திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - பிரச்சார நேரத்தை குறைத்துக்கொண்ட வேட்பாளர்கள்

By பி.டி.ரவிச்சந்திரன்


திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பிரச்சார நேரத்தைக் குறைத்துக் கொண்டுள்ளனர்.

திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட், எஸ்டிபிஐ, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் 11 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் கிராமம் கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினர். காலை 7 மணிக்கு பிரச்சாரத்தைத் தொடங்கி நண்பகல் 12 மணி வரையும், மாலையில் 4 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கி இரவு 10 மணி வரையும் பிரச்சாரம் செய்தனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக 102 டிகிரி பாரன் ஹீட் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதனால், வெளியே மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. வழக்கமாக காலை 7 மணிக்கு பிரச்சாரத்தைத் தொடங்கும் வேட்பாளர்கள், பகல் 10.30 மணியுடன் தங்களது பிரச்சாரத்தை முடித்துக் கொள்கின்றனர். அதேபோல், மாலையில் 4 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கியவர்கள் வெயிலின் தாக்கம் குறையும் வரை காத்திருந்து மாலை 5 மணிக்கு மேல் வெளியே செல்கின்றனர்.

அதேநேரம், வேட்பாளர்கள், நிர்வாகிகள் திறந்த வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனால் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனர். தற்போது, இதிலிருந்து தப்பிக்க அனைத்து வேட்பாளர்களும் தங்கள் வாகனங்களில் மேற்கூரை அமைத்துள்ளனர். தொடர்ந்து, இன்னும் 10 நாட்களுக்கு 100 டிகிரி பாரன் ஹீட்டுக்கு மேல் வெப்ப நிலை இருக்கும், என வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

இதனால், வேட்பாளர்கள் பிரச்சார நேரத்தை வெயிலின் தாக்கம் காரணமாக குறைத்துக் கொண்டதால் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள கிராமங்கள் அனைத்துக்கும் சென்று பிரச்சாரம் செய்ய போதிய நாட்கள் இல்லை என வருத்தம் அடைந்துள்ளனர். மேலும், பிரச்சாரத்தை முடிந்தவரை சுருக்கமாக முடித்துக் கொண்டு ஒவ்வொரு கிராமமாக வேட்பாளர்கள் பறக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE