12 மக்களவை தேர்தல்களிலும் பெரும்பான்மை வாக்குகளை பகிர்ந்து கொண்ட திராவிட கட்சிகள் கூட்டணி

By டி.ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் கடந்த 1977 முதல் 2019 வரை நடைபெற்ற 12 மக்களவை தேர்தல்களிலும் திமுக, அதிமுக என இரு திராவிட கட்சிகள் தலைமையிலான கூட்டணியே பெரும்பான்மை வாக்குகளை பகிர்ந்து கொண்டுள்ளன.

திமுக, அதிமுக என இரு கட்சிகள் தலைமையிலான கூட்டணிகளின் ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் கடந்த 1984-ம் ஆண்டு 96.91 சதவீதமாக இருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு வரை இந்த அளவை விட்டு வாக்கு சதவீதம் குறையவில்லை. 2014-ம் ஆண்டில் அதிமுக தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நிலையில், இரு கூட்டணிகளின் ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் 71.07 சதவீதமாக இருந்தது. ஆனால், கடந்த 1977 முதல் தற்போது வரை எப்போதுமே திமுக தனித்து போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1977 - 1991 காலகட்டம்: தமிழகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற மக்களவை தேர்தல் தொடர்பான ஆய்வில் 1977 முதல் 1991 வரை நடைபெற்ற தேர்தல்களில் இரு கட்சி கூட்டணிகளின் ஒட்டுமொத்த வாக்கு 90 சதவீதம் மற்றும் அதைவிட அதிகமாகவே இருந்து வந்துள்ளது. இதில் 1980-ம் ஆண்டைத் தவிர மற்ற தேர்தல்களில் அதிமுக காங்கிரஸ் கட்சியுடனேயே கூட்டணியில் இருந்தது.

1980-ல் அதிமுக ஜனதா கட்சி மற்றும் இரண்டு இடது சாரிகளுடனும், திமுக காங்கிரஸுடனும் கூட்டணி வைத்தது. மற்ற அனைத்து தருணங்களிலும், காங்கிரஸ் அல்லாத கூட்டணியையே திமுக அமைத்தது. ஜனதா கட்சி, ஜனதா தளம் மற்றும் இடது சாரிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனேயே கூட்டணியை திமுக அமைத்தது. 1977-ல் மட்டும் அதிமுக - காங்கிரஸ் அணியில் இணைந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட், மற்ற நேரங்களில் திமுக அணியிலேயே இடம்பெற்றிருந்தது.

புதிய வரவுகள்: 1989-ல் தேர்தல் அரசியலுக்கு பாமக வந்த பிறகு, திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளின் ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் கணிசமாக குறையத் தொடங்கியது. இன்னும் சொல்லப்போனால், 1996-ல், ஜெயலலிதாவுக்கு எதிரான அலை உச்சத்தில் இருந்தபோது, இரு கழகங்களின் ஒட்டுமொத்த கூட்டணி வாக்கு சதவீதம் 81-ஆக குறைந்தது. இதற்கு காரணம் மதிமுக தலைமையில் ஒரு கூட்டணி, பாமக மற்றும் பாஜக ஆகியவை தனித்தனியாக களம் கண்டன. இவை மொத்தமாக 15 சதவீத வாக்குளை ஈர்த்தன.

எனினும், 1998 மக்களவை தேர்தலில் 2 திராவிட கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. முந்தைய தோல்வியிலிருந்து மீட்சியடைந்து களத்துக்கு அதிமுக திரும்பிய நிலையில், அக்கட்சியின் கூட்டணி 30 இடங்களை பிடித்தது. ஆனால், அடுத்த 1999 தேர்தலில், மீண்டும் வாக்கு சதவீதம் குறைந்தது. இதற்கு காரணம், 1996 மற்றும் 1998-ம் ஆண்டு தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சி 1999-ல் தனியாக கூட்டணி அமைத்து பெற்ற 9.4 சதவீதம் வாக்குகளை ஈர்த்ததுதான்.

அதன்பின், தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு பெற்ற 10 சதவீதம் வாக்குகள், மீண்டும் திமுக, அதிமுக கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. அடுத்த 5 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற தேர்தலிலும் இந்த நிலை தொடர்ந்தது. இது இருபெரும் கட்சிகளின் வாக்கு சதவீதத்தை பாதித்தது. 2014-ம் ஆண்டு தேர்தலில், 39 தொகுதிகளில் 37-ஐ அதிமுக வென்றது. பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக இணைந்து உருவான 3-ம் அணியானது, 18 சதவீத வாக்குகளை பெற்றது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2019-ல் நடைபெற்ற தேர்தலில், 2 திராவிட கட்சிகளும் இதர வலிமையான கட்சிகளை தங்கள் கூட்டணிகளுக்குள் கொண்டு வந்தன. அப்போதும், ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் 90 சதவீதத்தை எட்டவில்லை. 84 சதவீதத்தை மட்டமே இருபெரும் கூட்டணிகளால் பெறமுடிந்தது. தனித்து போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக), மக்கள் நீதி மய்யம் (மநீம) மற்றும் நாம் தமிழர் கட்சி (நாதக) ஆகியவை மொத்தமாக 12.85 சதவீத வாக்குகளை கைப்பற்றியிருந்தன.

இந்த தேர்தலிலும் பாமக, தமாகா, அமமுக மற்றும் சில கட்சிகளை தன்வசப்படுத்தி புதிய கூட்டணியை அமைத்துள்ளது பாஜக. மநீம, திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கிறது. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்தே களம் காண்கிறது. இத்தகைய களசூழலில் 2024 மக்களவைத் தேர்தலில் யார் எவ்வளவு வாக்குகளை பெறப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE