முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவு: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 98.
தமிழகத்தில் மூத்த திராவிட அரசியல் தலைவர்களில் ஆர்.எம்.வீரப்பன் முக்கியமானவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், அவரது அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர். அதேபோல், மறைந்த முதல்வர்களான ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவைகளிலும் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்.
தயாரிப்பாளராக ஆர்.எம்.வீரப்பன் பதித்த முத்திரை!: அரசியல் மட்டுமல்லாமல் திரையுலகிலும் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து முத்திரை பதித்தவர் ஆர்.எம்.வீரப்பன். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் கடந்த 1953-ம் ஆண்டு ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். இதற்கு ஆர்.எம்.வீரப்பன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளியான முதல் படம் ‘நாடோடி மன்னன்’. இந்நிறுவனம் சார்பில் ‘அடிமை பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டன.
» “எய்ம்ஸ் பற்றி கேட்டால் பழனிசாமிக்கு கோபம் வருகிறது. ஏனெனில்...” - உதயநிதி @ மேட்டூர்
» “அண்ணாமலை வெற்று வாக்குறுதிகளை அளிக்கிறார்” - கொமதேக ஈஸ்வரன் விமர்சனம்
தொடர்ந்து 1963-ல் எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் ‘சத்யா மூவீஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் ஆர்.எம்.வீரப்பன். பின்னர் எம்ஜிஆரை வைத்து, ‘தெய்வத் தாய்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘காவல்காரன்’, ‘ரிக்ஷாகாரன்’, ‘இதயக்கனி’ உட்பட பல படங்களை தனது சத்யா மூவீஸ் மூலம் தயாரித்தார்.
அதேபோல, எம்ஜிஆருக்குப் பின் ரஜினியின் தொடக்க காலக்கட்டத்தில் பல்வேறு படங்களை தயாரித்து வசூலை குவித்தது ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ் நிறுவனம். 1981-ல் வெளியான ரஜினியின் ‘ராணுவ வீரன்’ தொடங்கி, ‘மூன்று முகம்’, ‘தங்க மகன்’, ‘ஊர்க்காவலன்’, ‘பணக்காரன்’, ‘பாட்ஷா’ ஆகிய படங்களையும், கமலை வைத்து, ‘காக்கி சட்டை’, ‘காதல் பரிசு’ ஆகிய படங்களை தயாரித்தார். இதில் ‘பாட்ஷா’ படம் வெளியான சமயத்தில் தென்னிந்திய சினிமாவில் அதிகபட்ச வசூல் சாதனையை குவித்த படம் என்ற சாதனையை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆர்.எம்.வீரப்பனுக்கு முதல்வர் புகழஞ்சலி: “அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மிகம் என்று அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த ஆர்.எம்.வீரப்பன், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார். அவரது மறைவு, அரசியல் உலகுக்கு மட்டுமின்றி, அவர் இயங்கி வந்த திரையுலம், இலக்கியம், ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்துறைகளுக்கும் பேரிழப்பாகும். திராவிட இயக்கம் இருக்கும் வரை ஆர்.எம்.வீரப்பனின் புகழும் நிலைத்திருக்கும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“அண்ணன் ஆர்.எம். வீரப்பன், மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாகவும், தொடர்ந்து அவரது அமைச்சரவையில் அமைச்சராகவும்; அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் கட்சியின் இணைப் பொதுச் செயலாளராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார் .
இயக்குநர் அமீர் வீட்டில் சோதனை - மீண்டும் ஆஜராக நோட்டீஸ்: போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக இயக்குநர் அமீரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே, போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, இயக்குநர் அமீர் வீடு, அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கைதுக்கு எதிரான கேஜ்ரிவாலின் மனு தள்ளுபடி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தான் கைது செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால், அவருக்கு இந்த வழக்கில் நெருக்கடி அதிகரித்துள்ளது.
சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ: சென்னை தி.நகரில் நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரதமர் மோடி தாமரை சின்னத்தை பொதுமக்களிடம் காட்டியபடி பேரணியாக சென்று, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினார்.
ராமரை அவமதித்தது காங்கிரஸ்: பிரதமர் மோடி: அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணித்ததன் மூலம் ராமரை காங்கிரஸ் அவமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
“ராமரை வைத்து வியாபாரம் செய்பவர்கள் பாஜகவினர் ” - காங். தாக்கு: பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “ஜனவரி 22-ம் தேதி நடைபெற்ற அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா என்பது அரசியல் நிகழ்வாக மாற்றப்பட்டது. ஓர் அரசியல் நபருக்காக அந்த விழா நடத்தப்பட்டது. அவர்கள் ராமரை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள். ஆனால், நாங்கள் ராமரை பூஜிப்பவர்கள்" என்று பாஜகவை கடுமையாக தாக்கி உள்ளார்.
விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு: மக்களவைத் தேர்தலையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். பாஜக அரசை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு என்ற மையக் கருத்துடன் அந்த அறிக்கை அமைந்திருந்தது. மேலும், ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்; தலித் மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கித் திட்டம்; ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் உள்ளிட்ட அம்சங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.
அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு: ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அப்துல் அர்பத் என்பவர் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக முகமது அப்துல் அர்பத் காணாமல் போன நிலையில், அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஊழியர்களுக்காக வீடுகளை கட்டும் ஆப்பிள் நிறுவனம்: இந்தியாவில் இயங்கும் ஆப்பிள் நிறுவன தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்காக சுமார் 78,000 வீடுகளை கட்டும் திட்டத்தை ஆப்பிள் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி: “அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை வைத்திருக்கிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இந்தியாவின் இடங்களுக்குப் பெயர் வைப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது. நான் சீனாவைப் பார்த்துக் கேட்கிறேன்... நீங்கள் செய்வதைப் போல், நாங்களும் உங்கள் நாட்டின் பகுதிகளுக்கு பெயர் வைக்கலாமா? அவ்வாறு பெயர் வைப்பதால் அது எங்கள் நாட்டின் பகுதியாக ஆகிவிடுமா? இதுபோன்ற நடவடிக்கைகள் இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.” என சீனாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதனிடையே நரேந்திர மோடி ஆட்சியில் சீனாவால் ஓர் அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் சிஇஓ ராஜினாமா: பேடிஎம் பேமென்ட்ஸ் (Paytm Payments) வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சுரீந்தர் சாவ்லா ராஜினாமா செய்தார். சுரிந்தர் சாவ்லா பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க் லிட் நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சேர்ந்தார். இந்நிலையில், இந்த வங்கி இந்திய ரிசர்வ் வங்கியின் தடை நடவடிக்கைக்கு உள்ளானது. இதனால், பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கி கடும் நெருக்கடிகளைச் சந்தித்தது. இந்த பின்னணியில், தற்போது அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சுரீந்தர் சாவ்லா ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர் சொத்து விவரம்: உச்ச நீதிமன்ற புதிய வழிகாட்டுதல்: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய அசையும் சொத்துகளைப் பற்றிய தகவல்களை அளிக்கும்போது அவை பெரும் மதிப்பு கொண்டவையாக, ஆடம்பர வாழ்க்கை முறையைச் சார்ந்தவையாக இல்லாதபட்சத்தில் அவற்றைப் பட்டியலிடத் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்.11-ல் ரம்ஜான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு: தமிழகத்தில் ஏப்ரல் 11-ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார். ரமலான் மாதத்தின் முதல் பிறையின் அடிப்படையில் நோன்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதேபோல் ரமலான் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும். இந்நிலையில், இன்று பிறை எதுவும் தென்படாததால், நாளை மறுதினம் தமிழகத்தில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago