இந்திய - சீன எல்லை விவகாரத்தை திசைதிருப்ப கச்சத்தீவு பிரச்சினையை கிளப்பும் பாஜக: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியா- சீனா எல்லையில் உள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கத் தொடங்கியதும் கச்சத்தீவு பிரச்சினையை பேசி பாஜக திசை திருப்புகிறது என கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு நேற்று காலை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தபோது, அதிமுகஎம்.பி.க்கள் ஆதரித்து வாக்களித்தது ஏன் என்பதற்கு முதலில் அவர்கள் பதில் அளிக்க வேண்டும். திமுக எம்.பி.க்கள் 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் மவுனமாக இருந்தார்கள் என்று அண்ணாமலை கூறுகிறார். மவுனமாக இருந்தோம் என்றால், எதற்காக எங்களை சஸ்பெண்ட் செய்தனர். எங்களை மட்டுமல்ல, எல்லா எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் சஸ்பெண்ட் செய்தனர்.

எங்களை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கோ, விவாதங்கள் செய்வதற்கோ, பாஜக அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளை பேசி வந்தோம். இதனால் பாஜக எங்களை அடிக்கடி சஸ்பெண்ட் செய்து வந்தது.

10 ஆண்டுகள் அமைதி: கச்சத்தீவு பிரச்சனையில் திமுக அமைதியாக இல்லை. முதல்வர் அந்தப் பிரச்சினைக்கு மிகத் தெளிவாக பதில் கூறி இருக்கிறார். பாஜக அரசு 10 ஆண்டுகள் அமைதியாக இருந்தனர். நாங்கள் நாடாளுமன்றத்தில் பலமுறை கச்சத்தீவு பிரச்சனை குறித்து கேள்விகள் எழுப்பி இருக்கிறோம். அதற்கு அவர்கள் பதில் கூறியதே கிடையாது. பிரதமர் நரேந்திரமோடியும் பேசவில்லை. மற்ற அமைச்சர்களும் பேசவில்லை.

பிரதமர் பலமுறை இலங்கைக்கு போய் வந்திருக்கிறார். அப்போது கூட அந்த நாட்டு அரசிடம், அதுகுறித்து பேசவில்லை. இப்போது தேர்தல் வந்ததும், அதுவும் இந்தியா- சீனா எல்லையில் உள்ள பிரச்சினைகளை எல்லாம் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கத் தொடங்கியதும், அதை திசை திருப்புவதற்காக கச்சத்தீவு பிரச்சினை பற்றி பேசுகிறார்கள். இதில் மக்களுக்கான நன்மை செய்யும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE