ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட நகைக்கடைக்கு சொந்தமான 10 கிலோ தங்கம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட நகைக்கடைக்கு சொந்தமான 10 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்து செல்லப்படும் பணம், பொருட்களை பறிமுதல் செய்துவருகின்றனர். இந்த வகையில்,அசோக் நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரயில்வே பார்டர் சாலை, சக்கரபாணி தெரு சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த வேனை சோதனை செய்தபோது, அதில் 10 கிலோ தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இந்த நகைகள், பிரபல நகைக் கடையில் இருந்து ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அலுவலகத்தில் ஒப்படைக்க எடுத்து செல்லப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

ஆனால், இதற்காக உரிய ஆவணங்கள் இல்லாததால், நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE