அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது: வைகைச்செல்வன் நம்பிக்கை

By எஸ்.கல்யாணசுந்தரம்

திருச்சி: அதிமுக இலக்கிய அணி செயலாளரும் செய்தித் தொடர்பு செயலாளருமான, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தற்போதைய தேர்தல் நிலவரம் குறித்து திருச்சியில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

அதிமுக - பாஜக இடையே கள்ளஉறவு என முதல்வர் கூறுகிறார். அப்படி ஒரு நிலை அதிமுகவுக்கு இல்லை. இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை வாக்காளர்கள் அளிப்பார்கள்.அதைப் பயன்படுத்தி நாட்டின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் அதிமுக இருக்கும். அப்போது, காவிரி பிரச்சினை, நீட் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க முன்வருபவர்களை ஆதரிப்போம்.

நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ்தான். தற்போது அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்கின்றனர். இந்த இரட்டைநிலைப்பாட்டை கண்டிக்கிறோம். திமுக உள்ள கூட்டணியில் கண்டிப்பாக அதிமுக இடம்பெறாது.

வெள்ளத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது இங்கு வராதபிரதமர், தற்போது வாக்கு அரசியலுக்காக அடிக்கடி வருகிறார்.மோடியின் உத்தரவாதத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் பெற்ற திட்டங்கள், ஏற்றங்கள் என்பதை சிந்தித்துப் பார்த்தால் வேதனைதான்.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது தமிழகத்தின் நலனைஅதிமுக விட்டுக் கொடுத்ததே இல்லை. நீட் விலக்கு, காவிரி பிரச்சினை, மாநிலங்களுக்கான நிதிஉள்ளிட்ட மாநில உரிமை தொடர்பான பல்வேறு விஷயங்களில் பாஜகவுடன் மோதல் போக்கை அதிமுக கையாண்டது.

அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புபிரகாசமாக உள்ளது. தொடக்கத்தில் கொஞ்சம் மந்தமாக இருந்தது, போகப் போக சூடுபிடிக்கத் தொடங்கி, எங்களது வெற்றி தெளிவாகிவிட்டது. இந்த முறைநடுநிலையாளர்கள், சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தரும்.டெல்லி அரசியலில் அதிமுக புதிய சரித்திரம் படைக்கும்.

எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாமல் அதிமுக இல்லை. எம்ஜிஆர்தான் இந்த கட்சிக்கு வித்து, விதை, உரம். ஜெயலலிதா 50 ஆண்டுகால அதிமுக அரசியலை எழுதியவர். இவர்களை தவிர்த்து விட்டு இங்கு அரசியல் செய்ய முடியாது. இந்த இருபெரும் தலைவர்களுடைய கட்டுமானத்தில்தான் தற்போது பொதுச் செயலாளர் பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.

ஒவ்வொரு தொகுதிக்கும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ,எம்.பி.க்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்களப்பணியாற்றி வருகின்றனர். நட்சத்திர பேச்சாளர்கள் பல இடங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE