கோயில் திருவிழாவை நிறுத்த முயன்ற அதிகாரிகள் - கோவில்பட்டியில் கட்சியினர் எதிர்ப்பால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் ஏப்.5-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 5-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

திருவிழாவை காண வரும் மக்களுக்கு பொழுது போக்கு அம்சமான ராட்டினம் அமைக்க ரூ.54.10 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டு, ராட்டினங்கள் பொருத்தும் பணி முடிந்தது. கொடியேற்ற தினத்தன்று தடையில்லா சான்று பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ராட்டினம் இயக்கப்பட வில்லை. மறுநாள் 6-ம் தேதி இரவு 8.45 மணிக்கு மேல் தடையில்லா சான்றுகிடைத்து ராட்டினங்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால் ராட்டினங்கள் இயக்கக்கூடாது.

கோயில் திருவிழா சப்பரங்கள் ரத வீதிகளில் சுற்றிவரக் கூடாது என தனி நபர் ஒருவர் புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, கோயில் பின்புறம் ராட்டினங்கள் அமைக்கப்பட்ட பகுதிக்கு மக்கள் செல்லாதவாறு போலீஸார் தடை ஏற்படுத்தினர். இதையறிந்த திமுக நகரச் செயலாளர் கா.கருணாநிதி, மதிமுக செயலாளர் எஸ்.பால்ராஜ், மார்க்சிஸ்ட் நகர செயலாளர் கே.சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் அ.சரோஜா மற்றும் கட்சியினர், மண்டகப்படிதாரர்கள் திரண்டனர்.

அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரி, தேர்தல் விதிமுறைகளை மீறி ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை நிறுத்த வேண்டும் என்றார். அதற்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாரம்பரியமாக நடந்து வரும் திருவிழாவை யாரும் தடுக்க முடியாது. வழக்குப் பதிவு செய்வதென்றால் செய்துகொள்ளுங்கள் என கட்சியினர் கூறியதை தொடர்ந்து, தோதல் பறக்கும் படையினர் அங்கிருந்து புறப்பட்டனர். தொடர்ந்து ராட்டினங்கள் இயங்க தொடங்கின. மண்டகப்படிதாரரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு நிலவியது.

ரத்தத்தோடு கலந்த விழா: இது குறித்து கே.சீனிவாசன் கூறும்போது, ‘‘செண்பகவல்லி அம்மன் கோவில்பட்டி மக்களின் குலதெய்வம். கோவில்பட்டி தேர் திருவிழா தொன்மையான திருவிழா. இது கோவில்பட்டி மக்களின் ரத்தத்தோடு கலந்தது. தற்போது தேர்தல் காலத்தில் இந்த திருவிழா நடைபெறுகிறது. 7-ம் தேதி இரவு அங்கு சென்ற காவல்துறையினர் ராட்டினம் இயக்கத்தை தடுத்து நிறுத்தி மின் விளக்குகளை அணைக்க செய்து, மண்டகப்படி கலை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி இருக்கின்றனர்.

தேர் திருவிழாவை நிறுத்தும் நடவடிக்கைகளில் காவல்துறையும், அரசு அதிகாரிகளும் இறங்கி உள்ளனர். வரும் 13-ம் தேதி தேர் திருவிழா கண்டிப்பாக அனைத்து மக்களின் ஒத்துழைப்போடு நடைபெற்றே தீரும்’’ என்றார்

ஏற்க முடியாது: சமூக ஆர்வலரும், முன்னாள் ராணுவ வீரருமான அ.ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி கூறும்போது, “ சட்ட விதிமுறை மீறல்கள் இருப்பதாக தெரிந்தால் கோட்டாட்சியர் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

வழக்கமாக பங்குனி பெருந்திருவிழா நடைபெறுவது தொடர்பாக கோயில் செயல் அலுவலர் மனு வழங்கியவுடன், அனைத்து அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கோயிலில் இருந்து எந்த வித மனுவும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படவில்லை. இதனால் கூட்டமும் நடைபெறவில்லை. இதன் விளைவு திருவிழா தொடங்கிய நாள் முதல் முடியும் வரை கோயில் அருகே நிறுத்தப்படும் தீயணைப்பு வாகனம், மருத்துவக்குழு ஆகியவை பணியில் இல்லை. இதற்கு அறநிலையத் துறை நிர்வாகமே முழுக்காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE