“எந்த முகத்துடன் தமிழகம் வருகிறார் மோடி?” - முதல்வர் ஸ்டாலின் காட்டம் @ மதுரை

By செய்திப்பிரிவு

மதுரை: “கடந்த பத்தாண்டு காலமாக, தமிழக மக்களை மதித்து தமிழகத்துக்கு என்று எந்த சிறப்புத் திட்டத்தையும் செய்து கொடுக்காத பிரதமர் மோடி, இப்போது வாக்கு கேட்டுத் தமிழகத்துக்கு வந்திருக்கிறார். தமிழகத்துக்குச் சிறப்புத் திட்டங்கள் செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை. பக்கத்து மாவட்டங்கள் வெள்ளத்தில் தவித்தார்களே, அவர்களுக்கு உதவி செய்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை. எந்த முகத்துடன், மோடி தமிழகத்துக்கு வருகிறார்?” என்று மதுரையில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.9) மதுரையில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நீங்கள் அளிக்கும் வாக்கு உங்கள் தொகுதிக்கான எம்.பி.யைத் தேர்வு செய்ய மட்டும் இல்லை. இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வர அடித்தளம் அமைக்கப் போகிறது. வரப்போகும் பிரதமர் எப்படிப்பட்டவராக இருப்பார்? நீட் தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்களிக்கும் பிரதமராக அவர் இருப்பார்.

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில், நாளொன்றுக்கு 400 ரூபாய் கொடுக்கும் பிரதமராக இருப்பார். விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்கும் பிரதமராக இருப்பார். சமூக நீதி மேல் உண்மையான அக்கறையுடன், இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 விழுக்காட்டை உயர்த்தும் பிரதமராக இருப்பார். SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை இரண்டு மடங்கு ஆக்கும் பிரதமராக இருப்பார்.

மொத்தத்தில், இந்திய ஜனநாயகத்தை, அரசியல் சட்டத்தை, மதச்சார்பின்மையை, சமூகநீதியை மதிக்கும் பிரதமராக இருப்பார். மிகவும் முக்கியமாக, தமிழகத்தின் வளர்ச்சிக்கு உற்ற துணையாகவும், தமிழ் மக்கள் மீது உண்மையான பாசம் கொண்டவராக, இண்டியா கூட்டணி பிரதமர் ஆட்சி செய்வார். இன்னும் ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், இப்போது இருக்கும் பிரதமர் மோடி போன்று, நிச்சயம் இருக்க மாட்டார்.

கடந்த பத்தாண்டு காலமாக, தமிழக மக்களை மதித்து தமிழகத்துக்கு என்று எந்த சிறப்புத் திட்டத்தையும் செய்து கொடுக்காத பிரதமர் மோடி, இப்போது வாக்கு கேட்டுத் தமிழகத்துக்கு வந்திருக்கிறார். தமிழகத்துக்குச் சிறப்புத் திட்டங்கள் செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை. இங்கு பக்கத்து மாவட்டங்கள் வெள்ளத்தில் தவித்தார்களே, அவர்களுக்கு உதவி செய்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை. எந்த முகத்துடன், மோடி தமிழகத்துக்கு வருகிறார்? இவர் தமிழகத்தை மட்டும் இப்படி வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சி ஆளும் அனைத்து மாநிலங்களையும் வஞ்சிக்கிறார்.

பக்கத்து மாநிலம் கேரளாவில் மக்கள் நலத் திட்டங்களுக்குக் கடன் வாங்குவதற்குக்கூட, உச்சநீதிமன்றத்துக்குச் செல்லும் நிலைமையை உருவாக்கியிருக்கிறார். கர்நாடகாவும் வறட்சி நிவாரணம் கேட்டு, உச்சநீதிமன்றக் கதவுகளைத் தட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அந்த இரண்டு மாநில முதல்வர்களும் டெல்லியில் சாலையில் போராடும் அவல நிலையை ஏற்படுத்தினார் பிரதமர். மேற்கு வங்கத்துக்கும் இதே நிலைமைதான்.

மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது? குதிரை பேரம் நடத்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கினார். ஆட்சியைக் கலைத்தார். ஆளும் கட்சியை உடைத்து, இப்போது அந்த மாநிலத்தையும் நாசமாக்கிவிட்டார். அடுத்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில் என்ன நிலைமை? பழங்குடியின முதல்வரான ஹேமந்த் சோரனைக் கைது செய்தார். டெல்லியிலும். பஞ்சாப்பிலும் என்ன செய்தார்? அங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆளுநர்களை விட்டுத் தொல்லை கொடுக்கிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலைத் தேர்தல் அறிவித்ததற்குப் பிறகு கைது செய்தார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும், ED, IT,CBI ஆளுநர்களை வைத்துத் தொல்லை கொடுப்பார். இதுதான் மோடி இந்தியா.

இவரை எதிர்த்து யாராவது பேசினால் என்ன நடக்கும்? சமீபத்திய உதாரணம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக். அவர் என்ன சொன்னார். 2019-ல் நடந்த புல்வாமா தாக்குதல், அரசியல் ஆதாயத்துக்காக எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள், மோடிக்கு ஊழலை ஒழிக்கும் எண்ணம் இல்லை. ஊழல்வாதிகள் அவர்கூடவே இருப்பதால், அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று விளக்கமாக ஒரே ஒரு பேட்டிதான் கொடுத்தார். உடனே அவர் வீட்டில் CBI ரெய்டு, எவ்வளவு மலிவான அரசியல்?

பெண் சக்தி, பெண்கள் பாதுகாப்பு பற்றி, இப்போது தொடர்ந்து பேசும் பிரதமர், பாஜக எம்.பி. பிரிஜ் பூஷனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் விட்டபோது, வாய் திறக்கவில்லையே ஏன்? குஜராத்தில் பில்கிஸ் பானு பலாத்கார வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டபோது, பெண் சக்தி மேல் பிரதமர் மோடிக்கு அக்கறை வந்ததா? மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை, மவுனமாக ஏன் வேடிக்கை பார்த்தார்? ஒரு தடவையாவது மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினாரா?

அதுமட்டுமல்ல, ஜம்மு காஷ்மீரில் 8 வயது குழந்தையைக் கோயிலில் வைத்து வன்புணர்வு செய்தார்களே? அந்தக் குற்றவாளிக்கு ஆதரவாக, இரண்டு பாஜக அமைச்சர்கள் ஊர்வலம் சென்றார்களே? இதற்குக் கண்டனம் எழுந்த உடனே, அவர்கள் என்ன கூறினார்கள்? கட்சித் தலைமைதான் எங்களை அனுப்பி வைத்தது என்று கூறிய அவர்களை, மோடி தட்டிக் கேட்டாரா?

உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் ஞாபகம் இருக்கிறதா? வேலை கேட்டுச் சென்ற இளம்பெண்ணை, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் வன்புணர்வு செய்தார். இதைப் புகாராக அந்தப் பெண் சொல்லக் கூடாது என்று, குல்தீப்பின் சகோதரரும், நண்பர்களும் சேர்ந்து அவரைக் கடத்தி மயக்க மருந்து கொடுத்து நாள்கணக்கில் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்தார்கள். காப்பாற்றச் சென்ற தந்தையை போலி வழக்கு போட்டு சிறையிலேயே வைத்து அநியாயமாகக் கொன்றார்களே? நியாயம் கிடைக்காத விரக்தியில், உத்தர பிரதேச முதல்வர் யோகி வீட்டுக்கு முன்பு, அந்த பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார். அதற்குப் பிறகும் கூட அந்தப் பெண்ணை வண்டி ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது. அதில் அவர்கள் அத்தை இறந்தார், இதையெல்லாம் வேடிக்கை பார்த்தது யார்? பிரதமராக இருக்கக் கூடிய மோடிதான்.

ஹாத்ரஸ் மறந்து போனதா? அப்பாவி தலித் பெண் ஒருவர், வன்புணர்வு செய்யப்பட்டு இறந்தாரே, அவரின் உடலை பெற்றோர் சம்மதம் இல்லாமல், பெட்ரோல் ஊற்றிப் போலீஸே எரித்தார்களே? பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லக்கூட சகோதரர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அனுமதி மறுத்தார்களே? இப்படிப்பட்ட காட்டாட்சிதான், பாஜக ஆட்சி.

பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று பாஜகவை சேர்ந்த முதல்வர் யோகி பேசினார். இதையெல்லாம் மோடி தடுத்தாரா? மோடி இந்த நாட்டுக்குச் செய்தது என்ன? ஒருதாய் மக்களாக வாழும் மண்ணில் மதவெறியை விதைத்து பிளவுபடுத்தினார். மக்களுக்காகப் பேசுகிறவர்களைச் சிறையில் தள்ளி ரசித்தார். எழுத்தாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி கொல்லப்பட்டதை மவுனமாக வேடிக்கை பார்த்தார். மதவெறியர்களின் வன்முறையையும், கொலைகளையும், தாராளமயமாக்கினார். இப்படிப்பட்டவரை, தமிழக மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது ஜுன் 4-ம் தேதி அவருக்குத் தெரியத்தான் போகிறது.

இப்போது புதிதாக என்ன சொல்கிறார் பிரதமர்? நாங்கள்தான் வளர்ச்சித் திட்டங்களைத் தடுத்தோமாம். எவ்வளவு பெரிய பொய். அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு - என்று சொல்லுவார்களே, அதுபோன்றுதான் இருக்கிறது. பாஜக தமிழக வளர்ச்சிக்குத் தடுத்த திட்டங்களைப் பட்டியல் போடலாமா? தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த முதல்வர் கருணாநிதி ஆகியோர் இந்த மதுரையில் தொடங்கிய சேது சமுத்திர திட்டத்தை முடக்கினார்களே...

ஏன், பத்தாண்டு காலத்தில் அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனையைக்கூட கட்டித் தராமல் தமிழகத்துக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தார்களே, இந்த எய்ம்ஸ் உடன் அறிவித்த, மற்ற பாஜக ஆளும் மாநில எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாம், பயன்பாட்டுக்கு வந்துவிட்டதே. ஆனால், மதுரைக்கு எய்ம்ஸ் வரவில்லை.

நாங்கள் கட்டும் ஒரு ரூபாய் வரிக்கு, 29 பைசா மட்டும் திருப்பிக் கொடுத்து நிதி நெருக்கடியை உருவாக்குகிறார்கள். பேரிடர் நிதியைக்கூட கொடுக்காமல் நாங்கள் மக்களுக்குக் கொடுத்த நிதிக்குக் கூட, நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனைப் ‘பிச்சை’ என்று சொல்லி ஏளனம் பேச வைக்கிறார்கள். இந்த லட்சணத்தில். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகிறார். திமுக காங்கிரஸ் கூட்டணியில் செய்யப்பட்ட நன்மைகளையும், திட்டங்களையும் பட்டியல் போட்டால், ஒரு நாள் முழுவதும் அந்தச் சாதனைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்க முடியும்.

நாடு முழுவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டது. 65 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சிறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.அன்னைத் தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்தோம்.செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அமைத்தோம். திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களை விரிவாக்கம் செய்தோம். டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் மேம்பாலங்கள், சாலைகள் என்று 56 ஆயிரத்து 644 கோடி ரூபாய்க்குத் தமிழகத்துக்குத் திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றினோம். நெசவுத் தொழிலுக்கு இருந்த சென்வாட் வரி நீக்கப்பட்டது.

இன்னும் நிறைய இருக்கிறது. பிரதமர் மோடியால் இப்படி பட்டியல் போட முடியுமா? தேர்தல் சீசனுக்கு மட்டும் அவர் வருவதற்கு தமிழகம் என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மேல் மட்டும் அவருக்கு ஏன் இத்தனை வன்மம்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? நாங்கள் என்ன இரண்டாம் தரக் குடிமக்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை? எப்படி உங்களால் ஓட்டு கேட்டு வர முடிகிறது? நம்மைப் பொறுத்தவரை, திராவிட மாடல் அரசு இந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளைச் செய்து கொடுத்த பெருமிதத்துடன் உரிமையுடன் உங்களிடம் வாக்கு கேட்கிறேன்.

மத உணர்வுகளைத் தூண்டி, இந்த நாட்டு மக்களைப் பிளவுபடுத்த முடியுமா, வாக்கரசியல் பண்ண முடியுமா, மூழ்கிக் கொண்டு இருக்கும் பாஜகவையும், தன்னுடைய இமேஜையும் கரைசேர்க்க முடியுமா என்று திசைதிருப்பும் அரசியலை பேசுகிறார். மக்கள் ஆதரவுடன் நாடு முழுவதும் பேசப்படும் நம்முடைய திராவிட மாடல் அரசு, குஜராத் மாடல் என்று போட்டோஷாப் மூலமாக போலியாக கட்டமைத்த மாடலை உடைத்து நொறுக்கிவிட்டதே என்ற வன்மத்தில், தமிழகத்துக்குள் மட்டும் பொய்ப் பிரச்சாரம் செய்வதில்லை; வடமாநிலங்களிலும், தமிழகத்தைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பி ஆதாயம் தேடப் பார்க்கிறார் பிரதமர்.

கொடுத்த வாக்குறுதிகளில் 90 விழுக்காட்டை நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்லும் பிரதமர் மோடி, வெளிநாடுகளில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டுவிட்டாரா? அனைத்து இந்தியர்களின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போட்டுவிட்டாரா? ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு என்று பத்தாண்டுகளில் 20 கோடிப் பேருக்கு வேலை கொடுத்துவிட்டாரா? உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்கிவிட்டாரா? விலைவாசியைக் குறைத்துவிட்டாரா? இந்திய நதிகளை இணைத்துவிட்டாரா? எல்லோருக்கும் வீடு கொடுத்துவிட்டாரா? குழாய் மூலம் எரிவாயு இணைப்பு கிடைத்துவிட்டதா?

பெண்களுக்கான நடமாடும் வங்கி என்று சொன்னாரே, அது எங்கேயாவது நடமாடிப் பார்த்தீர்களா? பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டைச் செயல்படுத்திவிட்டாரா? வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று சொன்னாரே, மணிப்பூருக்கு நேர்ந்தது என்ன? அரசியல் தலையீடுகள் இல்லாமல் புலனாய்வு அமைப்புகள் செயல்படும் என்று சொல்லிவிட்டு ED, IT,CBI எல்லாம் பாஜக துணை அமைப்புகளாக மாற்றிவிட்டாரே.

அதுமட்டுமல்ல, தமிழகத்துக்கு வந்தால், “வணக்கம்! எனக்கு இட்லியும் - பொங்கலும் பிடிக்கும்; தமிழ் பிடிக்கும்; திருக்குறள் பிடிக்கும்; ஓட்டு போடுங்கள்” என்று கேட்கும் பிரதமரை, நாங்கள் கேட்கிறோம். தமிழ் பிடிக்கும் எனச் சொல்லிவிட்டு, தமிழ் வளர்ச்சிக்கு 74 கோடி ரூபாயும் , சமஸ்கிருதத்துக்கு 1488 கோடி ரூபாய் ஏன் என்று கேட்கிறோம். தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது. தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை விட்டு விதண்டாவாதம் பேச வைக்கிறார். தமிழின் சிறப்புகளைச் சொன்ன, கால்டுவெல்லையும் ஜி.யு.போப்பையும் ஆளுநரை வைத்து இழிவுபடுத்துகிறார்கள். அதையாவது கண்டித்தீர்களா? திருவள்ளுவருக்கு ஏன் காவிச்சாயம் பூசுகிறீர்கள் எனக் கேட்கிறோம். இப்படி அத்தனை தமிழ் விரோத வேலையும் செய்துவிட்டு, தயவுசெய்து வாயால் வடை மட்டும் சுடாதீர்கள் என்று கேட்கிறோம்.

இப்படி தமிழுக்கும், தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் விரோதமாக இருக்கும் பாஜகவுக்குப் பாதம்தாங்கியாக இருந்து, தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அத்தனை துரோகங்களுக்கும் துணையாக இருந்தவர் பழனிசாமி. அவர் இப்போது என்ன திட்டத்தில் இருக்கிறார்? வாக்குகள் பிரித்து பாஜகவுக்கு உதவுகிறேன் என்று B-டீம் ஆக வந்திருக்கிறார் பழனிசாமி. கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நடகம் நடத்துகிறாரே, எங்கேயாவது, பாஜகவையோ மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை மறந்தாவது பேசுகிறாரா?

மண்புழுவாக ஊர்ந்து, பச்சோந்தியாக மாறி, பாஜகவுக்குப் பார்ட்னராக இருந்த பழனிசாமியால் தமிழகத்துக்குக் கிடைத்த நன்மை என்று ஏதாவது இருக்கிறதா? துரோகத்துக்கு உருவம் இருந்தால், அது பழனிசாமிதான் என்று உலகத்துக்கு காட்டியதைவிட வேறு என்ன செய்திருக்கிறார்? தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரின் முதுகிலும் குத்தியவர்தான், முதுகெலும்பு இல்லாத பழனிசாமி. பதவி வாங்கக் காரணமாக இருந்த சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்குத் துரோகம் செய்தார். பதவியைத் தொடரத் துணையாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்குத் துரோகம் செய்தார். இப்படி குழப்பங்கள் நிறைந்த துரோகக் கதைதான், பழனிசாமியின் கதை.

இப்போது பிரிந்து சென்றவர்கள் பாஜகவுடன் நேரடிக் கூட்டணியாகவும், பழனிசாமி கள்ளக் கூட்டணியாகவும் வந்திருக்கிறார்கள். இப்போது இதில் யாருக்கு யார் நண்பன்? யாருக்கு யார் எதிரி? யாருக்கு யார் துரோகி? இதற்கு பதில் என்ன தெரியுமா? இவர்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழகத்துக்கும் , தமிழக மக்களுக்கும் ஏன், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமே எதிரி மட்டுமல்ல, விரோதமான கூட்டணி. பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு, தமிழக எதிரிகளுக்கு அளிக்கும் வாக்கு.அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு, தமிழகத் துரோகிகளுக்கு அளிக்கும் வாக்கு. எனவே, தமிழகத்தை வஞ்சித்த பாஜக தமிழகத்தைப் பாழ்படுத்திய அதிமுக ஆகிய தமிழர் விரோதிகளை ஒருசேர வீழ்த்துங்கள்”, என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்