சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயிலில் கொண்டு சென்ற ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை

By செய்திப்பிரிவு

சென்னை/ திருநெல்வேலி: சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல், உறவினர் வீடுகளில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரகசிய தகவலின் பேரில், தாம்பரம் போலீஸாரும், பறக்கும் படை அதிகாரிகளும் நேற்று முன்தினம் இரவு தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்த எழும்பூர் – நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர்.

ஏ.சி. பெட்டியில் பயணம் செய்த சென்னை கொளத்தூர் திருவிக நகரை சேர்ந்த சதீஷ் (33), அவரது தம்பி நவீன் (31), தூத்துக்குடி மாவட்டம் ச்ர்வைகுண்டத்தை சேர்ந்த பெருமாள் (25) ஆகிய 3 பேர் கொண்டுவந்த பைகளை போலீஸார் சோதனை செய்தபோது, அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்கள் 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

முதல் தகவல் அறிக்கை: இயந்திரம் மூலம் பணம் எண்ணப்பட்டது. அதில் ரூ.3,98,91,500 இருந்தது. பாஜக உறுப்பினர் அடையாள அட்டைமற்றும் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ அடையாள அட்டை நகல் வைத்திருந்த சதீஷிடம் விசாரித்தபோது, ‘‘சென்னை புரசைவாக்கத்தில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் வேலை செய்கிறேன். ஜெய்சங்கர் என்பவர் இந்த பணத்தை கொடுத்து அனுப்பினார். என்னுடன் வந்திருக்கும் பெருமாள், திருவல்லிக்கேணியில் உள்ள ஓட்டலில் இருந்து ஆசைத்தம்பி என்பவர் கொடுத்து அனுப்பிய பணத்துடன் வந்துள்ளார். நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க எங்களிடம் பணம் கொடுத்து அனுப்பப்பட்டது’’ என்று அவர் கூறியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ரூ.3.98 கோடி பணம் தாம்பரம் சார்நிலை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 10 நாட்களுக்கு நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட சதீஷ், நவீன், பெருமாள்

இதற்கிடையே, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான விடுதி, சாலிகிராமத்தில் உள்ள அவரது உறவினர் முருகன் வீடு ஆகிய இடங்களில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். திருநெல்வேலி மேலப்பாளையம் அடுத்த குறிச்சி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனை மேலாளரும், பாஜக ஆதரவாளருமான கணேஷ்மணி வீட்டிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

அங்கு உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், 100 வேட்டிகள், 44 நைட்டிகள், 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக திருநெல்வேலி தொகுதி பொது பார்வையாளர் சோனாலி பொன்ஷே வயங்கங்கரிடம் திருநெல்வேலி மாநகர திமுக வழக்கறிஞர் அணி தலைவர் ஜாகிர் உசேன் புகார் கொடுத்துள்ளார். அதில், ‘நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவதற்காக முறைகேடு செய்து வருகிறார். வாக்காளர்களுக்கு கொடுக்க அதிக அளவில் பணத்தை செலவிடுகிறார். வேட்பாளர் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

வருமான வரித் துறையிடம்.. இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டால் வருமான வரித் துறையிடம் அந்த பணம் ஒப்படைக்கப்படும். அதன்படி, கைப்பற்றப்பட்ட ரூ.3.98 கோடி, வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

‘எனது பணம் இல்லை’

திருநெல்வேலி ராதாபுரம் பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் பணத்துக்கு நான் பொறுப்பாக முடியாது. எனக்கு வேண்டப்பட்டவர்கள் திமுகவிலும் உள்ளனர். பணத்தை அவர்கள் தொழிலுக்காக கொண்டு சென்றிருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியவில்லை. எனக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் எங்கும் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. என்னை குறிவைக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. திருநெல்வேலி தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்