ரம்ஜான் பண்டிகை: முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி மற்றும் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள்: முதல்வர் ஸ்டாலின்: நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள். கல்வியை ஆண், பெண் இருவருக்கும் சமமாக்கியது, நீதி மற்றும் அமைதியை வலியுறுத்தியது, ஏற்றத்தாழ்வை அறவே எதிர்த்தது, சகோதரத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் வலியுறுத்தியது என அவர் காட்டிய வழி அனைவரும் பின்பற்றத்தக்கதாகும். இல்லாதோருக்கு உதவுவதையும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்தவர் நபிகள் நாயகம்.

அவரது வழியில் வாழ்ந்து வரும் இஸ்லாமியத் தோழர்களின் நலன் காக்கும் அரசாகக் கழக அரசு திகழ்ந்து வருகிறது. 2007-இல் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் உருவாக்கியது, மீலாதுநபிக்கு அரசு விடுமுறை, இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு என எத்தனையோ சாதனைகளைச் செய்த தலைவர் கலைஞரின் வழியில், எல்லார்க்கும் எல்லாம் என்ற கோட்பாட்டைக் கொண்ட நமது திராவிட மாடல் அரசும் அவர்களது கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.

அதன்படியே, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசின் வாழ்நாள் அங்கீகாரம். மதச்சார்பு சிறுபான்மையினர் சான்றிதழை நிரந்தரச் சான்றிதழாக வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு, இனி 5 லட்சம் வரை கல்விக்கடன் இஸ்லாமிய மக்களுக்கான அடக்கஸ்தலங்கள் (கபர்ஸ்தான்) இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் தேவைப்படும் நிலத்தை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கையகப்படுத்தி மாநகராட்சி / நகராட்சி சார்பில் கபர்ஸ்தான் அமைப்பதற்கு நிருவாக ஒப்புதல் வழங்கி அரசாணை என எண்ணற்ற அறிவிப்புகளை அண்மையில் வெளியிட்டிருக்கிறோம்.

இதற்கெல்லாம், முத்தாய்ப்பாக ஒன்றிய பா.ஜ.க அரசு நிறுத்திவிட்ட சிறுபான்மையின மாணவர்களுக்கான Pre-matric scholarship, தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் வழங்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறோம். இசுலாமியரைப் பாகுபடுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்படி, இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் உரிமைகளுக்காக என்றும் முன்னிற்கும் பெருமிதத்தோடு, உரிமையோடு இஸ்லாமியத் தோழர்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி: ஈகைத் திருநாளை இன்பமுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் ஒரு மாதம் நோன்பிருந்து, ஏழைகளின் பசி துன்பத்தைத் தாமும் அனுபவித்து, ஏழை, எளியோருக்கு உணவளித்து, எல்லோரும் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட இறைவனைத் தொழுது ரம்ஜான் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

அதிமுக ஆட்சிக் காலங்களில் இஸ்லாமிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிறுபான்மை மக்களின் நலன் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதையும்; கழகம் என்றென்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்பதையும் இந்த இனிய தருணத்தில் பெருமையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

“அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள்; பிறருக்கு உதவி புரியுங்கள். சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள்” என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம் என்று கூறி இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில், எனது இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

கு.செல்வப்பெருந்தகை: கடந்த ஒரு திங்களாக உணவு, பசி, தாகத்தை அடக்கி உண்ணா நோன்பிருந்த இஸ்லாமியர்கள் இன்று ‘ஈதுல் பித்ர்” என்னும் ஈகைத் திருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடி திளைக்கின்றனர். ஏக இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு முறைகளை பின்பற்றி என்றும்போல் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

பன்முக கலாச்சாரத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கென்று ஒரு கருத்தியலை மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு சட்ட பாதுகாப்பு கொடுக்கிற வகையில் அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மத்தியில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் அரசமைப்புச் சட்டத்தின்படி தான் ஆட்சி செய்ய வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின்படி சிறுபான்மை மக்களுக்கு மதசுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்படுமேயானால் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தலைமையில் நாடு முழுவதிலுமுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரண்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை காப்பார்கள்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட நியாய பத்திரத்தில் அரசமைப்பு சட்டப்படி சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற உரிமைகளை பாதுகாப்போம் என்று கூறப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அனைத்து மக்களையும் சாதி, மத, பேதமில்லாமல் சமமாக கருதுவது தான் மதச்சார்பின்மை என்பதை ரமலான் செய்தியாக தமிழக காங்கிரஸ் கட்சி கூற விரும்புகிறது.

இந்த இனிய ஈகைத் திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு ‘சதக்கத்துல் பித்ர்” என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

புனித நூலான திருக்குர் ஆன் அருளப்பட்ட இந்த மாதத்தில், தமிழ் நாட்டில் தீமைகள் ஒழிந்து நன்மைகள் மீகா, நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக.

அன்புமணி: அனைவரும் அற வாழ்வு வாழ வேண்டும் என்று போதிக்கும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில் தான் இறை தூதர் நபிகள் நாயகத்திற்கு குரான் வெளிப்படுத்தப்பட்டது என்பதால், அதைக் குறிக்கும் வகையில் தான் இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் பகல் நேரத்தில் நோன்பிருந்து நபிகளையும், குரானையும் போற்றுகின்றனர். இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும்.

இது பற்றி இறைவன் அவரது திருமறையில், மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு என்று குறிப்பிடுகிறார். அகமும், புறமும் தூய்மையடைந்து விட்டால் மனிதர்கள் மகான்களாக மாறி விடுவார்கள். உலகிற்கும், தனி மனிதனுக்கும் பயனளிக்கக் கூடிய இத்தகைய மாற்றத்தை மனிதனிடம் ஏற்படுத்துவது தான் ரமலான் திருநாளாகும்.

நோன்புக் காலத்தில் மற்றவர்களுக்கு உதவுதல், காலையில் உட்கொள்ளும் உணவையும், மாலையில் நோன்பு திறந்ததும் உட்கொள்ளும் உணவையும் அனைவரும் பகிர்ந்து உண்ணுதல், யாரிடமும் மோதலில் ஈடுபடாமல் இருத்தல், தீய வார்த்தைகளை பேசாதிருத்தல் ஆகியவற்றை நோன்புக் காலத்தில் இஸ்லாமியர்கள் தவறாமல் கடைபிடிக்கின்றனர். அந்த வகையில் இஸ்லாமியர்களை உன்னதமாக்கும் திருநாளே ரமலான்.

இந்த உன்னத குணங்களை இஸ்லாமியர்கள் மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உலகில் உள்ள அனைவரும் இந்த குணங்களை கடைபிடித்து உன்னதமானவர்களாக மாறலாம். அத்தகையதொரு நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமும் ஆசையும் ஆகும்.

இஸ்லாம் போதிக்கும் பாடங்கள் மதங்களைக் கடந்தவை. இதை உணர்ந்து உலகில் அமைதி, வளம், மகிழ்ச்சி, கல்வி, வளர்ச்சி நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகுவதற்காக பாடுபடுவதற்கு இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறிக் கொண்டு இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ்: வாழ்வில் நற்பண்புகளை வலியுறுத்தும் திருநாளான ரமலான் திருநாளை உலகெங்கும் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரமலான் திருநாள் என்பது ஒரு புனிதமான அனுபவம் ஆகும். இஸ்லாம் எத்தகைய நன்னெறிகளை கற்பிக்கிறதோ, அவை அனைத்தையும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் காலம் தான் ரமலான் திருநாள் ஆகும். இஸ்லாம் கற்பிக்கும் நன்னெறிகளில் முதன்மையானது மதுவை விலக்குதல் ஆகும். மது அருந்துவதும், மதுவை உற்பத்தி செய்து விற்பதும் சாத்தானின் செயல்கள் என்று நன்னெறி நூலான திருக்குர் ஆன் கூறுகிறது.

ஆனால், அறத்தையும் நன்னெறியையும் கடைபிடிக்க வேண்டிய ஆட்சியாளர்கள் கூட, இஸ்லாமியம் கூறும் நன்னெறிகளுக்கு மாறாக மதுவை விற்று தான் ஆட்சி நடத்துகின்றனர். தமிழ்நாட்டின் எந்த மூலையில் நின்று திரும்பிப் பார்த்தாலும் நான்கு திசைகளிலும் நான்கு மதுக்கடைகளைப் பார்க்க முடியும் என்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்; மதுவில்லா தமிழகம் வேண்டும் என்பதே நமது விருப்பம்.

அந்த ஆசை நிறைவேற வேண்டும்; உலககெங்கும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க இந்த புனிதமான நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

வைகோ: நன்மை தீமைகளைப் பிரித்தறிந்து, நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதம், மாற்றம் தருகின்ற மாதம்; உள்ளங்களில் உண்மை ஒளி படர்ந்திடும் மாதம் ஆகும். இஸ்லாமியப் பெருமக்கள், ரமலான் மாதத்தின் முப்பது நாள்களிலும் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, இறையை நினைத்திருந்து நோன்பு எனும் மாண்புடன் தவம் இருந்தமைக்குக் களித்திருந்து மகிழ்ந்திடும் நன்னாள் ரமலான் திருநாள்.

காய்ந்த குடல்கள், காலியான வயிறுகள், பசியின் அகோரத்தைப் புரிய வைக்கின்ற ரமலான் மாதம் தருகின்ற படிப்பினை, வறியோர்க்கு உதவிக் கரம் நீட்டுங்கள் என்பதாகும். ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதல் இசைபட வாழ்தல் எனும் விதத்தில் ஈத்துவக்கும் மகிழ்ச்சியில் இஸ்லாமிய பெருமக்கள் திளைக்கின்றனர்.

வையத்து மாந்தர் எல்லாம் மகிழ்ந்திடும் இந்த ஈகைத் திருநாள், மனிதநேயத்தின் மகத்துவத்தையும், உன்னதத்தையும் உரைத்திடும் பொன்னாள் ஆகும். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும் அடித்தளம்தான் மதச்சார்பின்மையாகும். நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்க்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள சக்திகளை விட்டி அடிப்போம்.

அண்ணலார் நபிகள் நாயகம் காட்டிய நெறிகளை ஏற்று வாழும் இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகிற ரமலான் திருநாளில் சமய நல்லிணக்கமும், சகோதரத் துவமும் நிலைநாட்டப்படவும், சமூக ஒற்றுமை தழைக்கவும் பாடுபடுவோம் எனச் சூளுரைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இனிய ரமலான் வாழ்த்துக்களை இசுலாமிய பெருமக்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்

சு. திருநாவுக்கரசர்: கடந்த ஒரு மாதமாக உண்ணா நோன்பிருந்த இஸ்லாமியப் பெருமக்கள் இன்று 'ஈதுல் பித்ர்' என்னும் ஈகைத் திருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடி திளைக்கின்றனர். இஸ்லாமியப் பெருமக்களால் ரமலான் மாதம் புனித மாதமாக போற்றப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் 'திருக்குர் ஆன்' இறக்கம் செய்யப்பட்டது.

ஏக இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய சமாதானம், சகோதரத்துவம், சமத்துவம், ஈகை, சகவாழ்வு ஆகிய வாழ்வு வழிமுறைகளை பின்பற்றி இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

இப் புனித நாளில் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும், மகிழ்வும் பெருகிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை உளமாற தெரிவித்துக் கொள்கிறேன்.

டிடிவி தினகரன்: ஈகைத் திருநாளான ரமலான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ரமலான் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இறை உணர்வோடு எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி ஏழை, எளியோரின் ஏழ்மையை போக்கிட உணவும், செல்வமும் வழங்கி சிறப்பு தொழுகைகள் மூலம் இறைவனை வழிபட்டு, ரமலான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் எண்ணங்கள் அனைத்தும் இந்த ரமலான் பெருநாளில் நிறைவேறட்டும்.

அன்பு, கருணை, ஈகை, மனிதநேயம் போன்ற நற்பண்புகளை போதித்தது மட்டுமல்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டிய மனித குலத்தின் வழிகாட்டி இறை தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளையும் நற்பண்புகளையும் பின்பற்றி வாழ்வில் உயர்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.

ரமலான் பெருநாளில் அனைவரது உள்ளங்களிலும் அன்பும், மகிழ்ச்சியும், சகோதரத்துவமும் பெருகுவதோடு, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்தோங்க வேண்டும் எனக்கூறி இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை ரமலான் வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன். இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்