மதுரை: “சர்க்கரை என்று சொன்னால் இனிக்காது, வாயில் ஊட்டினால்தான் இனிக்கும் என்பது போல் திமுக பழைய ஒய்வூதிய திட்டத்தை நிறைவேற்றறுவதாக சொன்னால் மட்டும் போதாது, அதை நிறைவேற்றிக்காட்ட வேண்டும். ஆனால், தேர்தலுக்கு தேர்தல் பழைய ஒய்வூதிய திட்டத்தை சொல்லி அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றுகிறது.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இரவு மதுரை ‘ரிங்’ ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். இன்று (செவ்வாய்க் கிழமை) அதிகாலை 7.30 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் மதுரை அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து, தரைக்கடை வியாபாரிகள், மாநகராட்சி கடை வியாபாரிகளிடம் நடந்து சென்று ஆதரவு திரட்டினார்.
அப்போது வியாபாரிகளிடம், காய்கறி வாங்க வந்த பொது மக்களிடம் இன்றைய காய்கறி விலைகள் நிலவரம் கேட்டறிந்தார். அதேபோல் வியாபாரிகளிடம் காய்கறிகள் எங்கிருந்து வருகின்றன? லாபம் கிடைக்கிறதா? மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு தேவையான வசதிகள் என்ன? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை பழனிசாமி கேட்டார்.
» ‘திஹார் சிறை... ராஜ்பவன்...’ - கனிமொழிக்கு தமிழிசையின் கேள்வி
» சென்னை | இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை
அதற்கு அவர்கள், “மார்க்கெட்டை இதுவரை எந்த ஒரு அமைச்சரோ, எம்பி, மேயர், கவுன்சிலர்களோ எட்டிப் பார்க்கவில்லை. நீங்களாவது நேரடியாக வந்து எங்கள் குறையைக் கேட்டது மனநிறைவாக இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு எங்களை மறந்துவிடாமல் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தாருங்கள்.
காய்கறி வியாபாரம் முன்போல் இல்லை. தக்காளியை ஓசூர், கர்நாடகாவில் இருந்து கொண்டு வந்து விற்பதால் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்க வேண்டிய உள்ளது. இந்த விலைக்கு மக்கள் வாங்க மறுக்கிறார்கள். அதனால், வாங்கிய தக்காளியை இரண்டு நாளைக்கு மேல் வைத்திருக்க முடியவில்லை. அதற்குள் அழுகி நஷ்டம் ஏற்படுகிறது. காய்கறி வியாபாரம் பார்க்க முடியவில்லை. தெரிந்த தொழிலை விடவும் மனமில்லாமல் கந்து வட்டியில் சிக்கி அவர்களுக்கு சம்பாதிக்கவே இந்த தொழிலில் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.
முன்பு தரைக்கடை வாடகைக்கு 2,000 பேர் வியாபாரம் செய்தனர். ஆனால், எங்களில் 1,000 பேரை அப்புறப்படுத்திவிட்டனர். இப்போது எங்களையும் கடை கட்டித்தருகிறோம் என்று கூறி அப்புறப்படுத்தப் பார்க்கிறார்கள். அரசாங்கத்திடம் பேசி எங்களை இங்கேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்தினால்தான் மக்கள் முன்போல் காய்கறி வாங்க வருவார்கள். நாங்களும் சம்பாதிக்க முடியும்.
மார்க்கெட்டில் காய்கறி வாங்க வருவோர், வியாபாரிகள் வாகனங்களை நிறுத்த இடவசதியில்லை. ஆனால் மாநகராட்சி நுழைவுக் கட்டணம் மட்டும் வசூல் செய்கிறது. பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கழிப்பிட வசதியில்லை. குடிநீர் வசதியில்லை. அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் மாநகராட்சி வாடகையை மட்டும் வசூல் செய்கிறார்கள்” என்றனர்.
அதற்கு பழனிசாமி, “நீங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள், எல்லாம் இந்தத் தேர்தலுக்கு பிறகு சரியாகிவிடும், ’’ என்றார். 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகளை சந்தித்து அவர்கள் குறைகளையும், எதிர்பார்ப்புகளை கேட்டறிந்த அவர், அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பாவிடம் கூறி, தேர்தலுக்குப் பிறகு இந்த குறைகளைப் போக்க என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்” என்றார்.
பழனிசாமி, மார்க்கெட் வந்ததால் ஆயிரக்கணக்கான அதிமுகவினர், அதிகாலை 6 மணி முதலே கார்களில் திரண்டதால் மார்க்கெட்டின் இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
வியாபாரிகளை சந்தித்தப்பின் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாட்டுத்தாவணி காய்கறி, பழ மார்க்கெட்ட வியாபாரிகளை நேரில் சந்திக்க வந்தேன். அவர்கள் தங்களுடைய நீண்ட கால பிரச்சினைகள், கோரிக்கைகளை தெரிவித்தனர். அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.
அதிமுகவை பொறுத்தவரையில் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளோம். பிடித்தம் இல்லாமல் அகவிலைப்படி கொடுத்தோம். கடந்த 3 ஆண்டுகள் திமுக ஆட்சியில் ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி வழங்கும்போது 6 மாதம் தொகையைப் பிடித்தம் செய்து கொடுத்துள்ளார்கள். அரசு ஊழியர்ளுக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பழைய ஒய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தேர்தலில் வெற்றி பெற்றதும் மறந்துவிட்டார். இதுவரை பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை.
தற்போது மக்களவைத் தேர்தல் வந்துவிட்டதால் மீண்டும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படுவதாக வாக்குறுதி கொடுக்கிறார்கள். ஆனால், அரசு ஊழியர்கள், அரசை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
‘சர்க்கரை என்று சொன்னால் இனிக்காது, வாயில் ஊட்டினால்தான் இனிக்கும்’ என்பது போல் பழைய ஒய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக சொன்னால் மட்டும் போதாவது. அதை நிறைவேற்றிக் காட்ட வேண்டும். தேர்தலுக்கு தேர்தல் இந்த வாக்குறுதியை கூறி அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றுகிறது. இதுபோல்தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் வாக்குறுதி கொடுப்பதும், ஏமாற்றுவதும் திமுகவின் வாடிக்கையாகிவிட்டது.
பாமக எங்களால் எந்தப் பயனும் அனுபவிக்கவில்லை என்றால் எதற்கு மாறிமாறி எங்களுடன் கூட்டணி வைத்தார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் அன்புமணி ராமதாஸ் ஒரு நிலைப்பாடு கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகளே புகழக்கூடிய வகையில்தான் நாங்கள் ஆட்சி நடத்தினோம்.
திமுக கார்ப்பரேட் கம்பெனி போன்றது. குடும்ப ஆட்சிதான் நடத்துவார்கள். எங்கள் கட்சி மக்களுக்கானது, தொண்டர்களுக்கானது. மக்களுக்கான ஆட்சியைத்தான் நாங்கள் நடத்துவோம். ஸ்டாலின் பிரச்சாரத்தில் பொய் பேசுகிறார். நான், பிரச்சாரத்தில் கடந்த காலத்தில் அவர் கூறிய வாக்குறுதிகளை ஆதாரத்துடன் போட்டுக் காட்டிதான் பிரச்சாரம் செய்கிறேன். அவரால் அப்படிப் பேச முடியுமா?. அதிமுகவுக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அது இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தரும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago