வாக்கு பதிவு நடைபெறும் ஏப்.19-ல் கோயம்பேடு காய்கறி, பழ சந்தைகளுக்கு விடுமுறை

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.19-ம் தேதி கோயம்பேடு காய்கறி மற்றும் பழ சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் மலர், காய், கனி, உணவு தானிய சந்தை வளாகங்கள் இயங்கி வருகின்றன.

அவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுமை தூக்குதல், தள்ளு வண்டி இயக்குதல், கடைகளில் கணக்குகளை எழுதுவது, கனரக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களும் வாக்களிக்க ஏதுவாக, வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.19-ம்தேதி கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை விடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோயம்பேடு வணிக வளாக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் கூறும்போது, கோயம்பேடு சந்தை பணியாளர்களும் எவ்வித தடையும் இன்றி வாக்களிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.19-ம் தேதி காய்கறி மற்றும் உணவு தானிய வளாகம் ஆகியவற்றுக்கு முழு விடுமுறை விடப்படுகிறது என்றார்.

பழ சந்தைக்கு முதல் முறையாக.. சென்னை பழக் கமிஷன் ஏஜெண்டுகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சீனிவாசன் கூறும்போது, காய்கறி மற்றும் உணவு தானியகடைகள் தேர்தல் நாளன்று விடுமுறை விட்டுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து பழ வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக பழ சந்தைக்கும் விடுமுறை அறிவித்திருக்கிறோம்.

பழ சந்தைக்கு இதுவரை எப்போதும் விடுமுறை விட்டதில்லை. பொங்கல் தினத்தன்று கூட இயங்கும். முதல்முறையாக விடுமுறை விட்டிருக்கிறோம் என்றார்.

இந்நிலையில், மலர் சந்தை 19-ம்தேதி வழக்கம் போல் இயங்கும். கடைகளுக்கு விடுமுறை இல்லை என்று பூ வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE