முக்கிய தலைவர்கள் முகாம் - எப்படி இருக்கிறது வடசென்னை மக்களவை தொகுதி?

By செய்திப்பிரிவு

சென்னை: வட சென்னை மக்களவைத் தொகுதியில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சீமான் என முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வட சென்னை மக்களவைத் தொகுதியில் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர் ஆகிய 6 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

தொழிலாளர்கள் நிறைந்த பகுதி: இத்தொகுதியில் மணலி, கொடுங்கையூர் உள்ளிட்ட தொழிற்பேட்டைகள், தமிழகத்தின் மிகப் பெரிய புளியந் தோப்பு இறைச்சிக் கூடம், எம்எஸ்எம்இ நிறுவனங்கள், ரயில்வே இணைப்பு பெட்டி தொழிற்சாலை உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால் வட சென்னை தொழிலாளர்கள் நிறைந்த தொகுதியாக உள்ளது. இந்நிலையில், இங்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். இதனால், தேர்தல் களம் சூடுபறக்கத் தொடங்கிவிட்டது.

திமுக வேட்பாளர் கலாநிதி: கடந்த முறை எம்.பி., ஆளுங்கட்சியின் வேட்பாளர் என்னும் துடிப்புடன் கலாநிதி வீராசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 2-ம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து நேற்றைய தினமும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்றும் ( 7-ம் தேதி ), முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரும் 15-ம் தேதியும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். வேட்பாளருக்கும், உள்கட்சி மூத்த தலைவருக்கும் சிறு சிறு உரசல்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையிலும், இந்த முறையும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் முழுவீச்சில் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிமுக வேட்பாளர் மனோ: அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, கடந்த சில நாட்களாக வீடு வீடாகச் சென்றும், வாகன பிரச்சாரத்திலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு சாதனைகள், வட சென்னை தொகுதியில் உள்ள நீண்டகாலப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான 30 வாக்குறுதிகளை முன்நிறுத்தி வாக்கு சேகரித்து வருகிறார்.

பாஜக வேட்பாளர் பால் கனகராஜ்: பாஜக சார்பில் போட்டியிடும் பால்கனகராஜ் நேற்று திரு.வி.க.நகர் சட்டப்பேரவை தொகுதிக்குஉட்பட்ட ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்றுதெருத் தெருவாக சென்று வாகனபிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகும், எங்கள் பிரதமர் வேட்பாளர் மோடி என்கிறோம். ‘இண்டியா’ கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. இண்டியா கூட்டணியில் தொலை நோக்கு பார்வையே இல்லை. நாட்டை சூறையாடுவதுதான் அவர்களின் தொலை நோக்குப் பார்வையாக இருக்கும்.

திமுக தலைவர்கள் சனாதன தர்மத்தை எதிர்த்து வருகின்றனர். ஜனநாயகம் பாதுகாப்போம் என்று குரல் கொடுக்கும் காங்கிரஸ், அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை எரித்த திமுகவிடமிருந்து ஜனநாயகத்தை எப்படி பாதுகாக்க முடியும். வளர்ச்சி அடைந்த பாரதத்தை காண விரும்பும் மக்கள், பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நாம் தமிழர் வேட்பாளர் அமுதினி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அமுதினி, திறந்தவெளி வாகனத்திலும், துண்டு பிரசுரம் வழங்கியும் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரும், கட்சி நிர்வாகிகளும்மக்களைக் குழுக்களாக சந்தித்து, மத்திய, மாநில அரசுகளின் குறைகளைச் சுட்டிக் காட்டி பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 5-ம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். வடசென்னை தொகுதியில் முக்கிய தலைவர்களின் பிரச்சாரத்தால் தேர்தல் களம் சூடுபறக்கத் தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE