அடையாறு வங்கியில் துப்பாக்கி முனையில் பணம் கொள்ளையடித்த பிஹார் கொள்ளையன், தன்னிடம் 4 துப்பாக்கிகள் உள்ளதாக போலீஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். துப்பாக்கி கடத்தல் கும்பலுடன் அவனுக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொள்ளையனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள இந்தியன் வங்கியில் நேற்று முன்தினம் மதியம் 1.25 மணிக்கு புகுந்த நபர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ.6 லட்சத்து 37 ஆயிரத்தை கொள்ளையடித்துக் கொண்டு பைக்கில் தப்பினான். விரட்டிச் சென்று பிடிக்க முடியன்ற பொதுமக்கள் மீது 2 முறை துப்பாக்கியால் சுட்டான். இருப்பினும் வங்கி வாடிக்கையாளர் மோகன்ராஜ், மாண வர் ஜெய்சந்த் ஆகியோர் வங்கிக் கொள்ளையனை விரட்டிப் பிடித்தனர். போக்குவரத்து போலீஸாரும் விரைந்து செயல்பட்டு கொள்ளையனை சுற்றிவளைக்க உதவினர். கொள்ளையனை கைது செய்த போலீஸார், நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
கார் ஓட்டுநர் வேலை
கொள்ளையன் பிஹாரைச் சேர்ந்த மனிஷ் குமார் (21) என்பது விசாரணையில் தெரியவந்தது. விசாரணையின்போது போலீஸாரிடம் மனிஷ் குமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரயிலில் சென்னை வந்தேன். கேளம்பாக்கம் பாலு முதலியார் தெருவில் பிஹாரைச் சேர்ந்த 2 பேர் அறை எடுத்து தங்கி இருந்தனர். அவர்களுடன் நானும் தங்கிக் கொண்டேன். எனக்கு கார் ஓட்டத் தெரியும். எனவே, கடந்த 4 ஆண்டுகளாக தனியார் ஒருவரிடம் கார் ஓட்டி வந்தேன். எப்போது ஓய்வு கிடைத்தாலும் தனியாகவே சுற்றித் திரிவேன். எனது நடவடிக்கை சரியில்லாததால் ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கிவிட்டனர்.
பின்னர், மந்தைவெளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் கெஞ்சி வேலையில் சேர்ந்தேன். அவரது நிறுவனம் தயாரிக்கும் ஐஸ்கிரீமை மெரினா கடற்கரையில் விற்று வந்தேன். பெரும்பாலான நேரங்களில் மந்தைவெளியில் உள்ள ஐஸ்கிரீம் குடோனிலேயே படுத்து தூங்குவேன்.
சொந்த மாநிலத்திலும் வேலை இல்லை. வந்த இடத்திலும் அடிமைபோல் சாதாரண சம்பளத்தில் வேலை. எத்தனை நாள்தான் இப்படி கஷ்டப்படுவது. எப்படியாவது விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பிஹாரில் உள்ள எனது வீட்டில் 4 துப்பாக்கி உள்ளது. 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றிருந்தபோது, 2 துப்பாக்கிகளை எடுத்து வந்தேன்.
கொள்ளை திட்டம்
நான் தங்கியிருந்த அறை அருகே துப்பாக்கியை மண்ணில் புதைத்து வைத்தேன். எளிதாக பணம் பறிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் வங்கியில் கொள்ளையடிக்கும் ஐடியா வந்தது. அங்குதான் அதிக பணப் புழக்கம் உள்ளது என்பதை தெரிந்துகொண்டேன்.
அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், கேளம்பாக்கம் என பல இடங்களில் சுற்றித் திரிந்து வங்கிகளை நோட்டமிட்டேன். இறுதியாக இந்திரா நகரில் உள்ள இந்தியன் வங்கியை தேர்ந்தெடுத்தேன். மதிய நேரத்தில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதால் 2 துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு வங்கிக்குள் சென்றேன். பணத்தை கொள்ளையடித்ததும் சொந்த ஊருக்கு தப்பிச் சென்று சொகுசு வீடு கட்டி செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், பொதுமக்களும் போலீஸாரும் விரட்டிப் பிடித்து விட்டனர்.
இவ்வாறு மனிஷ்குமார் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, மனிஷ் குமார் தங்கியிருந்த வீடு முழுவதும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அவரது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், பதிவாகியுள்ள எண்களை வைத்து அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொள்ளை தொடர்பாக இன்னும் சில தகவல்களை சேகரிக்க வேண்டியுள்ளதால் மனிஷ்குமாரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். தேவைப்பட்டால் அவரை பிஹார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மனிஷ் குமார் தன்னிடம் 4 துப்பாக்கிகள் உள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளதால் அவருக்கும் துப்பாக்கி கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் ரகசிய விசாரணை நடந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago