சென்னை: ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் மும்முரமாகஇருக்கும் திமுக, சென்னை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை தி.நகரில் 2 கி.மீ. தூரம் ரோடு ஷோ நடத்தி பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு மலர் தூவி, கலைநிகழ்ச்சிகள் நடத்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை என் மனதை வென்றது. இந்த ஆற்றல்மிக்க நகரத்தில், இந்த ரோடு ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன. சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகம் பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல்: இந்த துடிப்பான நகரத்தின் நலனுக்காக நமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்று சென்னையைச் சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக, 'வாழ்வை எளிதாக்கும்' முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும், திறப்பதற்கும் நான் அடிக்கடி இங்கு வந்துள்ளேன். இதன் அடிநாதமாக இருப்பது இணைப்புகள்.
» ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி
» “ஈடு செய்யமுடியாத பேரிழப்பு” - ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்
சமீபத்தில், சென்னை விமானநிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் திறக்கப்பட்டது. வரும் காலங்களில் எழும்பூர் ரயில் நிலையம் உட்பட இங்குள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.
சென்னை - கோயம்புத்தூர் மற்றும் சென்னை - மைசூரு இடையேயான இணைப்பு மேம்படஉதவி புரிந்த வந்தே பாரத் ரயிலுக்கு நன்றி. சென்னையில் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு உதவும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் வலைப்பின்னல்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.
சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை போன்ற முக்கிய சாலைத் திட்டங்கள் மற்றும் தற்போதுள்ள மற்ற சாலைத் திட்டங்களின் விரிவாக்கங்களால் வணிகம் மற்றும் அதன் இணைப்பை மேம்படுத்தும்.
வீட்டு வசதித் துறையில் குறிப்பிடத்தக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு இத்திட்டத்தின்படி கட்டப்பட்ட பல வீடுகள் திறந்து வைக்கப்பட்டன. மேலும் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் மற்றும் சென்னை ஐஐடி டிஸ்கவரி கேம்பஸ் போன்ற திட்டங்களில் அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. இது வணிகத்தையும், புதுமை கண்டுபிடிப்புகளையும் அதிகரிக்கும்.
செம்மொழித் தமிழாய்வு: தமிழ் கலாச்சாரத்துக்கு நமதுஅரசு மிகுந்த மரியாதை அளிக்கிறது. ஐநாவில் தமிழில் சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொண்டேன். உலக அரங்கில் தமிழ் கலாச்சாரத்தையும், மொழியையும் தொடர்ந்து பிரபலப்படுத்துவோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் கலாச்சாரத்தின் அம்சங்களை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதுப்பிக்கப்பட்ட டிடி தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்பட்டது, இது இந்தமாநிலத்தின் சிறப்புமிகு கலாச்சாரத்தைக் கொண்டாடுவதில் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.
சாலைகள், துறைமுகங்கள், நகர்ப்புற போக்குவரத்து, கலாச்சாரம், வர்த்தகம், இணைப்பு, எரிசக்தி மற்றும் பல துறைகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து பணியாற்றும். அதே நேரத்தில் பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துவது, வெள்ளம் போன்ற பேரிடர்களின்போது நம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொள்வது போன்ற முக்கிய பிரச்சினைகளில் சென்னை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களைய நாங்கள் முன்னுரிமை அளிப்போம். பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையையும் தொடர்ந்து ஆதரிப்போம்.
பல ஆண்டுகளாக சென்னை மக்களிடம் வாக்குகளை பெற்று நகருக்கு திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது.திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை அணுகுவதில்லை. குறிப்பாக, சவால்கள் நிறைந்த கடினமான நேரத்தில் கச்சத்தீவை தாரை வார்த்தது குறித்த சமீபகால தகவல்கள், நமது நாட்டின் வியூக நலன்களுக்கும், நமது மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலனுக்கும் தீங்கு விளைவிப்பதில் காங்கிரஸும் திமுகவும் எவ்வாறு உடந்தையாக இருந்தன என்பது வெளிப்பட்டுள்ளது.
இம்முறை திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராகி இருப்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை.
இவ்வாறு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago