பொள்ளாச்சியில் 4 இடங்களில் வருமான வரி சோதனை: ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: கோவையை அடுத்த பொள்ளாச்சி நகரப் பகுதியில் உள்ள வெங்கடேசா காலனியில் எம்.பி.எஸ் ஹேட்சரீஸ் என்ற கோழிப்பண்ணை நிறுவனம் உள்ளது. இதன் உரிமையாளர்களாக சகோதரர்களான அருள் முருகு, சரவண முருகு ஆகியோர் உள்ளனர். இந்நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் அழகப்பா லே-அவுட், வெங்கடேசா காலனி யில் இயங்கி வருகிறது.

மேலும், பொள்ளாச்சியை அடுத்த ஊஞ்சவேலாம்பட்டியில் இந்நிறுவனத்துக்கு சொந்தமான தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையும் உள்ளது.

இந்நிலையில், இக்கோழிப் பண்ணை நிறுவனத்துக்குசொந்தமான இடங்களில் பணம்பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வருமான வரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் காலை 8 மணிக்கு, பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள அந்நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்துக்கு வந்தனர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். பின்னர் தனித்தனி குழுக்களாக பிரிந்து ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள கோழித்தீவன ஆலை, பண்ணைஉள்ளிட்ட 4 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், மேற்கண்ட இடங்களில் கட்டுக்கட்டாக பணம் வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து சோதனை நேற்று முன்தினம் இரவும் தொடர்ந்தது.

இரவு 9 மணியளவில் பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் உள்ளே அழைக்கப்பட்டார். பின்னர் சிறிது நேரத்தில் துப்பாக்கிஏந்திய போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சோதனை 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதில் கணக்கில் வராத ரூ.32 கோடியைவருமான வரித்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்ததாகத் தெரிகிறது. இந்த பணம் குறித்தும் வருமான வரித் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE