லவே இல்லை. மேலும் விவசாயிகளுக்கு வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவேன் என உறுதியளித்த மோடி வேளாண் திருத்த சட்டத்தை கொண்டுவந்து அவர்களை போராடும் நிலைக்கு தள்ளிவிட்டார்.

சிபிஐ, அமலாக்கத் துறை என இந்திய புலனாய்வு துறைகளை கையில் வைத்து கொண்டு ஆட்சி நடத்துகிறார் மோடி. தேர்தல் பத்திரம் மூலம், ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் ஒரே நாளில் விவரங்களை வெளியிடுங்கள் என கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் மக்களை பற்றி சிந்திப்பதில்லை. பாஜகவினர் மோடி முகத்தை காண்பித்து வாக்கு கேட்கின்றனர்.

இண்டியா கூட்டணியினர் மக்களின் பிரச்னைகளைக்கு தீர்வு காண வாக்கு கேட்கின்றனர். இங்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை. மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே முக்கியம். இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் மட்டும் நாடு முழுவதும், 100 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பிஹார், ராஜஸ்தானில் மக்கள் எழுச்சியோடு உள்ளனர். அதனால் தேர்தலுக்கு பின் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும். தகுதியான தலைவர் பிரதமராவார். அதன் பின் கடந்த, 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் திரும்ப பெறப்படும்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு, ரூ.1 லட்சம், பெட்ரோல், டீசல், காஸ் விலை குறைப்பு உள்ளிட்டவைகள் உடனடியாக செயல்படுத்தப்படும். கிருஷ்ணகிரி தொகுதியில் சிட்டிங் காங்கிரஸ் எம்.பி., செல்லக்குமார் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக கிருஷ்ணகிரி ரயில் திட்டம் அறிவிப்பு நிலையில் மட்டுமே உள்ளது. சர்வதேச மலர் ஏற்றுமதி மையம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களும் வரும் காலங்களில் நிறைவேற்றப்படும்” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வின் போது, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், திருப்பூர் மாவட்ட தலைவர் கோபி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகு, தகவல் தொடர்பு பிரிவு கிருத்திகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE