“அண்ணாமலை வெற்று வாக்குறுதிகளை அளிக்கிறார்” - கொமதேக ஈஸ்வரன் விமர்சனம்

By கி.பார்த்திபன்

நாமக்கல்: "பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரை வெற்று வாக்குறுதிகளை கூறுகிறார்" என நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: "நாடு முழுவதும் இண்டியா கூட்டணி வெற்றிக்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சமூக நீதி, சமூக நலன் சார்ந்து உள்ளது. சென்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையை கண்டு அதிமுக அமைதி இழந்தார்கள். அதைப்போல, இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வந்தவுடன் அவற்றை செயல்படுத்துவதற்கான சாத்தியமில்லை எனக்கூறி பாஜக எதிர் கருத்துக்களை தெரிவிக்கிறது.

பாஜகவை பொறுத்தவரை, தமிழகத்தில் தோற்றாலும் டெல்லியில் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் பெரிய நிறுவனங்களை, தொழிலதிபர்களை மிரட்டி வருகின்றனர். ஆனால், இண்டியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். தமிழக முதல்வர், 'யார் பிரதமர்' என்பதை உறுதி செய்வார். தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சர்கள் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது.

பாஜகவின் அண்ணாமலையை பொறுத்தவரை வெற்று வாக்குறுதிகளை கூறுகிறார். மத்தியில் பாஜக ஆட்சி இருந்த போதிலும் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான செயல்பாடுகளால் அதிமுகவின் தீவிர தொண்டர்கள் உதய சூரியனுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். அதிமுகவின் தொண்டர்கள் விரும்பாத காரணத்தால்தான் பாஜக கூட்டணியிலிருந்து இபிஎஸ் வெளியேறினார் என்று கட்சியினர் கூறுகின்றனர்.

தேர்தலுக்குப் பிறகு பாஜக-வை அதிமுக ஆதரிக்கும் என்ற நிலைப்பாடு உள்ளதால், அதிமுக தொண்டர்கள் கேள்வி கேட்கிறார்கள். தேசிய அளவில் வளர்ச்சி மற்றும் சமூக நீதியில் தமிழ்நாடு சிறப்பாக வளர்ந்துள்ளதற்கு அதிமுக மற்றும் திமுகவே காரணம். தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடும். பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று இபிஎஸ் இதுவரை கூறவில்லை. எனவே ஆதரிக்கிறார் என்று தான் அர்த்தம்.

இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும் போது டோல்கேட் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தமிழகத்தில் விசைத்தறி, ஜவுளி தொழில்கள் வீழ்ச்சிக்கு காரணம் பாஜகவின் கொள்கைதான். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாமக்கல் அதிமுக வேட்பாளர் உடல் நலம் பெற்று வர வாழ்த்துகள்" என்று பேசினார். அப்போது கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.பி.சின்ராஜ் எம்பி, கட்சி நிர்வாகிகள் துரை, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE