சு.வெங்கடேசனுக்கு மேலூர் விவசாயிகள் எதிர்ப்பு: எங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள் என கேள்வி

By செய்திப்பிரிவு

மதுரை: மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் பிரச்சாரம் செய்தபோது குறுக்கிட்ட விவசாயிகள், ‘5 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள்?’ என கேள்வி எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பிசு.வெங்கடேசன் திமுக கூட்டணியில் மீண்டும் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். அண்மையில் மேலூர் அருகே வெள்ளலூர் பகுதியில் சு.வெங்கடேசன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவருடன் அமைச்சர் பி.மூர்த்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் சென்றனர்.

அப்போது, சு.வெங்கடேசனிடம் அங்கிருந்த விவசாயிகள் சிலர், ‘‘5 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள்?’’ என கேள்வி எழுப்பினர். மேலும், ‘‘முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுத்தீர்களா? எங்கள் ஊரின் சாலை, நடந்துவர முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. இதற்குப் பதில் சொல்லுங்கள்’’ எனக் கேட்டனர்.

விவசாயிகளின் இந்த திடீர்கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் சு.வெங்கடேசன் தவித்தார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து சு.வெங்கடேசனிடம் கேட்டபோது, ‘‘எனது பிரச்சாரத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பாஜகவினர் செயல்படுகின்றனர். கேள்வி கேட்ட 3 பேரும் பாஜகவினர். உங்களது கிராமங்களில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தி பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளோம். அப்போது நீங்கள் எங்கு போனீர்கள்? என கேட்டதற்கு, அவர்கள் நாங்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றனர்.

அவர்களிடம் அமைச்சர் மூர்த்தி,பேச்சுவார்த்தை நடத்தி சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தருவதாக உறுதி அளித்தார். பின்னர் நாங்கள் பிரச்சாரத்தை தொடர்ந்தோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE