கோவை: “இந்த முறை திமுககாரர்கள் யாராவது தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அது கஞ்சா மூலமாக வந்த பணம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தை உறிஞ்சப்போகிற பணம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று கோவையில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.
கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜக மாநிலத் தலைவரும், கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை பேசியது: "பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தால் சிலருக்கு பிடிப்பது இல்லை. திமுக என்ற திருடர் கூட்டத்துக்கு தலைவராக இருக்கக் கூடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தால் பிடிப்பது கிடையாது.
வேடந்தாங்கல் பறவையைப் போல பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். பிரதமர் ஒரு பறவையைப் போல பாசமாக எங்களைப் பார்க்க வருகிறார். நம்மிடம் அடைக்கலம் தேடுவதற்காக வருகிறார். நம்முடன் இருக்க வேண்டும் என்பதற்காக வருகிறார். பெருச்சாளியைப் போல கோபாலபுரத்தில் ஒளிந்திருக்கவில்லை. பறவையைப் போல நம்மிடம் சரணடைந்து எங்களை பார்ப்பதற்காக வந்திருக்கிறார். எனவே, பிரதமரை வேடந்தாங்கல் பறவை என்று கூறியதை நாங்கள் பெருமையாக எடுத்துக் கொள்கிறோம்.
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினைப் போல, அவரது குடும்பம், மகன், மருமகன், மகளுக்காக பணியாற்றவில்லை. 142 கோடி இந்தியர்களுக்காக பிரதமர் பணியாற்றுகின்றார். இந்தியாவில் இருக்கும் அனைவரையும், அவருடை தம்பி, குழந்தை, மகன், மகளாக பார்க்கிறார். எனவே பிரதமர் அடிக்கடி தமிழகத்துக்கு வருகிறார். அவர் அடிக்கடி தமிழகத்துக்கு வரவேண்டிய கட்டாயம். தமிழகத்தில் முதல்வரின் செயல்பாடுகள் என்பது இல்லை. பொம்மையாக ஒரு முதல்வர் அமர்ந்திருக்கிறார்.
தென் தமிழகத்தில் வெள்ளம் வந்தால், டெல்லியில் மீட்டிங் போடுகிறார். சென்னையில் வெள்ளம் வந்தால், நான்கு நாட்கள் கழித்து கையுறை அணிந்துகொண்டு முதல்வர் வெளியே வருகிறார். தமிழக அரசியல் வரலாற்றில், செயல்படாத ஒரு அரசாங்கம் இருக்கிறது என்றால், முதல் தங்கப் பதக்கம் தற்போதுள்ள தமிழகத்தில் உள்ள இந்த அரசாங்கத்தக்கு கொடுக்க வேண்டும். 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுபோன்ற ஒரு மோசமான ஆட்சியைப் பார்த்து இல்லை. தமிழகத்தில் உள்ள மகளிரும், தாய்மார்களும் கொதித்துப் போய் உள்ளனர்.
திமுகவைப் பொறுத்தவரை, தேர்தல் நேரத்தில் முதல் 10 நாட்கள் கூட்டணியை வைத்து நாடகம் நடத்துவார்கள். கடைசி பத்து நாட்கள், அவர்கள் சம்பாதித்த பாவக் காசை மக்களுக்கு கொடுப்பார்கள். இதைத்தான் 70 ஆண்டு காலமாக திமுக அரசு செய்து வருவதை பார்த்து வருகிறோம். ஆனால், இந்த முறை திமுககாரர்கள் யாராவது தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அது கஞ்சா மூலமாக வந்த பணம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தை உறிஞ்சப்போகிற பணம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மூக்குத்தியோ, தோடோ கொடுத்தால் அது 33 மாத காலமாக நம்முடைய ரத்தத்தை உறிஞ்சிக் கொடுக்கப்படுபவை என்பதை மறந்து விடாதீர்கள். ஆனால், பிரதமர் மோடி அன்பை மட்டும் கொண்டு வந்திருக்கிறார். தமிழக மக்களுக்காக அளப்பறிய அன்பைக் கொண்டு வந்திருக்கிறார். தமிழ் கலாச்சாரத்தின் மீதான மரியாதையைக் கொண்டு வந்திருக்கிறார். 10 ஆண்டு காலம் உலகம் முழுவதும் தமிழைக் கொண்டுசென்ற மறத்தமிழன் என்றால், அது பிரதமர் நரேந்திர மோடி.
தமிழகத்தில் பிறக்காமல் இருந்தாலும், உலகத்தின் எந்த நாடுகளுக்குச் சென்றாலும், நமது மொழி, கலாச்சாரம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், திமுக தமிழின் மகத்துவத்தை கும்மிடிப்பூண்டி தாண்டாமல் அப்படியே பூட்டி வைத்திருந்தீர்கள். ஆனால், பிரதமர் மோடி, உலகின் மூலை முடுக்கெல்லாம் தமிழ் கலாச்சாரத்தின் பெருமையை எடுத்துச் சென்றுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுகிறவர்கள் யார்? தென் சென்னையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தங்கை போட்டியிடுகிறார். மத்திய சென்னையில் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், வட சென்னையில், ஆற்காடு வீரசாமியின் மகன் கலாநிதி வீராசாமி போட்டியிடுகின்றனர். துரைமுருகன் மகன், பொன்முடி மகன் என்று அவர்கள்தான் போட்டியிடுகின்றனர். இதற்கு பிரச்சாரம் செய்வது யார் என்று பார்த்தால் முதல்வரின் மகன். வெட்கமாக இல்லையா முதல்வரே, நீங்கள் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறீா்கள்.
நீலகிரி தொகுதியின் திமுக வேட்பாளர் ஆ.ராசா, 2024 தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றும், பிரதமர் நாட்டை விட்டு போய்விடுவார் என்று கூறுகிறார். ஆ.ராசா இந்த தொகுதியில் டெபாசிட் வாங்கக் கூடாது. நீலகிரி தொகுதியில் அடுத்த 7 நாட்கள் பதிலடி நாம் கொடுக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் 2011 பிப்ரவரியில் 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டவர் ஆ.ராசா. அதே பிப்ரவரி மாதம் ஒரு வாரம் கழித்து கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
திமுக எந்த கூட்டணியில் இருந்ததோ, அதே கட்சி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இன்றைக்கு அவர்கள் நேர்மை பற்றி நமக்கு பாடம் எடுக்கின்றனர். இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு மோசமான உறுப்பினர் இருக்கிறார் என்றால், அது ஆ.ராசா தான். பிரதமர் குறித்து தவறாக பேசிய ஆ.ராசா நீலகிரியில் டெபாசிட் வாங்கக் கூடாது. பிரதமரின் உழைப்பு அவருக்கானது இல்லை.
மூன்றாவது முறை தன்னை பிரதமராக அமர்த்துங்கள் என்று அவர் கேட்பது அவருடைய குடும்பத்துக்காக இல்லை. பிரதமர் செய்ய வேண்டிய வேலை இன்னும் பாக்கி இருக்கிறது. அந்த வேலையை செய்யக்கூடிய தகுதி பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது. செல்ல வேண்டிய தூராமும், செய்ய வேண்டிய வேலையும் பாக்கி இருக்கிறது. அடுத்த 7 நாட்களுக்கு கடுமையாக உழைப்போம்” என்று அண்ணாமலை பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago