ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

By செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் உடல்நலக்குறைவால் நேற்று காலமான அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அவரது இல்லத்தில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இந்நிலையில் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக தலைமைச் செயலாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "5 முறை அமைச்சராகவும் மூன்று முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய ஆர்.எம்.வீரப்பனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்படவுள்ள ஆர்.எம்.வீரப்பனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எம்ஜிஆர் கழக நிறுவனரும், சினிமா தயாரிப்பாளரும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவருமான ஆர்.எம்.வீரப்பன் நேற்று காலமானார். அவருக்கு வயது 98. அப்போலோ மருத்துமவனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE